Published:Updated:

வட கொரியா: கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்களைத் திருட முயன்றதா கிம் ஜாங் உன் தேசம்?!

அதிபர் கிம் ஜாங் உன்
அதிபர் கிம் ஜாங் உன் ( AP )

இந்தியா, தென் கொரியா, பிரான்ஸ் போன்ற கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நாடுகளிலுள்ள நிறுவனங்களை ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அப்போது மைக்ரோசாப்ஃட் நிறுவனம் தெரிவித்திருந்தது.

கொரோனா தடுப்பு மருந்து தயாரித்துவரும் ஃபைசர் நிறுவனத்தின் கணினி அமைப்பை, வட கொரியா ஹேக் செய்ய முயன்றதாகத் தென் கொரிய உளவு முகமை ஒன்று தெரிவித்திருக்கிறது.

இதன் மூலம் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை குறித்த தகவல்களை ஹேக்கிங் மூலம் திருட முயன்றதாகக் கூறப்படுகிறது.

இந்த ஹேக்கிங் குறித்து தென் கொரியாவின் தேசிய உளவு அமைப்பு தெரியப்படுத்தியிருக்கிறது. இது குறித்து இதுவரை வட கொரியாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

கொரோனா மருந்து
கொரோனா மருந்து

இதற்கு முன்பு கடந்த வருடம், நவம்பர் மாதம் ஏற்கெனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வட கொரியா, ரஷ்யா ஆகிய நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து குறித்து பணியாற்றும் நிறுவனங்களின் கணினி அமைப்புகளை ஹேக் செய்ய முயல்வதாகத் தெரிவித்திருந்தது.

இந்தியா, தென் கொரியா, பிரான்ஸ் போன்ற கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நாடுகளிலுள்ள நிறுவனங்களை ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அப்போது மைக்ரோசாப்ஃட் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இரும்புக்கதவுகள்!

பொதுவாக வட கொரியா குறித்து வெளிப்படையாக எந்தத் தகவல்களும் வெளியுலகுக்குத் தெரியாத நிலையில், கொரோனா தொற்று கட்டுப்பாட்டைக் குறைக்க அந்த நாடு கடந்த ஜனவரி மாதம் தனது எல்லைகளை மூடியது.

கொரோனா வைரஸ் முதன்முதலில் தோன்றிய சீனாவை அண்டை நாடாக வட கொரியா கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகங்களும் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், இதுவரை வட கொரியாவில் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின்போதும்கூட நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் பெருமையாகத் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆனால், இதற்குச் சாத்தியமே இல்லை என்றுதான் துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துவருகின்றனர்.

`இந்த மூன்றும்கூட கொரோனா அறிகுறிகளாக இருக்கலாம்!' - சொல்லும் பிரிட்டனின் புதிய ஆய்வு

கொரோனா தொற்று இல்லை என்று அந்நாடு கூறியிருந்தாலும், ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் தடுப்பு மருந்தில் சுமார் இரண்டு மில்லியன் டோஸ்களை அந்நாடு கோரியிருக்கிறது.

வலுவான ராணுவ அமைப்பைக்கொண்ட நாடாக இருக்கும் வட கொரியா, அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும். அதுபோல அந்நாடு பயிற்சி பெற்ற ஹேக்கர்களை உருவாக்கி வைத்திருப்பதாக சில செய்திகளும் உண்டு.

கடந்த ஒரு வருடமாக உலகையே கட்டிப்போட்டு வைத்திருக்கும் கொரோனாவுக்கு எப்போது தடுப்பு மருந்து வரும் என்ற ஆவலில் உலக மக்கள் இருக்க, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் தாங்கள் முன்னிலையில் இருக்கிறோம் என்ற போட்டியில் உலக நாடுகளில் பல ஈடுபட்டிருந்தன.

அதன் நீட்சியாக இம்மாதிரியான ஹேக்கிங் குற்றச்சாட்டுகள் முன்வந்தன. அந்த வரிசையில் தற்போது வட கொரியா மீது சுமத்தப்பட்டிருக்கும் இரண்டாவது குற்றச்சாட்டு இது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

கொரோனா தடுப்பு மருந்தைப் பொறுத்தவரை பல்வேறு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. அதில் முக்கியமானவை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆஸ்ட்ராசெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தடுப்பு மருந்து.

இந்த ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பு மருந்து கோவிஷீல்டு. இதை இந்தியாவில் பயன்படுத்த அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல ஃபைசர் என்ற நிறுவனமும், பயோஎன்டெக் என்ற நிறுவனமும் சேர்ந்து ஒரு தடுப்பு மருந்தைத் தயாரித்திருக்கிறது. இதற்கும் பல நாடுகளில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கின்றன. இதேபோல அமெரிக்க நிறுவனமான மாடர்னா என்னும் நிறுவனமும் ஒரு தடுப்பு மருந்தைத் தயாரித்திருக்கிறது. இவை தவிர சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும் தடுப்பு மருந்தை தயாரித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

`தடுப்பூசி போட்டவர்களுக்கு இனி க்வாரன்டீன் தேவையில்லை!' - CDC-யின் புதிய வழிகாட்டுதல் சொல்வது என்ன?
அடுத்த கட்டுரைக்கு