Published:Updated:

`அந்த ஒப்பந்தத்துக்கு இனி கீழ்படியப்போவதில்லை!’- இரான் அறிவிப்பால் கலங்கும் உலகத் தலைவர்கள்

அமெரிக்கா - இரான்
அமெரிக்கா - இரான்

தங்களது அணுசக்திக் கொள்கைகள் அமைதிக்கானது என இரான் பலமுறை கூறியும் அமெரிக்கா அதை முழுமையாக நம்பவில்லை.

இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே சில ஆண்டுகளாகப் பிரச்னைகள் நிலவி வந்தன. கடந்த சில நாள்களுக்கு முன்பு இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது இரான் ராணுவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இரான் நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

அணு
அணு

2015-ம் ஆண்டில், இரானின் அணு ஆயுதப் பரவலைத் தடுக்க, ‘கூட்டுச் செயல்பாட்டுத் திட்டம்’ என்ற ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தது, அமெரிக்கா. இரான் அணு பயன்பாட்டை ஆயுதத்துக்குப் பயன்படுத்தும் என்ற அமெரிக்காவின் சந்தேகமே இந்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்குக் காரணம். அணுவை அமைதிக்கான வழியிலேயே பயன்படுத்துவோம் என்று இரான் பலமுறை தெரிவித்தும் அமெரிக்கா அதை நம்பவில்லை. இதனால் ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர்களான பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளும் அதில் கையொப்பமிட்டன. உலக நாடுகளுடன் இரான் செய்த ஒப்பந்தத்தில், அணு தொடர்பான நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வதாகவும் சர்வதேச கண்காணிப்பாளர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதாகவும் கூறியிருந்தது. அதற்குப் பதில், தன் நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடையைத் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.

`அதிகார உடையில் உள்ள தீவிரவாதி!’ - அமெரிக்க அதிபரை விளாசிய இரான் அமைச்சர்

ஆனால், 2018-ஆண்டில் ஒப்பந்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை என்று இரான் மீது குற்றம்சாட்டி அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியது அமெரிக்கா. கூடவே, இரான் மீது பொருளாதாரத் தடையும் விதித்தது. மேலும், ‘இந்தியா உட்பட எட்டு நாடுகள் இரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை, ஆறு மாதங்களுக்குள் நிறுத்த வேண்டும்’ என்றும் கெடு விதித்தது தனிக் கதை.

சுலைமானி கொலையால் பதற்றமான சூழ்நிலை இருநாடுகளுக்கு மத்தியிலும் நிலவி வரும் நிலையில், அதிரடியாக 2015-ம் ஆண்டு அணு ஒப்பந்தம் தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுபாடுகளுக்கு இனி கீழ்படியப்போவதில்லை என இரான் அறிவித்துள்ளது.

 அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

இதுதொடர்பாக இரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``யுரேனிய செறிவூட்டல் திறனை நாங்கள் குறைக்கப் போவதில்லை. இரான் தனது அணுசக்தி செறிவூட்டலை எந்த வரம்புகளுமின்றி அதன் தொழில்நுட்பத் தேவைகளில் அடிப்படையில் தொடரும்” என அறிவித்துள்ளது.

தெஹ்ரானில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு இரான் இந்த முடிவை அறிவித்துள்ளது. இரான், யுரேனியத்தைச் செறிவூட்டுதலின் மூலம் குறிப்பிட்ட மாதங்களுக்குள் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியும் என்பதால் உலகின் முக்கிய நாடுகளிலுள்ள தலைவர்கள் பலரும் இந்த முடிவைக் கைவிட வேண்டுமென இரானை வலியுறுத்தி வருகின்றனர்.

`பரம எதிரிக்குத் தக்க பதிலடி காத்திருக்கிறது!’ -அமெரிக்க தாக்குதலால் கொதிக்கும் இரான் தலைவர்
அடுத்த கட்டுரைக்கு