Published:Updated:

`கடைசி யுத்த நேரம் வந்துவிட்டது..!' - பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

சத்யா கோபாலன்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடக்கும் என அந்நாட்டு அமைச்சர் அறிவித்துள்ளார்.

Sheikh Rasheed
Sheikh Rasheed ( Twitter/@ShkhRasheed )

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து பாகிஸ்தான் இந்தியாவுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. பாகிஸ்தானின் வான்வெளியில் எந்த இந்திய விமானமும் பறக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா வரை கொண்டு சென்றது எனப் பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

Modi
Modi

இந்நிலையில் இவை அனைத்துக்கும் மேலாக இந்தியா - பாகிஸ்தான் இடையே விரைவில் போர் ஏற்படும் எனப் பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் ஷேக் ரஷீத் இந்தக் கருத்தைக் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஷ்மீர் விவகாரம்... தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான்!

நிகழ்ச்சியில் பேசிய ஷேக் ரஷீத், ``காஷ்மீர் விடுதலைக்கான கடைசி யுத்த நேரம் வந்துவிட்டது. இதுதான் இந்தியாவுடன் நடக்கும் முழு மற்றும் இறுதிப் போராக இருக்கும். அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் போர் உருவாகும் வாய்ப்புள்ளது. இவை அனைத்துக்கும் இந்தியப் பிரதமர் மோடிதான் முழு காரணம். காஷ்மீரின் விதி அங்கு வாழும் மக்களால் தீர்மானிக்கப்படும், ஐக்கிய நாடுகளின் சபையால் இல்லை.

Imran Khan - Sheikh Rasheed
Imran Khan - Sheikh Rasheed
Twitter/@ShkhRasheed

காஷ்மீர் பிரச்னையில் சீனாவைப் போன்ற ஒரு நட்பு நாடு எங்கள் பக்கம் இருப்பது எங்களின் அதிர்ஷ்டம். பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் இந்தியாவின் ஆதிக்க வடிவமைப்புகளுக்குப் பாகிஸ்தானை ஒரே தடையாக பார்க்கிறார் மோடி. அவரால்தான் இன்று காஷ்மீர் அழிவின் விளிம்பில் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைச் சர்வதேச விவகாரமாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அவர்களுக்குப் பிற நாடுகளில் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் இன்று பாகிஸ்தானின் கராச்சி அருகே உள்ள சோன்மியானி ஏவுகணை சோதனை தளத்திலிருந்து அணு ஆயுத சோதனை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதாகக் கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.