Published:Updated:

`இரான் ஸ்டேடியத்தில் இனி பெண்களுக்கு அனுமதி..!' - மரணத்தால் அரசைப் பணியவைத்த `ப்ளூ கேர்ள்'

தனது மரணத்தின் மூலம் தன் நாட்டுப் பெண்களுக்கு சுதந்திர கதவை திறந்துவிட்டுள்ளார் இரானின் `ப்ளூ கேர்ள்' என அழைக்கப்படும் ஸஹர் கோடயாரி.

ஸஹர் கோடயாரி
ஸஹர் கோடயாரி

பொதுவாக இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளன. இதில் இரான் ஒன்றும் விதிவிலக்கல்ல. மற்ற நாடுகளில் இல்லாத வகையில் சில எழுதப்படாத சட்டங்கள் அங்கு பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது இரான் பெண்கள் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டைப் பார்க்கத் தடை. எழுதப்படாதச் சட்டமாக கடந்த 1981-ம் ஆண்டு முதல் அமலில் இருக்கும் இந்தத் தடையை மிகத் தீவிரமாக அந்நாட்டு அதிகாரிகள் நடைமுறைப்படுத்தி வந்தனர். இதில் விதிவிலக்காக இல்லை.. இல்லை.. அதிர்ஷ்டவசமாக கடந்த ஆண்டு தெஹ்ரானில் உள்ள மைதானத்தில், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டபோது சில பெண்கள் மட்டும் அங்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஸஹர் கோடயாரி
ஸஹர் கோடயாரி

கடுமையான தடை இருந்தாலும் இரான் அணிக்கு எனத் தீவிர ரசிகர்களாக நிறைய பெண்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர்தான் 29 வயதான ஸஹர் கோடயாரி. தீவிர கால்பந்தாட்ட ரசிகையான ஸஹர் கடந்த மார்ச் மாதம் கால்பந்து விளையாட்டைப் பார்ப்பதற்கு ஆண்போல வேடமணிந்து மைதானத்துக்குள் நுழைய முயன்றார். இவர் மட்டும் இப்படி ஆண் வேடமணியவில்லை. சமீபகாலமாக இரான் பெண்கள் இப்படி ஆண் வேடமிட்டு தங்களின் விருப்பமான அணி விளையாடும் போட்டிகளைக் காண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களைத் `தாடி வைத்த பெண்கள்' மற்றும் `அசாதி பெண்கள்' என்று அந்நாட்டு மக்கள் அழைக்கின்றனர். அப்படி ஒரு அசாதி பெண்ணாக ஸஹரும் மைதானத்துக்குள் நுழைய முயன்றுள்ளார். ஆனால், அவரை தடுத்து நிறுத்திய காவலர்கள் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Vikatan

கூடவே `புர்கா அணியவில்லை, விதிகளை மீறிவிட்டார்' என ஸஹர் மீது வழக்குகளையும் தொடுத்தனர். பின்பு மூன்று நாள்கள் சிறை வாசத்துக்குப் பின் ஜாமீனில் வெளியே வந்த ஸஹர் மீது காவலர்கள் தொடுத்த வழக்கு நடைபெற்றுவந்தது. ஆறு மாத காலமாக நடந்துவந்த வழக்கின் விசாரணை செப்டம்பரில் மீண்டும் நடந்துள்ளது. அப்போது நீதிபதி வர தாமதம் ஆன நேரத்தில் அங்குள்ளவர்கள், `இந்த வழக்கில் நிச்சயம் ஒரு வருடம்வரை சிறைத் தண்டனை கிடைக்கும்' என்று பேசிக்கொள்ள, அதை ஸஹர் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இது, பயத்தை ஏற்படுத்த நீதிமன்ற வாசலிலேயே தீக்குளித்தார் ஸஹர். பலத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை கைகொடுக்கவில்லை. 9 நாள்கள் கழித்து சரியாக, தற்கொலை எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட அன்றே உயிரிழந்தார். இவரின் இழப்பு உலகை உலுக்கியது.

ஸஹர் கோடயாரி
ஸஹர் கோடயாரி

இரான் நாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டது. லட்சக்கணக்கான இரானிய மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடினர். விளையாட்டு மைதானத்தில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். கூடவே, ஸஹர் விரும்பிய கால்பந்து அணியின் நிறம் நீலம் என்பதால், இரானின் `ப்ளூ கேர்ள்' என்ற பட்டத்துடன் அவரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு வீதிகள்தோறும் பேரணி நடத்தினர்.

``இரானை உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலக்கிவையுங்கள்" என வெளிப்படையாக கோரிக்கை வைத்தனர் சொந்த நாட்டு மக்கள். அவர்களுக்கு பிஃபா அமைப்பும், உலகக் கால்பந்து அமைப்புகளும் கைகொடுத்தன. `மைதானங்களில் பெண்களை அனுமதிக்காவிட்டால் இரான் அணி நீக்கப்படும்' எனப் பகிரங்கமாக பிஃபா எச்சரிக்கை விடுத்தது.

`தத்ரூபமாக இருக்கணும்னு நினைத்தார், சிக்கினார்!-ஏஞ்சலினா ஜோலியை இழிவுபடுத்தியதாக இரான் பெண் கைது

இறுதியாக ஸஹர் இறந்து ஒரு மாதத்துக்குள் மக்களின் போராட்டத்துக்கு பணிந்துள்ளது இரான் அரசு. நேற்று நடந்த இரான் vs கம்போடியா மேட்சை பார்க்க ஆயிரம் பெண்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது அரசு. மேலும், இந்த நடவடிக்கை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் பேசியுள்ளனர். இதனால் இரான் பெண்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். முதல்முறையாக போட்டிகளைப் பார்க்க டிக்கெட் கிடைத்த சந்தோஷத்தில் பேசிய இரான் பெண் பத்திரிகையாளர் ஒருவர், ``என்னால் இன்னும்கூட நம்ப முடியவில்லை. நான் எல்லாப் போட்டிகளையும் இதுவரை டிவியில்தான் பார்த்துவந்தேன். இப்போது எனக்கு நேரடி அனுபவம் கிடைக்கப் போகிறது’’ என்றார்.

இரான் பெண்
இரான் பெண்

அனைத்துக்கும் காரணம் ஸஹர் தான் என மெச்சி வருகின்றனர் அந்நாட்டு பெண்கள். `தனது உயிரை பணயம் வைத்து எங்களுக்கு சுதந்திரம் பெற்றுகொடுத்துள்ளார் ஸஹர். அவளை என்றும் மறக்க மாட்டோம்" எனவும் பேசியுள்ளனர்.

உண்மைதான் தனது மரணத்தின் மூலம் தன் நாட்டு பெண்களுக்கு சுதந்திரக் கதவை திறந்துவிட்டுள்ளார் இரானின் `ப்ளூ கேர்ள்' என அழைக்கப்படும் ஸஹர் கோடயாரி.

கிட்னி ரூ.70,000, கல்லீரல் ரூ.3.5 லட்சம்... வறுமையால் உடல் உறுப்புகளை விற்கும் இரான் மக்கள்!