Published:Updated:

ஜப்பானில் தஞ்சமடைந்தாரா `அலிபாபா' ஜாக் மா... சீன அரசின் மிரட்டல்கள்தான் காரணமா?!

ஜாக் மா

ஜப்பானில் இருக்கிறாரா அலிபாபா நிறுவனர் ஜாக் மா?!

ஜப்பானில் தஞ்சமடைந்தாரா `அலிபாபா' ஜாக் மா... சீன அரசின் மிரட்டல்கள்தான் காரணமா?!

ஜப்பானில் இருக்கிறாரா அலிபாபா நிறுவனர் ஜாக் மா?!

Published:Updated:
ஜாக் மா

சீனாவின் முன்னணித் தொழில் நிறுவனமான `அலிபாபா' நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா. இவர் கடந்த சில மாதங்களாக எங்கு இருக்கிறார் என்ற தகவலே இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், அவர் ஜப்பானில் தஞ்சமடைந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஏன் ஜப்பானில் தஞ்சமடைந்திருக்கிறார் ஜாக் மா?

அலிபாபாவின் ஆரம்பம்!

1999-ம் ஆண்டு 17 பேரோடு இணைந்து சீனாவின் ஹங்சூ பகுதியில் `அலிபாபா' நிறுவனத்தைத் தொடங்கினார் ஆங்கில ஆசிரியரான ஜாக் மா. அதிலிருந்து 20 ஆண்டுகள் கழித்து உலகின் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றானது அலிபாபா. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா, அந்த நாட்டின் இணைய வர்த்தகம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட சந்தைகளைத் தன்வசப்படுத்தியது. அலிபாபா நிறுவனத்தின் அசுர வளர்ச்சியில் ஜாக் மாவின் பங்கு மிக மிக அதிகம்!

ஜாக் மா
ஜாக் மா

மாயமான ஜாக் மா!

2020-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் வரை பொதுவெளியில் பல நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஜாக் மா, திடீரென மாயமானார். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் அவர் பங்குகொள்ளவில்லை. வெளியில் தலைகாட்டவும் இல்லை. இதையடுத்து ஜாக் மாவை, சீன அரசுதான் கடத்தி வைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தன. அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் பரவின.

``அலிபாபா நிறுவனம் உலகம் முழுவதும் கிளைகளைத் தொடங்க ஆரம்பித்திருந்த நிலையில், சீன அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அந்தச் சமயத்தில் சீன அரசைக் கடுமையாக ஜாக் மா விமர்சித்த காரணத்தால்தான் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்'' என்று அவரின் நலம் விரும்பிகள் சிலர் குற்றம்சாட்டினர்.

2020-ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், ``அலிபாபா நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் சீன அரசு சில கோட்பாடுகளை வகுத்திருக்கிறது. பழைமைவாதத்தை அரசு கைவிட வேண்டும்'' என்று வெளிப்படையாகவே ஜி ஜின்பிங் அரசை விமர்சித்தார் ஜாக் மா. அதன் பிறகுதான் ஜாக் மா பொதுவெளியில் தோன்றவில்லை. எனவே, `அரசுதான் அவரை வீட்டுச் சிறை பிடித்திருக்க வேண்டும்' என்று மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் புதிய தொழில்முனைவோரைக் கண்டறியும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராக இருந்துவந்த ஜாக் மா, அந்த நிகழ்ச்சியின் இறுதித் தொடரில் பங்குகொள்ளவில்லை. இந்தச் சம்பவத்தை அடுத்து `ஜாக் மாவை, சீன அரசுதான் சிறைப் பிடித்துவைத்திருக்கிறது' என்பதை சீன மக்கள் நம்பத் தொடங்கினர்.

காணொளியில் ஜாக் மா!

இந்த நிலையில், 2021 ஜனவரி மாதத்தில் காணொளி வாயிலாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜாக் மா. இந்த நிகழ்வில் ஆசிரியர்களுடன் ஜாக் மா நடத்திய கலந்துரையாடல்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகின. இருந்தும், அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமலேயே இருந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் மாயமானார் ஜாக் மா. நீண்டகாலமாக அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அவர் ஜப்பானில் வசிப்பதாகச் சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங்

சீனாவின் மிரட்டல்?!

``ஜாக் மா கடந்த ஆறு மாதங்களாகத் தனது குடும்பத்துடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசித்துவருகிறார். அங்கிருந்து இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் அவர் சென்று வந்திருக்கிறார்'' என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சீன அரசின் தொடர் அச்சுறுத்தல் காரணமாகத்தான் அவர் சீனாவைவிட்டு வெளியேறி, ஜப்பானில் தஞ்சமடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.