Published:Updated:

`அமெரிக்க ராணுவம் ஒரு தீவிரவாத இயக்கம்!’- இரான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா

இரான்
இரான்

அமெரிக்க ராணுவத்தோடு சேர்ந்த அனைத்து அமைப்புகளையும் தீவிரவாத இயக்கமாகவும் அதற்கு உதவிய செயல்கள் தீவிரவாத செயல்களாகக் கருதப்படும் என்றும் இரான் அறிவித்துள்ளது.

அமெரிக்கா - இரான் இடையே சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் கடந்த 2015-ம் ஆண்டு இரான் அணு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இதற்குப் பிறகு மத்திய கிழக்கில் அமைதி நிலவும் என நம்பப்பட்டது. ஆனால், டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு இரானுடனான அணு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக தன்னிச்சையாக அறிவித்தார். அதற்குப் பிறகு அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்தது.

சுலைமானி
சுலைமானி

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் இரானின் குர்துப் படைப் பிரிவுகள் உட்பட இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை வெளிநாட்டு தீவிரவாத நிறுவனம் என அமெரிக்கா அறிவித்தது. அதைத் தொடர்ந்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தை தீவிரவாதப் படை என்று இரான் அறிவித்தது. இரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளை அமெரிக்கா செய்து வந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரான் படைகளின் தளபதி காசெம் சுலைமானி அமெரிக்கப் படைகளின் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். பாக்தாத் விமான நிலையத்துக்கு வெளியே இந்தத் தாக்குதல் அரங்கேறியது. இரானின் உச்சபட்ச ராணுவப் பதவியை அனுபவித்து வந்த சுலைமானி இரான் ஷியா முஸ்லிம்களின் முதுபெரும் தலைவர் கொமேனிக்கு மிகவும் நெருக்கமானவர். சுலைமானின் கொலைக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்குமிடையே போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத நிலையை எட்டியது.

அமெரிக்கா  - இரான்
அமெரிக்கா - இரான்
Picasa

பதற்றத்தைத் தணிக்க இரண்டு நாடுகளுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா உட்பட பல நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. ``சுலைமானின் படுகொலை இரான் இறையாண்மையின் மீதான அமெரிக்காவின் நேரடி தாக்குதல். இதற்கு இரான் நிச்சயம் பழிதீர்க்கும்" என இரான் அறிவித்திருந்தது. மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள அமெரிக்காவின் படைத் தளங்களையும், ராணுவக் கப்பல்களையுமே இரானால் தாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ``இரானின் எந்தத் தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும். அமெரிக்காவை அச்சுறுத்த முடியாது" என ட்ரம்ப் ட்விட்டர் மூலம் அறிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா பாதுகாப்புப் படைகளையும், அமெரிக்க ராணுவத்தின் தலைமையிடமான பென்டகனையும் தீவிரவாத இயக்கமாக இரான் அறிவித்துள்ளது. இதற்கான மசோதாவை இரான் நாடாளுமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் அமெரிக்கா பாதுகாப்புப் படைகளுக்குச் சொந்தமான அனைத்து அமைப்புகள், வீரர்களை தீவிரவாதிகளாக அறிவித்துள்ளது.

பென்டகன்
பென்டகன்

இதற்கு உதவியாக செய்யப்படுகிற எந்தவொரு செயலும் தீவிரவாத செயலாக கருதப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இரண்டு நாடுகளுக்குமிடையே பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. சுலைமானின் கொலைக்கு இரான் நிச்சயம் பழிவாங்கும் என எதிர்பாக்கப்படுகிற சூழலில் சமீபத்திய நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு