Published:Updated:

`இஸ்ரேல் தேர்தல் பிரசாரத்தில் மோடி!' - உயர்ந்த கட்டடங்களை அலங்கரிக்கும் பேனர் விளம்பரம்

மலையரசு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி ஆகியோருடன் நெதன்யாஹு இருக்கும் பேனர்கள் அவரின் லீகுயூட் கட்சித் தலைமை அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

பேனர் விளம்பரம்
பேனர் விளம்பரம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு. அந்நாட்டு வரலாற்றில் அதிக முறை பிரதமராக இருந்தவர். தற்போது மீண்டும் தேர்தலைச் சந்திக்க உள்ளார். செப்டம்பர் 17 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலுக்காக பிரசாரங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன. தற்போது பிரதமராக இருக்கும் பெஞ்சமின் நெதன்யாஹு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின், இந்தியப் பிரதமர் மோடி ஆகியோருடன் நெதன்யாஹு இருக்கும் பேனர்கள் அவரின் லீகுயூட் கட்சித் தலைமை அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

மோடி - நேதன்யாஹு
மோடி - நேதன்யாஹு

வெளிநாட்டு தலைவர்களுடன் தனக்கு நெருக்கமான உறவு, செல்வாக்கு இருப்பதை பறைசாற்றும் விதமாக இப்படி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் நெதன்யாஹு. இந்தப் பிரசாரம் தனக்கு கைகொடுக்கும் என நெதன்யாஹு நம்புவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்தப் புகைப்படத்தை பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட தற்போது இது வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் மிக நீண்டகாலமாக தொடர்பு இருந்து வருகிறது. ராணுவத் தளவாடங்கள் பலவற்றையும் இஸ்ரேலிடமிருந்துதான் இந்தியா வாங்குகிறது. இதைவிட முக்கியம் நெதன்யாஹுவுக்கும் மோடிக்கும் இடையே இருக்கும் நட்பு. கடந்த 2017ம் ஆண்டு மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் பயணமானார்.

மோடி - நேதன்யாஹு
மோடி - நேதன்யாஹு

இஸ்ரேல் செல்லும் முதல் இந்திய பிரதமர் என்பதால் மட்டுமல்லாமல் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பால் விமான நிலையத்துக்கே சென்ற நெதன்யாஹூ அமெரிக்க அதிபர், போப் ஆண்டவருக்கு இணையாக மோடிக்கும் உற்சாக வரவேற்பு அளித்து அசத்தினார். அதேபோல்தான் நெதன்யாஹூ இந்தியா வரும்போது மோடி வரவேற்பு கொடுத்தார். 2014ம் ஆண்டும், 2019ம் ஆண்டும் மோடி பிரதமரானதும் முதல் ஆளாக வாழ்த்திய வெளிநாட்டுத் தலைவர் என்றால் அது நெதன்யாஹுதான் என்பது குறிப்பிடத்தக்கது.