பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

மூளுமா மூன்றாம் உலகப்போர்?

சுலைமானி
பிரீமியம் ஸ்டோரி
News
சுலைமானி

அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளின் மீது தொடர்ந்து குறிவைப்பதற்கு அதன் எண்ணெய் வளங்கள்தான் காரணம் என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது வழக்கம்.

லகின் வல்லரசுகள் எடுக்கும் எந்தச் சிறு முடிவும், சர்வதேச அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இன்றைய யதார்த்தம். அதன் காரணமாகவே ஈரானின் ராணுவத் தளபதியை அமெரிக்கா கொன்றால் மூன்றாம் உலகப் போர் மூளுமோ என்ற பதற்றம் பரவுகிறது.

மூளுமா மூன்றாம் உலகப்போர்?
மூளுமா மூன்றாம் உலகப்போர்?

அமெரிக்காவின் குண்டுவீச்சுக்குப் பலியான காசிம் சுலைமானியின் உடலினை அடக்கம் செய்த அதே சூட்டோடு, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தளத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கிறது ஈரான். 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்ததாக ஈரான் சொல்கிறது. ஒருவரும் மரணிக்கவில்லை, பெருமளவில் சேதமில்லை என்று அமெரிக்கா அதை மறுக்கிறது. ஈரான் தாக்குதலுக்கு உலகம் ஒரு கொடூரமான பதில் தாக்குதலை அமெரிக்காவிடம் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, இந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையாக, ஈரான்மீது கடும் பொருளாதாரத் தடையைக் கொண்டுவருவோம் என்ற அறிவிப்பை பதிலாக அளித்து, நாங்கள் ஒரு தீவிரவாதியைத்தான் கொன்றிருக்கிறோம், எங்கள் தேவை உலக அமைதி மட்டுமே என்று ஆட்டுத் தோல் போர்த்திக்கொண்டுள்ளது அமெரிக்கா என்னும் அங்கிள் சாம்.

அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளின் மீது தொடர்ந்து குறிவைப்பதற்கு அதன் எண்ணெய் வளங்கள்தான் காரணம் என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது வழக்கம்.

1970களில் மத்திய கிழக்கு நாடுகளால் அமெரிக்கா சந்தித்த பெரும் சிக்கலே அதற்குக் காரணம். 1974-ல் மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றிணைந்து, இஸ்ரேல் ஆதரவாளரான அமெரிக்கா மீது எண்ணெய்த் தடையை அமல்படுத்தின. இதன் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சிகண்டது. அப்போது தொடங்கியதுதான் அமெரிக்காவிற்கும் ஈரானுக்குமான போர். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா அதன் எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு பெற்றுவிட்டது. அப்படியெனில், உலக அரசியலில் அமெரிக்கா - ஈரான் உறவுச் சிக்கலுக்குக் காரணம் என்ன? ஒன்று ஈகோ. மற்றொன்று உள்ளூர் அரசியல்.

சுலைமானி
சுலைமானி

அமெரிக்கா தன் பலத்தை உலக அரங்கில் நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஈரான் போன்ற ஒரு சிறிய நாடு, அமெரிக்காவை எதிர்ப்பது அதன் பலத்தை கேலிக்குள்ளாக்கும். அதன் காரணமாகவே ஒரு நாட்டின் ராணுவத் தளபதியைத் தீவிரவாதி என அறிவித்து, சுலைமானியைக் கொன்றதை அமெரிக்காவிற்கான பெரும் வெற்றியாகக் கொண்டாடிவருகிறது.

ஈராக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் அமெரிக்கர்களின் அதிகாரத்தையும், மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் அமெரிக்கா தலையிடுவதையும் ஈரான் விரும்பவில்லை. அமெரிக்க ராணுவத்தை அப்பகுதியிலிருந்து வெளியேறச் சொல்லித் தொடர்ந்து வலியுறுத்திய ஈரான், காசிம் சுலைமானி தலைமையில் வலிமையாக, பல தாக்குதல்களின் மூலம் அந்த எதிர்ப்பைப் பதிவு செய்தது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை ஒடுக்கியதில் முக்கியப் பங்குவகித்தவர் சுலைமானி என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 31-ம் தேதி, பாக்தாத் நகரில் அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றிவளைத்த ஆயிரக்கணக்கான அமெரிக்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள், அமெரிக்க அதிகாரிகளைச் சில மணிநேரத்தில் அவர்களின் தூதரகத்திற்கு உள்ளேயே சிறைபிடித்தனர். தூதரகக் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட, அந்தக் கட்டடம் சேதப்படுத்தப்பட்டது. அமெரிக்கா இது தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதியது. காசிம் சுலைமானி கொல்லப்பட்ட, அமெரிக்காவின் டிரோன் தாக்குதலுக்கு இது அதிமுக்கிய காரணம்.

டிரம்ப்
டிரம்ப்

ஒரு அரசியல்வாதியின், சர்வாதிகாரியின் கடைசிப் புகலிடம், தேசியம் என்னும் பெயரில், தன் நாட்டின் பின்னால் ஒளிந்துகொள்வது. டொனால்டு ட்ரம்ப் தற்போது அதைத்தான் செய்கிறார். பராக் ஒபாமா தேர்தலில் வெல்ல, ஈரானுடன் போர் தொடுத்தாலும் தொடுப்பார் என முன்னர் நக்கலடித்த ட்ரம்ப்தான், தற்போது அதே நிலைப்பாட்டை எடுத்து ஈரானுக்கு எதிராகக் கொக்கரிக்கிறார்.

அமெரிக்காவின் உள்ளூர்த் தேர்தல் அரசியலில் ஈரானின் பங்கு மிக முக்கியமானது, அது ஏறத்தாழ இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான தொடர்பை ஒத்திருக்கிறது. அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு நடக்கவிருக்கும் நிலையில், அமெரிக்காவின் பொது எதிரியாக ஒரு நாடு இருக்கும்பட்சத்தில்தான் ‘அமெரிக்க தேசியம்’ அங்கு வாக்குகளைப் பெற்றுத்தரும். அதிபர் ட்ரம்ப்மீதான அரசியல் குற்றத் தீர்மானம் பற்றிய விசாரணை நெருங்கும் நிலையில், இது அமெரிக்க மக்களின் கவனத்தை திசை திருப்பவும் பயன்படும் என்பது சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கும் கருத்து. சுலைமானி இறப்புக்கு ஏவுகணைகள் மூலம் ஈரான் பதில் சொல்லிய போதும், 52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல்களோடு நிறுத்திக்கொண்டது அமெரிக்கா.ஈரானின் புராதனச் சின்னங்கள் மீது ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தலாம் என்னும் ட்ரம்பின் சிந்தனைக்கு அமெரிக்காவின் பென்டகன் அமைப்பு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதேபோல், ஈரான்மீது டிரம்ப் எந்தவிதப் போர் முடிவுகளையும் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது என அறிவித்திருக்கிறார் அமெரிக்கப் பாராளுமன்றத்தின் சபாநாயகரான நான்சி பெலோசி. ஈரானும் `நாங்கள் போரை விரும்பவில்லை, அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’ என இறங்கிவந்திருக்கிறது. இரு நாடுகளும் போரை விரும்பாவிட்டாலும் இந்தியா போன்ற பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் வளரும் நாடுகளுக்குப் பேராபத்தை விளைவிக்கும்.

ஏற்கெனவே ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாதென இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளை அமெரிக்கா நிர்பந்தித்திருந்தது. அதன்மூலம் பெட்ரோல் விலை உயரும் சூழ்நிலை உருவாகும். அதன்மூலம் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயரக்கூடும். சுமார் எண்பது லட்சம் இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கின்றனர். அங்கு பதற்றம் ஏற்பட்டால் அவர்களின் பாதுகாப்பு, வேலை, வர்த்தகம் ஆகியவை கேள்விக்குள்ளாகும். இந்தியாவின் அந்நியச்செலாவணியும் பாதிக்கப்படும்.

இந்த இரு நாட்டு ஈகோவால் 176 பயணிகளுடன் பறந்த உக்ரேனிய விமானம் தீக்கிரையானதுதான் பெருஞ்சோகம். சர்வதேச அரசியலில் அமெரிக்கா - ஈரான் என்கிற இரண்டு நாடுகளுக்கான பிரச்னை உலக அளவில் எதிர்வினைகளை உருவாக்கும். சர்வதேச பரமபத ஆட்டத்தில் பகடை உருட்டுவது அமெரிக்கா எனில், பாம்புகளில் இறங்குவது இந்தியா போன்ற வளரும் நாடுகளே.