Published:Updated:

`சீனா நினைத்திருந்தால் கொரோனாவை அழித்திருக்க முடியும், ஆனால்..!’ - சந்தேகம் எழுப்பும் ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

கொரோனா வைரஸ் பரவியது மிகவும் கொடூரமான விஷயம். இது சீனாவின் தவறாகவே இருக்க முடியும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் நகரிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று மொத்த மனிதக்குலத்தையும் வீட்டுச் சிறையில் அடைத்துவைத்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2,76,000-த்தை தாண்டிவிட்டது. வைரஸ் பிடியில் இருந்து மீண்டு வர உலக நாடுகள் கடுமையான போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா உலக நாடுகள்
கொரோனா உலக நாடுகள்

அதிலும் குறிப்பாக வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அமெரிக்காவில் சுமார் 13 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 78,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் வைரஸைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அனைத்து நாட்டின் பொருளாதாரமும் கடுமையான சரிவில் உள்ளது. இந்த அனைத்துப் பாதிப்புகளுக்கும் சீனாதான் காரணம் எனப் பெரும்பாலான நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன. சீனாவில் முதன்முதலாக வைரஸ் உறுதி செய்தபோது அது தொடர்பான முறையான எச்சரிக்கை மற்றும் அறிவிப்பு வெளியிடவில்லை என விமர்சித்து வருகின்றனர்.

`சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் உருவானதற்கு ஆதாரம் உள்ளது!’ - ட்ரம்ப் அதிரடி

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. உலகம் தற்போது மோசமான நிலையைச் சந்தித்திருப்பதற்கு முற்றிலும் சீனாதான் காரணம் என அதிபர் ட்ரம்ப் கூறிவருகிறார். இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப், மீண்டும் சீனாவைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். “உலகம் முழுவதும் வைரஸ் பரவியது சீனாவின் பயங்கரமான தவறாக இருக்க வேண்டும் அல்லது அவர்களின் இயலாமையால் இது பரவியிருக்க வேண்டும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

இது நம் நாட்டுக்கு நிகழ்ந்த மிகவும் பயங்கரமான விஷயம். கொரோனா தோன்றிய இடத்திலேயே அதைத் தடுத்து நிறுத்தி அழித்திருக்க முடியும். அதைச் செய்வது மிகவும் சுலபமானதுதான். ஆனால் இடையில் ஏதோ நடந்துள்ளது, நிச்சயமாகக் கூறுகிறேன் ஏதோ நடந்துள்ளது. சீனாவும் வைரஸ் பற்றி வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை, உலக சுகாதார அமைப்பும் வைரஸ் பற்றி முறையாக எச்சரிக்கவில்லை. கொரோனா விஷயத்தில் உலக சுகாதார அமைப்பு உள்நோக்கத்துடன் செயல்படுவதாக நான் நினைக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ஜீன் தோற்றம் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்; ஆய்வகத்தை மூடிய சீனா’ - வெள்ளை மாளிகை பகிரங்க குற்றச்சாட்டு

இருந்தும் அவர்கள் இயலாமையால் எதுவும் செய்யாமல் இருந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் செயல் தற்போது வெளியில் வந்துவிட்டது. அவர்கள் மீது நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆளும் குடியரசு கட்சியின் நாடாளுமன்ற தலைவர் கெவின் மெக்கெர்தி, சீனாவுக்கு எதிரான பணிக் குழுவை உருவாக்குவதாக அறிவித்துள்ளார். இது பற்றிப் பேசிய அவர், “சீனா கொரோனாவைப் பற்றி மறைத்தது இந்த நெருக்கடிக்கு நேரடியாக வழிவகுத்துவிட்டது என்பது தெளிவாகிவிட்டது. சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் தவற்றை மறைத்து அமெரிக்கா மீது பழிசுமத்தும் பிரசாரம் நடத்தி வருகிறது. எனவே கொரோனா தொடர்பாக சீனாவில் என்ன நடந்தது என்பது பற்றி சர்வதேச நிபுணர்கள் விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு