Published:Updated:

`அமெரிக்க நெருக்கடியால் பதற்றத்தில் நடந்துவிட்டது’ - விமானத் தாக்குதலை ஒப்புக்கொண்ட இரான்

இரான் நாட்டு வான் வெளியில் பறந்த உக்ரைன் நாட்டு விமானம் மீது தவறுதலாகத் தாக்குதல் நடத்திவிட்டதாக இரான் ஒப்புக்கொண்டுள்ளது.

இரான் விமானத் தாக்குதல்
இரான் விமானத் தாக்குதல்

இரான் நாட்டு ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை கடந்த வாரம் அமெரிக்க ராணுவப்படை, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றது. அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் அவர் அச்சுறுத்தலாக இருந்ததால் கொன்றதாக அமெரிக்க அதிகாரிகள் சுலைமானியின் இறப்புக்குக் காரணம் தெரிவித்தனர். சுலைமானி கொலைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவப்படை மீது இரண்டு முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது இரான்.

விமானத் தாக்குதல்
விமானத் தாக்குதல்
Ebrahim Noroozi

இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பிரச்னை நடந்துகொண்டிருக்கும் போது திடீரென இரான் வான்வெளியில் பறந்த உக்ரைன் நாட்டு விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. முன்னதாக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்பட்டது.

`ஒரு மணிநேரத் தாமதம்; ஒருவர்கூட பிழைக்கவில்லை!' - இரானில் விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம்

ஆனால், உக்ரைன் விமானம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாகக் கனடா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியிருந்தனர். அதற்கு ஆதாரமாக சில குறிப்புகளையும் முன் வைத்தனர். இருந்தும் இரு நாடுகளின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்து வந்தது இரான். உக்ரைன் விமானம் வீழ்ந்தது தொடர்பாக இரான் தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் உக்ரைன் விமானத்தை தங்கள் நாட்டு ஏவுகணைகளே தவறுதலாகத் தாக்கிவிட்டதாக இரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஸரீஃப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜவாத் ஸரீஃப், ``ராணுவத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அமெரிக்கா கொடுத்து வந்த தொடர் நெருக்கடிகளால் ஏவுகணைத் தாக்குதலின்போது ஏற்பட்ட மனிதப் பிழை, பேரழிவுக்கு வழிவகுத்து விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட எங்கள் நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களிடம் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

`இரவு நேரத்தில் ஏவுகணை; சேட்டிலைட்டில் சிக்கிய 2 சிக்னல்!'- உக்ரைன் விமானம் வீழ்ந்த பின்னணி என்ன?

``அமெரிக்காவுடனான பெரும் சண்டையின் போது இரான் ராணுவம் பதற்றத்தின் உச்சத்திலிருந்தது. அந்தச் சூழலில் மனிதப் பிழை காரணமாகத் தவறு நடந்துவிட்டது. இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை. விமான விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க ராணுவ அமைப்புகள் மேம்படுத்தப்படும்” என இரான் நாட்டு ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்தவர்கள்
விமான விபத்தில் உயிரிழந்தவர்கள்
Efrem Lukatsky

உக்ரைன் நாட்டு ஏர்லைன்ஸில் மொத்தம் 176 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் கூட உயிர்பிழைக்கவில்லை. தெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் இரான் மற்றும் உக்ரைனைச் சேர்ந்தவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.