Published:Updated:

`மிருகக்காட்சி சாலையில் யாதுமற்று திரியும் விலங்குபோல் இருந்தேன்!’ - இளமைக்காலம் குறித்து ஹாரி

ஹாரி
ஹாரி ( ap )

``எனது இளமைக்காலத்தில், எனக்குப் பல்வேறு சலுகைகளும், மரியாதையும், அதிகாரமும் கிடைத்தாலும்கூட, நான் முற்றிலும் உதவியற்றவனாகவே இருந்திருக்கிறேன்” என்கிறார் ஹாரி.

``அரசு குடும்பத்தில் வளர்ந்தது ராஜபோகமாக இருந்தாலும்கூட, மற்றொரு வகையில் அங்கு எனது பால்ய நாள்கள் பெரும்பாலும் நான் ஒரு மிருகக்காட்சி சாலையில் இருப்பது போன்ற உணர்வையே எனக்கு தந்தன” என்று தனது வாழ்வின் சில முக்கிய நிகழ்வுகளை பிரபல நிகழ்வில் மனம் திறந்துள்ளார் ஹாரி.

2018-ம் ஆண்டு திருமணமான அரச குடும்பத்தைச் சேர்ந்த ஹாரி - மேகன் மார்கல் தம்பதியர் கடந்த ஆண்டு அரச குடும்பத்திலிருந்தும், அரண்மனையின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தங்களை விடுவித்துக்கொண்டு கலிஃபோர்னியாவில் தங்களது குழந்தைகளுடன் குடியேறினர்.

ஹாரி - மேகன்
ஹாரி - மேகன்

அதன் பிறகு கடந்த மார்ச் மாதம் பிரபல ஆங்கிலத் தொகுப்பாளினி ஓப்ரா வின்ஃப்ரேவின் சிறப்புப் பேட்டியில், அரச குடும்பத்தில் நிலவும் சூழல் குறித்தும், அங்குள்ள அதிகாரிகளின் நடத்தை குறித்தும் வெளிப்படையாகப் பல்வேறு விஷயங்களை தெரிவித்தனர் ஹாரி - மேகன் மார்கல் தம்பதியினர். அதில், அரண்மனையில் தான் நிற வெறிக்கு ஆளானதாக மேகன் மார்கல் கூறிய கருத்துகள், அரச குடும்பத்தினர் மத்தியிலும், பொதுவெளியிலும் பெரும் சர்ச்சை அலைகளை கிளப்பின.

இந்தநிலையில், தற்போது மற்றொரு நிகழ்வில் ஹாரி, தனது இளமைக்கால நிகழ்வுகள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

ஹாரி
ஹாரி

இது குறித்து அவர் விவரிக்கையில், “எனது இளமைக்காலத்தில், எனக்குப் பல்வேறு சலுகைகளும், மரியாதையும், அதிகாரமும் கிடைத்தாலும்கூட, நான் முற்றிலும் உதவியற்றவனாகவே இருந்தேன். நிறைய நேரங்களில் தனிமையின் வலியை உணர்ந்திருக்கிறேன். ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தபோதிலும் அது எனக்கு நிம்மதியை தேடித் தரவில்லை.

அரச குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் உலகெங்குமுள்ள ஊடகத்தின் கண்கள் எப்போதும் என்னைச் சுற்றியே இருந்தன. எங்கு சென்றாலும் கேமராவின் கண்கள் எங்களைத் துரத்திக்கொண்டே இருந்தன. இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்வது எப்படி என்று தெரியாமல் திணறினேன். பின்னர் எனது வாலிபப் பருவத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டு அதிகப்படியான மதுவுக்கு அடிமையாகிப்போனேன். சொல்லப்போனால், எனது 20-வது வயது வரை நான் எந்தவொரு விழிப்புணர்வுமின்றி, எனக்கான கருத்துகளை பொதுவெளியில் வெளிப்படுத்தத் தெரியாதவனாகவே இருந்திருக்கிறேன்” என்றார்.

ஹாரி
ஹாரி
Jordan Strauss

தொடர்ந்து பேசியவர், ``அரண்மனையில் நான் வாழ்ந்த வாழ்க்கை ராஜபோகமாக இருந்தாலும்கூட, பெரும்பாலும் ஒரு மிருகக்காட்சி சாலையில் யாதுமற்று திரியும் விலங்கைப்போலவே எனக்கு அது இருந்தது. மேகன் மார்கல் என் வாழ்வில் வந்த பிறகுதான் ஒவ்வொன்றாக மாறியது. என்னைப் பற்றி நன்கு அறிந்தவர் அவர். நான் இப்போது எவ்வித மனநிலையில் இருக்கிறேன் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். எரிச்சலூட்டும் வகையில் நான் ஏதாவது செயல்களைச் செய்தாலும்கூட அதை வெளிப்படையாக என்னிடம் தெரிவித்து, அதைத் திருத்திக்கொள்ள அறிவுரைகளை தெரிவிப்பார். எனக்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறார்” என்று நெகிழ்வான வார்த்தைகளுடன் பேசியிருக்கிறார் ஹாரி.

அடுத்த கட்டுரைக்கு