Published:Updated:

`ரொம்ப சந்தோஷப்படாதீங்க; புதிய `திகில்’ காத்திருக்கு!’ - புதிய தலைவரை அறிவித்தது ஐ.எஸ்

பக்தாதி தங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்தது, குண்டு வீசித் தகர்த்தது உள்ளிட்ட கடைசி நேரப் பரபர காட்சிகளை அமெரிக்கா வெளியிட்டிருந்தது.

கொல்லப்பட்ட முன்னாள் ஐ.எஸ் தலைவர் பக்தாதி
கொல்லப்பட்ட முன்னாள் ஐ.எஸ் தலைவர் பக்தாதி

மன்னிப்பில்லாத மரண தண்டனை, பெண்களுக்குப் பாலியல் சித்ரவதை, குண்டு வெடிப்புச் சம்பவங்கள், உலக நாடுகளுக்கு அனுப்பப்படும் மிரட்டல்கள் எனக் கடந்த 5 வருடங்களுக்கு மேல் பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்தவர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி. உலக நாடுகளின் மோஸ்ட் வான்டட் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இவர், கடந்த 27 -ம் தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

பக்தாதி மறைந்திருந்த வீடு
பக்தாதி மறைந்திருந்த வீடு
AP

அபுபக்கர் அல் பக்தாதி, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்தார். இந்த நிலையில்தான் அவர் தங்கியிருந்த வீடு தொடர்பான தகவல் கிடைக்க, அதிரடியாகக் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு உதவிய நாய் தொடர்பாகவும் பல தகவல்கள் வெளியாகின. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பக்தாதி தனது இறுதி நேரத்தில் கதறி அழுததாகவும் ஒரு நாயைப் போன்று, கோழையைப் போன்று அல் பக்தாதி உயிரிழந்தார் எனவும் தெரிவித்தார்.

ஒசாமா பின்லேடனுக்கு முடிவுரை எழுதியபோது, அமெரிக்க ராணுவம் அவரின் உடலைக் கடலில் வீசியதாகக் கூறப்பட்டது. `தற்போதும் அதே பாணியைப் பின்பற்றி, பக்தாதியின் உடலும் கடலில் வீசப்பட்டது' என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. மேலும், பக்தாதியைக் கொல்ல நடைபெற்ற இந்தத் தாக்குதலை ட்ரம்ப் நேரலையில் பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பக்தாதி தங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்தது, குண்டு வீசித் தகர்த்தது உள்ளிட்ட கடைசி நேரப் பரபர காட்சிகளை அமெரிக்கா வெளியிட்டிருந்தது. அந்தக் காட்சிகளின்படி, அமெரிக்க விமானங்கள்மீது ஐ.எஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தியது. இதில் அவர்கள் கொல்லப்பட்டனர். பின்னர், அந்த வீடும் குண்டு மூலம் தகர்க்கப்படுகிறது. இந்த வீடியோ வெளியான ஒரு நாளில், புதிய தலைவரை அறிவித்தும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தும் ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளது, ஐ.எஸ் அமைப்பு.

தொடர்ந்து அமைதிகாத்துவந்த ஐ.எஸ் அமைப்பு, நேற்று வெளியிட்ட ஆடியோவில் பக்தாதி கொல்லப்பட்ட தகவலை உறுதிசெய்துள்ளது. இந்த ஆடியோவில், அந்த அமைப்பின் புதிய செய்தித்தொடர்பாளர் அபு ஹம்சா அல் குரோஷி பேசியுள்ளார். முன்னதாக, இந்தப் பொறுப்பில் இருந்தவர் தாக்குதலில் பலியானதாக அமெரிக்கா கூறியுள்ளது.

பக்தாதி
பக்தாதி
Twitter

வெளியான இந்த ஆடியோவில், ``உண்மையான எங்கள் தளபதியின் மரணத்துக்காகத் துக்கப்படுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், பக்தாதியின் மரணம் உறுதி செய்யப்பட்டதும் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் ஒன்றாகக் கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இறங்கியதாகவும் அந்த ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷியைப் புதிய தலைவராக அறிவித்துள்ளது ஐ.எஸ் அமைப்பு. கடந்த சில ஆண்டுகளாக, ஹஷிமி தான் பக்தாதிக்குப் பிறகு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்பட்டுவந்தது. மற்றபடி ஹஷிமி குறித்து வெளி உலகிற்கு அதிகமான தகவல் எதுவும் தெரியவில்லை.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்
ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்

நேற்று வெளியான 7 நிமிடங்கள் ஓடும் அந்த ஆடியோவில், பக்தாதியின் மரணத்துக்குப் பழிதீர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த ஆடியோ குறிப்பில், ``அமெரிக்கா... நீங்கள் ரொம்ப மகிழ்ச்சி அடையத் தேவை இல்லை. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், நீங்கள் இதுவரை திகிலாக நினைத்த விஷயத்தை மறக்கச் செய்யும் அளவுக்கு புதிய திகிலைத் தருவார்” என்று கூறப்பட்டுள்ளது. ஐ.எஸ் அமைப்பின் இந்த எச்சரிக்கை, உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.