Published:Updated:

`வூஹான் ஆய்வகத்திலிருந்து பரவிய கொரோனா..?' - அதிர வைக்கும் அமெரிக்க உளவுத்துறை அறிக்கை?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வூஹான் கிருமியியல் ஆய்வு மையம்
வூஹான் கிருமியியல் ஆய்வு மையம்

முதல் கொரோனா தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பாகவே வூஹான் ஆய்வுக்கூடத்தின் ஆய்வாளர்கள் நோய்வாய்ப்பட்டனரா? - `தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகைச் செய்தி சொல்வதென்ன?!

விஞ்ஞான வளர்ச்சியின் உதவியோடு மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த உலகையும், அதன் மக்களையும் வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டுவிட்டது கொரோனா வைரஸ். உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசியை பேராயுதமாகக் கொண்டு கொரோனாவை எதிர்த்துப் போராடி வருகின்றன. இந்தப் பெருந்தொற்று உலக மக்களை வாட்டி எடுக்க ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டன. இருந்தும், இந்த நோய்த் தோற்று முதன்முதலாக எங்கிருந்து தோன்றியது என்பதை தற்போது வரை கண்டறிய முடியவில்லை.

முதன்முதலாக 2019 டிசம்பர் மாதத்தில், சீனாவின் மத்திய நகரமான வூஹானைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து வூஹான் நகரிலுள்ள வைரஸ் ஆய்வுக் கூடத்திலிருந்துதான் தொற்று பரவியிருக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சந்தேகத்தைக் கிளப்பின.

சீனாவின் ஆய்வாளர்களும், அதிகாரிகளும், ``கொரோனா வைரஸ் தொற்று வூஹான் மாகாணத்தில் கண்டறியப்படுவதற்கு முன்பாகவே, வேறு ஏதாவது பகுதியில் பரவத் தொடங்கியிருக்கலாம். வேறு நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உணவுப் பொருள்களிலிருந்துகூடப் பரவியிருக்கலாம். நிச்சயம் வூஹான் ஆய்வுக் கூடத்திலிருந்து பரவில்லை'' என்று குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

 Covid-19
Covid-19

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் உலக சுகாதார நிறுவனம், ஒரு குழுவோடு வூஹான் நகருக்குச் சென்று அங்கு ஆய்வுகள் மேற்கொண்டது. 2021 மார்ச் மாதத்தில் வெளியான இந்த ஆய்வின் முடிவில், `வூஹான் ஆய்வுக் கூடத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்புகள் மிக மிகக் குறைவு' என்று சொல்லப்பட்டிருந்தது.

`தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி!

இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்கப் பத்திரிகையான `தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், வூஹான் நகரிலுள்ள வைரஸ் ஆய்வுக் கூடமான `வூஹான் வைரலாஜி மையத்தின்' ஆய்வாளர்கள் மூன்று பேர் 2019 நவம்பரில், அதாவது முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதற்கு ஒரு மாதம் முன்பாகவே, சில அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், அது கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள்தானா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.

அமெரிக்க உளவுத் துறையின் வெளிவராத அறிக்கையிலிருந்து இந்தத் தகவல்கள் பெறப்பட்டிருப்பதாக`தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை தெரிவித்திருக்கிறது. மேலும் அந்த அறிக்கையில், வூஹான் வைராலஜி கூடத்திலிருந்து நோயால் பாதிக்கப்பட்ட ஆய்வாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் மருத்துவமனை வருகைப் பதிவு, நோய்வாய்ப்பட்டிருந்த காலம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல்கள், `கொரோனா வைரஸ், வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கசிந்ததா?' என்கிற சந்தேகத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கின்றன. அதுமட்டுமல்லாது, இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நீண்ட நாள்களாக எழுப்பப்பட்டு வரும் குரல்களுக்கும் வலு சேர்க்கின்றன.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை
2020 Rewind: வெளியேறிய இளவரசர்; கிம் ஜாங் உன் வதந்தி; அதிரடி புதின் - உலகை அதிரவைத்த சம்பவங்கள்!

மார்ச் மாதம் வெளியான உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் குறித்து அமெரிக்கா, நார்வே, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளும் கவலை தெரிவித்ததோடு, பல சந்தேகங்களையும் எழுப்பியிருக்கின்றன. `கொரோனா தொற்று எங்கிருந்து பரவத் தொடங்கியது' என்பதற்கான அடுத்த கட்ட விசாரணைகள் குறித்த விவாதங்களை நேற்று (மே 24) தொடங்கியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்தநிலையில், அதற்கு ஒருநாள் முன்பாக `தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்டிருக்கும் செய்தி பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீனா என்ன சொல்கிறது?

இந்தச் செய்தியை முற்றிலுமாக மறுத்திருக்கிறது சீன அரசு. இது குறித்துப் பேசிய சீன வெளியுறவுத் துறை அதிகாரி Zhao Lijian, ``இது முற்றிலும் தவறான செய்தி. ஏற்கெனவே உலக சுகாதார நிறுவனம், `கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வுக்கூடத்திலிருந்து பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை' என்று சொல்லிவிட்டது. ஆனால், அமெரிக்கா வூஹான் ஆய்வுக்கூடத்திலிருந்தான் வைரஸ் பரவியது என்கிற கருத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அமெரிக்கா, கொரோனா வைரஸின் தோற்றம் பற்றிக் கண்டறிய நினைக்கிறதா, இல்லை இந்தப் பிரச்னையைத் திசை திருப்ப நினைக்கிறதா என்று தெரியவில்லை'' என்று கூறியிருக்கிறார்.

இந்தச் செய்தி குறித்து பைடன் அரசின் தேசியப் பாதுகாப்புக் குழுவின் அதிகாரி ஒருவரிடம் அமெரிக்க ஊடகங்கள் கேள்வியெழுப்பியதற்கு, ``நோ கமென்ட்ஸ்'' என்று பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

அமெரிக்கா - சீனா
அமெரிக்கா - சீனா
கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதா, மனிதனால் உருவாக்கப்பட்டதா? - பகுதி 1 #CompleteAnalysis

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் பதவிக் காலம் முடியும் தருவாயில் ஓர் அறிக்கை வெளியாயிருந்தது. அதில், ``அமெரிக்காவுக்குக் கிடைத்திருக்கும் சில தகவல்களின்படி, முதல் கொரோனா தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பாகவே `வூஹான் வைராலஜி மையத்தின்' ஆய்வாளர்கள் சிலர் கொரோனா தொற்றின் அறிகுறிகளோடு நோய்வாய்ப்பட்டிருக்கின்றனர்'' என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, `வூஹான் வைரலாஜி மையத்திலிருந்துதான் கொரோனா பரவியிருக்க வாய்ப்பிருக்கிறது' என்கிற குரல்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. எனினும், முழு ஆதாரங்களோடு இது நிரூபிக்கப்படவில்லை. ``உலக சுகாதார நிறுவனம் இந்த விவகாரத்தில் தீவிர ஆய்வுகள், விசாரணைகள் மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும்'' என்பதே ஆராய்ச்சியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு