Published:Updated:

`ட்ரம்ப் சொன்னபடியே செய்தோம்!’- இரானின் முக்கியத் தலைவரைக் கொன்ற அமெரிக்கா

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே மோதல் வெடித்து வந்த நிலையில் இன்று பாக்தாத் விமானநிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது அமெரிக்கா.

இராக் தாக்குதல் - காசோம் சுலைமானி
இராக் தாக்குதல் - காசோம் சுலைமானி

இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா விலகியது. தீவிரவாத சக்திகளுக்கு அந்நாடு உதவுவதாகவும் அதைத் தடுக்கும் வகையில் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாகவும் அமெரிக்கா விளக்கமளித்திருந்தது. இந்த விவகாரம் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாக வார்த்தைகள் மூலம் போரிட்டனர். இது உச்சத்தை எட்டவே, இரான் மீது பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வந்தது. மேலும், இரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகள் தங்கள் நடவடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஆனால், அமெரிக்காவின் எந்தப் பேச்சுக்கும் இரான் செவி சாய்க்கவில்லை. தொடர்ந்து அமெரிக்கா மீதான தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்துக்கொண்டு வந்தது. இதனால் அமெரிக்கா - இரான் இடையேயான மோதல் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதற்கிடையில் இராக்கில் உள்ள இரான் ஆதரவுப் படை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதைக் கண்டிக்கும் வகையில் இரான் ராணுவப்படையும், இராக் படையும் இணைந்து இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டுச் சூறையாடினர்.

அமெரிக்கத் தூதரகம் முழுவதும் இரான் வசம் கொண்டுவரப்பட்டது. இது அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவாக இருந்தது. பின்னர், இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சூறையாடப்பட்டதுக்கு இரானே முழுப் பொறுப்பு என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். `அமெரிக்கச் சொத்துகளுக்கோ அதிகாரிகளுக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இரான் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டிவரும். இது வெறும் எச்சரிக்கை இல்லை பகிரங்க மிரட்டல்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

காசோம் சுலைமானி
காசோம் சுலைமானி

அதே சமயம் ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு இரான் தலைவரும் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். அமெரிக்கா தங்களை எதுவும் செய்யமுடியாது என்றும் கூறியிருந்தார். இதையடுத்து இராக்கில் உள்ள தூதரகம் முன்பு பல நூறு அமெரிக்க ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அவர்கள் இரான் மற்றும் இராக் ஆதரவுப்படை மீது தொடர் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று நள்ளிரவு (இந்திய நேரப்படி அதிகாலை) இராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமானநிலையத்தின் மீது அமெரிக்க ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் இரானின் ராணுவத் தளபதியும் சக்திவாய்ந்த தலைவருமான கசோம் சுலைமானி கொல்லப்பட்டுள்ளார். பாக்தாத்தில் நடந்த தாக்குதலை அமெரிக்கப் பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது. தளபதி சுலைமானி கொல்லப்பட்டதை இரானின் புரட்சிகரக் காவல்படையும் உறுதிசெய்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலில் இரானின் ஆதரவுப்படையான இராக்கைச் சேர்ந்த ஹசத் அல் சாபி துணை ராணுவத்தின் துணைத் தலைவரும் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இராக் தாக்குதல்
இராக் தாக்குதல்
AP

இது தொடர்பாக பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்கப் பணியாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க அதிபரின் உத்தரவின் பேரில் இரான் தளபதி காசோமைக் கொல்லும் முடிவை அமெரிக்க ராணுவம் எடுத்தது. உலகின் எந்த மூலையில் அமெரிக்கர்கள் இருந்தாலும் அவர்களைப் பாதுகாக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.