Published:Updated:

`சி.ஐ.ஏ, மொசாட்டுக்கு உதவி’ - ராணுவ தளபதி சுலைமானி கொலை வழக்கில் உளவாளிக்கு மரண தண்டனை விதித்த இரான்

காசிம் சுலைமானி
காசிம் சுலைமானி ( AP )

``சுலைமானி வழக்கு தொடர்பான இந்த மரணதண்டனை தீர்ப்பின் மூலமாக, நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது தெரிகிறது. குறிப்பாக, உளவாளிகள் தொடர்பான வழக்குகளில் வெளிப்படைத்தன்மை இல்லை.’’

இராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி, இரான் ராணுவப்படை தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் நடத்திக் கொன்றது அமெரிக்கா. அவர், அமெரிக்கர்களைத் துன்புறுத்தியதாகவும் அமெரிக்காவுக்கு எதிராகப் பல சதிகளை நடத்தியதாகவும் சுலைமானியின் கொலைக்குக் காரணம் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியது. சுலைமானியின் கொலையினால் இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் சூழலும் நிலவியது. சர்வதேச அளவில் இந்த பிரச்னை அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது. இதுதொடர்பான விசாரணைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இரான்
இரான்

இந்த நிலையில், ராணுவப்படை தளபதி காசிம் சுலைமானி இருக்கும் இடம் உள்ளிட்ட தகவல்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் உளவுத்துறையினருக்கு தகவல் வழங்கியது தொடர்பாக மஹ்மவுத் மவுசாவி மஜ்த் (Mahmoud Mousavi-Majd) என்பவரை இரான் காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்மீதான குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக இரானின் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலம் ஹூஸைன் இஸ்மெய்லி பேசும்போது, ``சி.ஐ.ஏ மற்றும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொசாட் ஆகியவற்றின் உளவாளிகளில் ஒருவரான மஹ்மவுத் மவுசாவி மஜ்த் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எங்கள் நாட்டின் எதிரிகளுக்கு இவர் தளபது சுலைமானி பற்றிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

`அவர்களை கடலிலே சுட்டு வீழ்த்துங்கள்!’ - அமெரிக்க, இரான் இடையே கடும் பதற்றம்... காரணம் புரட்சி படை?

மஹ்மவுத் மவுசாவி மஜ்த்-க்கு எப்போது மரண தண்டனை வழங்கப்படும் என்பது குறித்த தகவல்களை அவர் கூறவில்லை. கடந்த சில மாதங்களில் சி.ஐ.ஏ-க்காகப் பணிபுரிந்து வந்த சுமார் 17 உளவாளிகளை இரான் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மஜ்த் வழக்குடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா அல்லது இல்லையா என்பது குறித்த தகவல்கள் எதுவும் அதிகாரிகள் கூறவில்லை. அவர்களில் சில உளவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சுலைமானி
சுலைமானி
AP

சுலைமானியின் மரணம் தொடர்பான வழக்குகள் குறித்த எந்தவொரு தகவலும் பொதுவெளியில் தெரிவிக்கப்படுவதில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. மஹ்மவுத் மவுசாவி மஜ்த்தின் பெயர் மட்டும்தான் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அல்ஜசீரா நிருபர் பஸ்ராவி என்பவர், ``சுலைமானி வழக்கு தொடர்பான இந்த மரணதண்டனை தீர்ப்பின் மூலமாக, நீதித்துறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது தெரிகிறது. குறப்பாக, உளவாளிகள் தொடர்பான வழக்குகளில் வெளிப்படைத்தன்மை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்னைகள் நிலவி வருவதால் இருநாடுகளுக்கும் இடையில் நிலவி வந்த பதற்றங்கள் சற்று அடங்கியதாகக் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இரானின் மரண தண்டனை அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`நான் உளவாளி அல்ல; மன அழுத்தம் தாங்க முடியவில்லை’ - இரான் சிறையிலிருந்து கடிதம் எழுதிய பேராசிரியை
அடுத்த கட்டுரைக்கு