Published:Updated:

`கரு நிறமாக மாறிய தெஹ்ரான்; கதறி அழுத மூத்த தலைவர்!' - மக்கள் வெள்ளத்தில் மிதந்த சுலைமானி உடல்

இரான் நாட்டின் ராணுவப் படைத் தளபதி சுலைமானியின் உடல் மூன்று நாள்களுக்குப் பிறகு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுலைமானி இறுதி அஞ்சலி
சுலைமானி இறுதி அஞ்சலி ( AP )

இராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரான் நாட்டு ராணுவப்படை தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். அவர் இரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். அவர் அமெரிக்க வீரர்களையும் இராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் தாக்கியதாகக் கூறி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா விளக்கமளித்திருந்தது.

சுலைமானியின் இறுதி அஞ்சலி
சுலைமானியின் இறுதி அஞ்சலி
AP

சுலைமானி கொல்லப்பட்ட பிறகு இரான் - அமெரிக்கா இடையே போர் உருவாகும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்ட சுலைமானியின் உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சுலைமானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்குப் பல ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப் பகுதியில் குவிந்தனர்.

`நேற்று செய்ததை முன்னரே செய்திருக்க வேண்டும்!’- காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக ட்ரம்ப்

அவர்கள் அனைவரும் கறுப்பு நிற உடையில் வந்திருந்தனர். அதனால் தெஹ்ரான் பகுதி முழுவதும் கறுப்பு நிறமாக மாறியது போலக் காட்சியளித்தது. மக்கள் தங்கள் கைகளில் கறுப்பு மற்றும் இரான் நாட்டுக் கொடிகளை ஏந்தியபடி அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர். பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய அவர்கள், சுலைமானிக்காகப் பிரார்த்தனை செய்தனர்.

மூத்த தலைவர் அலி
மூத்த தலைவர் அலி
AP

அதே அரங்கத்தில் இரானின் மூத்த தலைவர் அலி கமேனி உள்ளிட்ட அனைத்து முக்கியத் தலைவர்களும் கூடி, சுலைமானி உட்பட அந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்காகப் பிரார்த்தனை செய்தனர். அந்தப் பிரார்த்தனையின்போது இரான் தலைவர் அலி, கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். அந்தக் காட்சி பார்ப்பவர்கள் மனதை உருக்கும்விதமாக அமைந்தது. சுலைமானியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் அந்நாட்டு ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

பின்னர் அனைவரது உடல்களும் பெரிய மற்றும் உயரமான வண்டியில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யக் கொண்டு செல்லப்பட்டன. அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் மிதந்தவாறே சுலைமானியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

இறுதி அஞ்சலி
இறுதி அஞ்சலி
AP

அந்தக் கூட்டத்திலிருந்த அஃப்காமி என்ற இரானியர் தங்கள் நாட்டுத் தலைவரை இழந்த வேதனையை ஏ.ஃப்.பி ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டுள்ளார். ``அவர்களுக்கு நிச்சயம் நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இரான் மற்றும் இராக்கில் உள்ள அமெரிக்காவின் அனைத்து ராணுவ தளங்களையும் நாம் குறிவைத்துத் தாக்க வேண்டும். நம் வரம்பில் உள்ள அனைத்து அமெரிக்கர்களையும் நம் ஏவுகணைகள் தாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.