Published:Updated:

வீடு வீடாகப் பெண்களைத் தேடும் தாலிபன்கள்... ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?!

தாலிபன் - ஆப்கானிஸ்தான்
தாலிபன் - ஆப்கானிஸ்தான்

`இது பாலியல் வன்கொடுமையின் மற்றொரு வடிவம்' என்று மனித உரிமைக் குழுக்கள் குரல்யெழுப்பியிருக்கின்றன. ஆப்கன் பெண்களுக்கு என்ன நடக்கிறது?!

ஆகஸ்ட் இரண்டாம் வாரம். தாலிபன்கள் காபூல் நகரைக் கைப்பற்றுவதற்கு சில நாள்களுக்கு முன்பு. ஆப்கனின் இரண்டாவது பெரிய நகரமான கந்தஹாரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர் தாலிபன்கள். அந்தச் சமயத்தில் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் புகழ்பெற்ற பத்திரிகையான `வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தியில், ``தாலிபன்கள் இதுவரை கைப்பற்றியிருக்கும் முக்கிய நகரங்களிலுள்ள திருமணம் ஆகாத பெண்களை, கட்டாயப்படுத்தி தங்களது குழுவிலுள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைத்து வருகின்றனர். `இது பாலியல் வன்கொடுமையின் மற்றொரு வடிவம்' என்று மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றனர்'' என்று குறிப்பிட்டிருந்தது வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை!
தாலிபன்கள்
தாலிபன்கள்
`ஷரியத் சட்டம்' சொல்வது என்ன... ஆப்கன் பெண்கள் அச்சப்படுவது ஏன்?!

இந்தநிலையில் ஆப்கனிலிருந்து தப்பிய பெண் பத்திரிகையாளர் ஹாலி மெக்கே (Hollie McKay) என்பவர் அதிர்ச்சி தரும் சில சம்பவங்களை வெளியிட்டிருக்கிறார். `டாலஸ் மார்னிங் நியூஸ்' (Dallas Morning News) செய்தித் தளத்தில் மெக்கே எழுதியிருக்கும் கட்டுரையில், `ஆப்கனில் வீடு வீடாகச் சென்று 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களைக் கட்டாய திருமணம் செய்வதற்காகத் தாலிபன்கள் தேடிவருகின்றனர்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அந்தச் செய்தியில், குண்டூஸ் நகரில் நடந்த சண்டையில் சிக்கி, பின்னர் இடம்பெயர்ந்து வந்தவர்களுக்கான மையத்தில் தஞ்சமடைந்த 14 வயது பெண்ணிடம் பேசியது குறித்தும் எழுதியிருக்கிறார் மெக்கே. அந்த 14 வயது சிறுமி, `நான் படிக்க வேண்டும்; டாக்டர் ஆக வேண்டும்' என்று வேதனையோடு புலம்பியதைப் பதிவு செய்திருக்கிறார் மெக்கே.

ஆப்கனில் தான் சந்தித்த மற்றொரு பெண்ணான ஃபரிஹா ஈசர் பற்றியும் அந்தச் செய்தியில் பதிவிட்டிருக்கிறார் மெக்கே. ஃபரிஹாவை தான் ஏற்கெனவே சந்தித்திருப்பதாகக் குறிப்பிடும் மெக்கே, அவரை ஆப்கன் பெண்களின் குரல் என்றும், அங்கிருக்கும் பெண்களின் கதைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர முயன்றவர் என்றும் நமக்கு அறிமுகம் செய்கிறார்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
தாலிபன்கள் வசமான ஆப்கன்; தப்பியோடும் மக்கள்! கதறி அழும் பெண்கள்! - ஆப்கன் மக்களின் மனநிலை என்ன?!
``ஆப்கனுக்கு வெளியிலிருக்கும் எனது நண்பர்கள் என்னை நாட்டைவிட்டு வெளியேறுமாறு கெஞ்சுகிறார்கள்'' என்று ஃபரிஹா மெக்கேவிடம் கூறியிருக்கிறார். அதற்கு ஃபரிஹா தனது நண்பர்களிடம், ``எனது சகோதரிகள் (ஆப்கன் பெண்களைக் குறிப்பிடுகிறார்) இங்கு சிக்கித் தவிக்கும்போது, நான் மட்டும் எப்படி வெளியேறுவது'' என்று பதில் சொன்னதாகவும் மெக்கே தனது கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ஃபரிஹா தன் தோழி சொன்ன நிகழ்வு ஒன்றையும் மெக்கேவிடம் பகிர்ந்திருக்கிறார். அதில், ``வீடு வீடாகச் சென்று 15 வயதுக்கு மேலுள்ள பெண்களை தாலிபன்கள் திருமணம் செய்வதற்காகத் தேடி வருகின்றனர். அப்படி ஒரு மாதத்துக்கு முன்பு, பதாக்‌ஷான் (Badakhshan) நகரிலுள்ள எனது தோழியின் வீட்டிற்குச் சென்ற தாலிபன்கள், `நாங்கள் இஸ்லாம் மதத்தின் பாதுகாவலர்கள், எங்களில் ஒருவருக்கு உங்கள் பெண்ணை மணந்து கொடுங்கள்' என்று அந்த வீட்டிலிருந்த தந்தையிடம் கோரியிருக்கின்றனர். அவர் ஒப்புக் கொள்வதற்கு முன்பாகவே அந்த வீட்டிலிருந்த 21 வயது பெண்ணை கூட்டிச் சென்றிருக்கின்றனர். திருமணத்துக்குப் பிறகு, அந்தப் பெண்ணை திருமணம் செய்தவர் மட்டுமல்லாமல், வேறு நான்கு பேரும் தினசரி இரவு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இந்த விஷயம் அந்த தந்தைக்குத் தெரியவந்த பின்னர், அந்த மாநில ஆளுநரிடம் சென்று முறையிட்டிருக்கிறார். ஆனால், `எங்களால் ஒன்று செய்ய முடியாது' எனக் கையை விரித்திருக்கிறார் ஆளுநர்'' என்று ஃபரிஹா கூறியதாக மெக்கே பதிவு செய்திருக்கிறார்.

எதுவும் மாறவில்லை. தாலிபன்கள் தாங்கள் மாறிவிட்டதாகக் கூற முயன்றுவருகின்றனர். ஆனால், அவர்கள் மாறவில்லை. மாறவும் மாட்டார்கள். அவர்கள் மனித உரிமைகளுக்கு எதிரானவர்கள்!
ஃபரிஹா ஈசர் சொன்னதாக டலாஸ் மார்னிங் நியூஸ் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் தகவல்.

மேலும், தாலிபன்கள் கட்டாயத் திருமணம் செய்துவருவதால் ஆப்கனிலுள்ள லட்சக் கணக்கான சிறுமிகளும், பெண்களும் அச்சத்திலிருப்பதாகத் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் மெக்கே. இந்தக் கட்டுரை வெளியான நிலையில், 15 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள் மட்டுமல்லாமல், கணவரை இழந்த 45 வயதுக்குள்ளான பெண்களையும் தாலிபன்கள் கட்டாயத் திருமணம் செய்வதற்காகத் தேடி வருகின்றனர் என்ற தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

ஆப்கானிஸ்தான் பெண் பத்திரிகையாளர்
ஆப்கானிஸ்தான் பெண் பத்திரிகையாளர்
ஆப்கன்: `100 தினாருக்குப் பெண்களை விற்றார்களா தாலிபன்கள்?' வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?!
தாலிபன்கள் ஆப்கனை கைப்பற்றிவிட்டதாகச் செய்திகள் வெளியானபோதே, `ஆப்கன் பெண்களின் நிலை இனி என்னவாகும்?' என்ற விவாதங்கள்தான் முதலில் எழுந்தன. இந்த நிலையில், `டலாஸ் மார்னிங் நியூஸ்' கட்டுரையில் வெளியாகியிருக்கும் தகவல்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு, ஆப்கன் பெண்களின் எதிர்காலம் குறித்த கவலைகளையும் அதிகரித்திருக்கின்றன.
அடுத்த கட்டுரைக்கு