Published:Updated:

தோல்வியில் முடிந்த ஐ.நா-வின் போர் நிறுத்த முடிவு... ஒத்துழைக்காத உலக நாடுகள்!

கொரோனா உலக நாடுகள்
கொரோனா உலக நாடுகள்

கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள உலகம் தழுவிய போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என ஐ.நா கேட்டுக் கொண்டிருந்தும் பலனில்லை.

கொரோனா நெருக்கடி உலகை ஆட்டுவித்துக் கொண்டிருந்தாலும் அசாத்தியமான பல விஷயங்களை சாத்தியப்படுத்தியிருக்கிறது. அதிகாரப் போட்டிக்காக அடித்துக்கொள்ளும் சூப்பர் பவர் நாடுகள் கொரோனாவை எதிர்கொள்ள தற்காலிகமாக இணைந்திருக்கின்றன. உலக வல்லரசான அமெரிக்காவின் முகத்திரை கிழிந்திருக்கிறது. ஆனாலும் பல ஆண்டுகளாக, உலகின் சில தேசங்களில் பொழிந்துகொண்டிருந்த குண்டு மழைகள் நிரந்தரமாக நிறுத்தப்படவில்லை. கொரோனா அதற்கான வாய்ப்பினை வழங்கியும் அது மட்டும் சாத்தியப்படவில்லை.

கொரோனா நெருக்கடி மிகத் தீவிரமாக பரவத் தொடங்கியதுமே 'உலகம் தழுவிய போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும்' என ஐ.நா கேட்டுக் கொண்டது. போர் நிறுத்தக் காலத்தை அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பயன்படுத்தி போரை முடிவுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட நாடுகள் முயல வேண்டும் எனவும் ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா
ஐ.நா

சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில், உள்நாட்டுப் போரால் மருத்துவக் கட்டமைப்புகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டு இருந்தன. இன்றளவும் அந்நாட்டு மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டிற்குள்ளே இடம்பெயர்ந்தும், மற்ற நாடுகளில் அகதிகளாகவும் வசித்து வருகின்றனர். மிகவும் மோசமான சுகாதார வசதிகள் உள்ள இந்த நாடுகளில் கொரோனா தொற்று அதிகமானால் பாதிப்புகள் மிகவும் மோசமாக இருக்கும் என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டியே ஐ.நா இவ்வாறு அறிவித்தது. ஐ.நா-வின் இந்தக் கருத்தை ஆதரித்து பல முக்கிய உலகத் தலைவர்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கருத்து தெரிவித்தனர்.

பல நாடுகளில், பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிக்கொண்டிருக்கும் பல்வேறு குழுக்கள் இதற்கு செவிமடுத்தன. ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் உலகம் முழுவதும் சுமார் 15 ஆயுத குழுக்கள், தற்காலிகமாக அவர்களின் தாக்குதலைகளை நிறுத்துவதாகவும், தத்தம் நாட்டின் அரசுகளோடு அமைதிப் பேச்சு வார்த்தைக்குத் தயார் எனவும் அறிவித்தன. கொலம்பியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் ஆயுதப் புரட்சியாளர்கள், அவர்களின் சுமார் ஐம்பதாண்டுக்கால ஆயுதப் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தனர்.

பல ஆண்டுகளாக அமைதியற்று இருக்கும் இந்த தேசங்களில், உயிர்பலி வாங்கிக்கொண்டிருக்கும் போர்கள் முடிவுக்கு வருவதற்கான தொடக்கமாக இது பார்க்கப்பட்டது. ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடித்திருக்கவில்லை. பிலிப்பைன்ஸ், கொலம்பியா ஆகிய இரு நாடுகளிலும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க போவதில்லை என அறிவித்தன ஆயுதக் குழுக்கள்.

உள்நாட்டுப் போர்
உள்நாட்டுப் போர்

அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என அவர்கள் தரப்பில் வாதிக்கப்பட்டது. அரசோ, ஆயுதப் படைகள் சரியாக போர் நிறுத்தத்தைக் கையாளவில்லை என்பது உட்பட காரணங்களை அடுக்கியது. உண்மை எதுவானாலும் விடை ஒன்றுதான்: அந்நாடுகளில் அமைதி நிலைக்கவில்லை. ஐ.நா இன்னும் சற்று விரைந்து செயல்பட்டிருந்தால் அது சாத்தியப்பட்டிருக்கலாம்.

தெற்கு சூடான், உலகின் மிக வயது குறைந்த நாடு. பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு தனி நாடாகப் பரிணமித்திருக்கும் இங்குள்ள உள்நாட்டு ஆயுதக் குழுக்கள் கூட, இரண்டு வாரங்கள் தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவித்தன. வாழும் 12 மில்லியன் மக்களுக்கு நான்கு வென்டிலேட்டர்கள் மட்டுமே இருக்கும் மிக மோசமான மருத்துவக் கட்டமைப்பு உள்ள சூடானிற்கு இந்தப் போர் நிறுத்தமும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பும் மிகவும் அவசியமானதாக இருந்தது. அரசு, ஆயுதக் குழு என இரு தரப்பும் அதற்குத் தயாராகத்தான் இருந்தது, ஆனால் இடையில் மத்தியஸ்தம் செய்யவேண்டிய ஐ.நா விரைந்து செயல்படவில்லை. விளைவு, அங்கு மீண்டும் ஆயுதச் சத்தம் கேட்கத் தொடங்கியிருக்கிறது.

ஏமன்: போர் தொடங்கி ஆறு ஆண்டுகளான நிலையில், முதல்முறையாக போர் நிறுத்தத்தைச் சந்தித்தது இந்நாடு. உள்நாட்டுப் போரால் உருக்குலைந்து போயிருக்கும் இந்நாட்டில் தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதும் அமைதிக்கான மிகப்பெரும் வாய்ப்பாக அது பார்க்கப்பட்டது. சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியும், ஹௌதி புரட்சியாளர்களும் தற்காலிகப் போர் நிறுத்தத்தை அங்கு ஒப்புக் கொண்டனர். இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்காக ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு தருவதற்கு ஒப்புதல் அளித்தன. ஆனால், தற்போது மீண்டும் அங்கு போர் தொடங்கியுள்ளது.

உலகம் கொரோனாவுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஏமன், வைரஸுடன் சேர்த்து மனிதர்களின் போராலும் வதைபட்டுக் கொண்டிருக்கிறது. 2016-ம் ஆண்டு முதலே மக்கள் காலரா தொற்றால் அவதிப்படும் அவல நிலையும் ஏமனில் இருக்கிறது. இந்நிலையில் இந்தக் கொரோனா காலத்தில், மக்களை குணப்படுத்த சரிவர மருத்துவமனைகளே இல்லாத ஏமனில், வெண்டிலேட்டர் எல்லாம் கற்பனை மட்டுமே. போர் காரணமோ நோய் காரணமோ அங்கு மக்களின் உயிரைப் பிடித்து நிறுத்துவதற்குத்தான் வாய்ப்பில்லை.

ஏமன் உள்நாட்டுப் போர்
ஏமன் உள்நாட்டுப் போர்
உலகமே கொரோனாவை கண்டு அஞ்சிக்கொண்டிருக்கின்றனர். அடுத்தநொடி என்ன நடக்கும் எப்போது எங்கே குண்டு விழும் எனப் பதற்றத்துடன் வாழும் ஏமன் நாட்டு மக்களின் நிலை எப்படி இருக்கிறது? தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்...
 `உள்நாட்டு போருக்கும் காலராவுக்கும் பலியாகும் உயிர்கள்...’ - கொரோனாவை  எதிர்கொள்ளுமா ஏமன்?

கடந்த ஆறு ஆண்டுகளில் ஏமன் சந்தித்த போர் பாதிப்புகளை சரி செய்யவே பல ஆண்டுகள் ஆகும். இதில் இயற்கையின் நோய்த் தாக்குதல்கள் அந்நாட்டை மேலும் நிலைகுலைய செய்திருக்கிறது. அந்நாட்டு மக்களின் 80 சதவிகிதம் பேர், பன்னாட்டு உதவியை சார்ந்தே அவர்களின் வாழ்வை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், அமெரிக்கா தன்னுடைய பன்னாட்டு உதவியையும், ஐநாவிற்கு வழங்கும் உதவித்தொகைப் பங்களிப்பையும் குறைத்திருப்பதில், சகல திசைகளிலும் ஆபத்தால் சூழ்ந்திருக்கிறது ஏமன்.

சிரியா: இதற்கு சமானமான வார்த்தையாக போர் என்ற வார்த்தையை சொல்லும் அளவுக்கு கடந்த பல ஆண்டுகாலமாக போர் கண்ட பூமியாக இருக்கிறது சிரியா. ஆம், கடந்த நூறாண்டுகளாகவே போரின் பிடியில் சிக்கி சிரியா சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

சிரியா போரில் அமெரிக்காவின் பங்கை பற்றி தெரிந்துகொள்ள இந்த லின்கை க்ளிக் செய்யவும்...
முதுகில் குத்திய அமெரிக்கா... மீண்டும் ரத்த பூமியான சிரியா!

சிரியாவில் அந்நாட்டு அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சியாகத் தொடங்கிய சலசலப்பு, பல அரசுகள் தலையிடும் பன்னாட்டுப் போராக உருவெடுத்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக குண்டுமழை பொழிந்த சிரிய வான்வெளியில், கடந்த சில நாள்களாக அமைதி நிலவியது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலையீட்டில் மார்ச் மாத இறுதி முதல் அனைத்துத் தரப்பிலிருந்தும் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. தொடர் போரின் காரணமாக ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்கள் அங்கு வீட்டை இழந்திருக்கின்றனர். தற்காலிகக் கூடங்களும், வெட்டவெளிகளும், இடிபாடுகளுமே அம்மக்களின் தங்கும் இடம். சமூக இடைவெளி என்ற வார்த்தைகள் எல்லாம் அம்மண்ணில் அர்த்தமற்றது. போர்க் காயங்களுக்கே அங்கு மருந்திட மருத்துவமனைகள் இல்லாத நிலையில், கொரோனா வைரஸ் எதிர்ப்பு எல்லாம் அங்கு சாத்தியமற்றதே. இன்னும் சொல்வதென்றால், போரற்ற அமைதியை தற்காலிகமாக வழங்கி அங்கு சிறிது நன்மை செய்திருக்கிறது கொரோனா.

சிரியா உள்நாட்டுப் போர்
சிரியா உள்நாட்டுப் போர்
AP

ஆனால் பிற இடங்களை போல, அங்கும் அமைதி நிலைக்கவில்லை, ஏப்ரல் இறுதி வாரம் சிரிய தலைநகரம் டமாஸ்காஸ் அருகே இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூன்றுபேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. இப்படி உலகம் முழுவதும், அமைதிக்கான வாய்ப்பை பல நாடுகள் தவறவிட்டதன் பின்னணியில் இருப்பது, அதே பெரும் வல்லரசு பலம் கொண்ட சீனாவும், அமெரிக்காவும், ரஷ்யாவும்தான். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள ஐந்து நிரந்திர நாடுகளில் மூன்று முக்கிய நாடுகள் சீனாவும், ரஷ்யாவும், அமெரிக்காவும். போர் நிறுத்தத்திற்கான அறிவிப்பை ஐநா பொதுச்செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ் அறிவித்ததும், அதற்கு எதிர்பார்த்ததை விட அதிகமாகவே ஆதரவு இருந்தது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஐநா உடனடியாக ceasefire resolution எனப்படும் போர் நிறுத்த உடன்படிக்கையைத் தயார் செய்திருக்க வேண்டும். ஆனால், அந்த உடன்படிக்கையில் உலக சுகாதார நிறுவனத்தின் பெயரை இணைப்பது குறித்து கருத்து வேறுபாட்டில் அமெரிக்கா மற்றும் சீனா முட்டிக்கொண்டன. முழு 90 நாள் போர்நிறுத்ததை வலியுறுத்தும் இந்த உடன்படிக்கையின் முன்னுரையில் WHO பற்றிக் குறிப்பிட வேண்டும் என சீனாவும், அந்த அமைப்பை பற்றிக் குறிப்பிடவே கூடாது என அமெரிக்காவும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. WHO சீனா ஆதரவாக செயல்படுகிறது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில்தான் இத்தகைய பிரச்னை உருவெடுத்திருக்கிறது.

சீனா - அமெரிக்கா
சீனா - அமெரிக்கா

இந்த உடன்படிக்கை உரிய நேரத்தில் வெளிவந்திருந்தால், போரின் பிடியில் இருக்கும் பல மக்களுக்கு தீர்வு கிடைக்க அது ஒரு வாய்ப்பையாவது உருவாக்கி தந்திருக்கும். ஆனால், வல்லரசுகள் என்று மக்களுக்காக இருந்திருக்கின்றன... போரோ, நோயோ மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிணங்களின் மீது உலக நாடுகள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன என்பதே கசக்கும் உண்மை.

அடுத்த கட்டுரைக்கு