Published:Updated:

`பணத்துக்காக இப்படிச் செய்ததாகவே தோன்றுகிறது!’ - மகளை விமர்சிக்கும் மேகனின் தந்தை

ஹாரி - மேகன்
ஹாரி - மேகன்

`ஹாரி - மேகன் தம்பதி அரச குடும்பத்திலிருந்து வெளியேறியதைப் பார்த்தால் பணத்துக்காகச் செல்கிறார்களோ என்றே நினைக்கத் தோன்றுகிறது’ என மேகனின் தந்தை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அவரின் மனைவி மேகனும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ஹாரி மற்றும் மேகன் தம்பதி வடஅமெரிக்காவில் சுதந்திரமாக வாழ விரும்புவதாக விளக்கம் அளித்திருந்தனர். இவர்களின் விருப்பத்துக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத்தும் சம்மதம் தெரிவித்துவிட்டார். கடந்த வாரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது இதை அறிவித்தார் ராணி.

இங்கிலாந்து ராணியுடன் இளவரசர்
இங்கிலாந்து ராணியுடன் இளவரசர்

இளவரசர் ஹாரி குடும்பத்தைவிட்டு வெளியேறுவதால் அரச குடும்பத்தில் உள்ள அவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்த ராணி எலிசபெத், `ஹாரி, மேகன் மற்றும் ஆர்ச்சி ஆகிய மூவரும் எப்போதும் இங்கிலாந்து குடும்பத்தின் விருப்பமானவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் அனுபவித்த பல சவால்களை நான் உணர்கிறேன். மேலும், சுதந்திரமான வாழ்க்கைக்கான அவர்களின் விருப்பத்தை ஆதரிக்கிறேன்.

`தனியுரிமை; மேகனின் நட்பு; கனடா கலாசாரம்!’- இங்கிலாந்து இளவரசரின் வட அமெரிக்கப் பின்னணி?

ஹாரி தொடர்ந்து இளவரசராக இருக்கலாம். வடஅமெரிக்காவில் அவர்கள் தொடங்கவுள்ள புது வாழ்க்கையில் டியூக், டச்சஸ் ( Duke and Duchess) பட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், வருங்காலத்தில் அரச நிகழ்வுகள், அரச குடும்பம் சார்ந்த சுற்றுப் பயணங்களில் கலந்துகொள்ள முடியாது' என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இது அரச குடும்பத்திலிருந்து பதவி விலகுவது என்ற பொருள்படும் எனக் கூறப்படுகிறது.

மேகன் - ஹாரி
மேகன் - ஹாரி

ராணியின் இந்த அறிக்கை வெளியான மறுநாளே தன் மகள் மேகனைப் பற்றி தந்தை தாமஸ் மார்க்லே (Thomas Markle) பேசியுள்ளார்.

இங்கிலாந்தின் `சேனல் 5' என்ற ஊடகம் எடுக்கும் ஆவணப்படத்தில் மேகன் மற்றும் ஹாரியின் முடிவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. வரும் வாரங்களில் முழு படமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

`அரச குடும்பத்திலிருந்து வெளியேறுகிறோம்!’ - இங்கிலாந்து ராணிக்கு அதிர்ச்சி கொடுத்த இளவரசர்

அதில் பேசியுள்ள தாமஸ், ``இவர்களின் முடிவு மிகவும் ஏமாற்றமளிக்கிறது. அனைத்து பெண்களும் தாங்கள் ஒரு இளவரசியாக வேண்டும் என்றே விரும்புவார்கள். அப்படியான ஒரு வாழ்வு மேகனுக்குக் கிடைத்தது. ஆனால், தற்போது அவர் அதைத் தூக்கி எறிந்துவிட்டார். இதைப் பார்க்கும்போது பணத்துக்காகத்தான் மேகன் தன் அரச வாழ்க்கையைத் தூக்கி எறிந்தார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. மேகன் எடுத்துள்ள முடிவின் மூலம் அனைத்து பெண்களின் கனவும் சிதைந்துவிட்டது.

மேகனின் தந்தை தாமஸ்
மேகனின் தந்தை தாமஸ்

அரச குடும்பம் நீண்ட காலமாகத் தங்கள் பாரம்பர்யத்துடன் உள்ளது. ஆனால், இவர்கள் அதை அழித்து, இழிவாக்கிவிட்டார்கள். இது கேலிக்குரிய ஒன்று. அவர்கள் இப்படிச் செய்திருக்கக் கூடாது. அவர்கள் என்னை அணுகக் கூடாது என்று நினைக்கிறேன். குறிப்பாக, தற்போது ஹாரி மற்றும் மேகன் ஆகிய இருவரும் உயிர் இழந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் வெளியுலகில் என்ன தேடுகிறார்கள் எனத் தெரியவில்லை. அவர்கள் என்ன தேடுகிறார்கள் என்பதை அவர்கள் அறியவில்லை என்றே நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு