Published:Updated:

அதிகரிக்கும் உயிரிழப்புகள்; மறைத்த அரசு? - ஈரானின் நிலையும் சாட்டிலைட் புகைப்பட சர்ச்சையும் #Corona

சாட்டிலைட் புகைப்படம்
சாட்டிலைட் புகைப்படம் ( Maxar )

ஈரானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களை அடக்கம் செய்ய நிறையக் குழிகள் தோண்டப்பட்டுள்ளதும் சாட்டிலைட் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 100-க்கும் அதிகமான நாடுகளில் பரவி உலக மக்களை அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது. இந்த வைரஸால் உலக அளவில் 1,45,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,436 எட்டியுள்ளது. 72,531 குணமடைந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகள் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா
கொரோனா

இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,157- ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ஈரானில் 12,729 பாதிக்கப்பட்டு, 611 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உயிரிழப்புகளை அதிகம் கொண்ட மூன்றாவது நாடாக இது உள்ளது. இந்நிலையில் ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களைப் புதைப்பதற்காக மிகப்பெரும் குழிகள் தோண்டப்பட்டுள்ளது சாட்டிலைட் மூலம் தெரியவந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

`கொரோனா வார்டில் இருந்த அந்த இளைஞரின் தியாகம் பாராட்டத்தக்கது!' -நெகிழும் பினராயி விஜயன்

அமெரிக்காவைச் சேர்ந்த மேக்சர் டெக்னாலஜிஸ் (Maxar Technologies) என்ற தனியார் விண்வெளி ஆய்வு மைய நிறுவனம்தான் இந்த சாட்டிலைட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மார்ச் 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 75 மைல் தூரத்தில் இருக்கும் பெஹெஷ்ட்-இ மசூமே கல்லறையைக் காட்டுகின்றன. அதில் மார்ச் 1-ம் தேதி இரண்டு புதிய குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதன் பிறகு அந்தக் குழிகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.

புகைப்பட வேறுபாடு
புகைப்பட வேறுபாடு
Maxar

பிப்ரவரி 24-ம் தேதி ஈரானின் கோம் நகரச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் பொய் கூறுவதாகவும் ஏற்கெனவே 50 இறப்புகள் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். சட்டமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டு மற்றும் சாட்டிலைட் புகைப்படங்கள் போன்றவை ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் அதை அந்நாட்டு அரசு மூடி மறைப்பதையும் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் வைரஸால் பாதிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், ஈரான் மூத்த தலைவரின் ஆலோசகர் போன்ற பலர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஈனின் இந்த சாட்டிலைட் புகைப்படம் சர்வதேச அளவில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு