Published:Updated:

வட கொரியா: என்ன நடக்கிறது அங்கே... மக்கள் பசியால் சாகிறார்களா?

அதிபர் கிம்
அதிபர் கிம் ( 朝鮮通信社 )

அரிதான ஒரு நிகழ்வாக வட கொரியாவின் அரசு ஊடகம், அதிபர் கிம்மின் உடல் எடை குறைந்திருப்பது குறித்த ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

வட கொரியாவில் என்ன நடக்கிறது... அங்குள்ள மக்களின் வாழ்க்கை சூழல் என்ன... அதிபர் கிம் என்ன செய்கிறார் என்பதில் எப்போதும் ஆர்வம் உண்டு. ஆனால் அந்நாடு குறித்து அதிகாரபூர்வமாகத் தெரிந்துகொள்ள அந்நாட்டின் அரசு ஊடகத்தைத் தவர வேறு வழியில்லை. அதிலும் உலக நாடுகளுக்கு எதைத் தெரிவிக்க வேண்டும் என்று அதிபர் கிம் விரும்புகிறாரோ அது மட்டுமே அரசு ஊடகத்தில் ஒளிபரப்பப்படும்.

அரிதான ஒரு நிகழ்வாக வட கொரியாவின் அரசு ஊடகம், அதிபர் கிம்மின் உடல் எடை குறைந்திருப்பது குறித்த ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதில் வட கொரியாவைச் சேர்ந்த ஒருவர், கிம் உடல் மெலிந்திருப்பதைக் கண்டதும், தங்களுக்குப் பெருந்துயர் ஏற்பட்டது என்றும், அனைவரும் அழ தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மெலிந்த கிம்... வீடியோ!

வட கொரியாவின் ஊடகமான கொரியா சென்ட்ரல் தொலைக்காட்சி, கிம் உடல் எடை குறைந்த நிலையில், வழக்குத்துக்கு மாறாக தொள தொளவென இருக்கும் வெள்ளைச் சட்டை ஒன்றில், இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு வருவதைப் போன்றும், வட கொரிய மக்கள் அதைப் பெரிய திரைகளில் பார்ப்பது போன்றும் காணொலி ஒன்றை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக அந்த வீடியோவில் கிம் உடல் எடை மெலிந்திருப்பதைக் கண்டு தாங்கள் பெருந்துயர் உற்றதாக ஒருவர் கூறுகிறார்.

கிம்
கிம்
朝鮮通信社

வட கொரியா என்பது மர்மம் சூழந்த ஒரு நாடாகக் கருதப்படுகிறது. அந்நாட்டு அதிபரின் உடல்நிலை குறித்த தகவல்கள் அங்கு ரகசியமாகக் காக்கப்படுகின்றன. இந்தநிலையில், இந்த வீடியோக்கள் ஏன் ஒளிபரப்பப்பட்டன என்பது குறித்துப் பலதரப்பட்ட ஊகங்கள் வெளியே வந்துகொண்டிருக்கின்றன.

அவற்றில் முக்கியமான ஒன்று, வட கொரியாவைப் பொறுத்தவரை அதிபர் கிம்மைத் தவறாகச் சித்திரிக்கும் எந்த ஒரு செய்தியும் வெளியே வராது. எனவே, இது திட்டமிடப்பட்டு ஒளிபரப்பப்பட்ட காணொலி என்பது.

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆளுங்கட்சிக் கூட்டத்தில், நாட்டில் உணவுப் பஞ்சம் இருப்பதாக கிம் ஒப்புக்கொண்டிருந்தார். அதுவும் அரிதான ஒரு நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்ட சூறாவளியால் உணவு உற்பத்தி பெரிதும் பாதிப்பட்டதாக கிம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில்தான், இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு உள்ளது என்கின்றனர் சில ஆய்வாளர்கள்.

ஆம், கடும் பஞ்சம் குறித்துப் பேசிய அதிபர், இரவும் பகலும் மக்களுக்காக அயராமல் உழைக்கிறார் என்பதைக் காட்டத்தான் இந்த ஒளிபரப்பு என்கின்றனர் ஒரு சிலர். மேலும் சிலர், அவர் உடல் எடையை க்குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு, ஒரு மாதத்துக்குப் பிறகு, ஜூன் மாதம் கிம் தொலைக்காட்சியில் தோன்றியபோது, அவர் கையிலிருந்த கைக்கடிகாரம் வழக்கத்தைக் காட்டிலும் இறுக்கமாக கட்டுப்பட்டிருந்ததை நிபுணர்கள் கவனித்திருந்தனர். அப்போதே அவரின் உடல் எடை குறித்த ஊகங்கள் எழுந்தன.

இந்தநிலையில்தான் கிம் திடீரென உடல் எடை மெலிந்து காணப்படுவது அவர் உடல்நிலை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

முந்தைய காலக் கதைகள்..!

இதற்கு முன்னர் கிம்மின் உடல்நிலை குறித்துப் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு ஊகங்கள் வெளியாகியிருந்தன. கடந்த ஆண்டு, நாட்டின் நிறுவனரும், கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்தநாள் ஆண்டு நிகழ்ச்சியில் கிம் கலந்துகொள்ளவில்லை.

கிம்
கிம்
朝鮮通信社

இது குறித்து வட கொரிய ஊடகம் எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஆனால், சர்வதேச ஊடகங்கள் பல்வேறு ஊகங்களை எழுப்பின. இது குறித்துப் பல்வேறு ஆய்வுச் செய்திகளும் வெளியாகின. நீண்ட நாள்களுக்கு கிம் பொதுவெளியில் காணப்படவில்லை என்பதால், அவர் இறந்திருக்கலாம் என்றும், அடுத்த ஆட்சியாளர் யாராக இருக்கக்கூடும் என்ற பேச்சுகளும் எழுந்தன.

ஆனால் அவரின் உடல்நிலை காரணமாகத்தான் அவர் பொதுவெளியில் காணப்படவில்லை என தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. கிம் தொடர்ச்சியாகப் புகைபிடிக்கக் கூடியவர், மதுப் பழக்கமும் உண்டு. அவரின் உடல்நிலை குறித்த பேச்சுகள் எழுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

அதே போன்று 2014-ம் ஆண்டும், கிம் சில நாள்களாகத் பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார். அப்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், இறந்திருக்கலாம் என்றும் ஊகங்கள் வெளியாகின. ஆனால், அவர் பொதுவெளிக்கு மீண்டும் வந்தபோது காலை ஊன்றி நடந்தார். அதன் மூலம் அவருக்குக் கணுக்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கலாம் என ஊகங்களைக் கிளப்பியவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

வட கொரியா அவ்வப்போது ஏவுகணை அணிவகுப்புகளை நிகழ்த்தியிருந்தாலும், அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், கோவிட் சூழலைக் கட்டுப்படுத்த எல்லைகள் மூடப்பட்டது, இயற்கைப் பேரழிவுகள் என அந்த நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகிறது. எல்லைகள் மூடப்பட்டிருந்தால், இறக்குமதிகளுக்கும் பெரிதான வாய்ப்பில்லை. தொண்டு நிறுவனங்கள் உணவு உதவிகளைச் செய்யும் சூழலும் கடினம்தான். இந்த மாதிரியான, இக்கட்டான சூழலில்தான் கிம்மின் உடல் எடை குறித்த இந்தச் செய்திகள் வெளியாகியுள்ளன.

- திலகவதி

அடுத்த கட்டுரைக்கு