Published:Updated:

அமெரிக்கா : `1.55 லட்சம் உயிரிழப்புகள்!’ - கட்டுப்பாட்டில் உள்ளதாக ட்ரம்ப் தகவல்

அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

``கடந்த இரண்டு வாரங்களின் தரவுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சராசரியாக ஒவ்வொரு நாளும் அதாவது ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் சுமார் 5,900 பேர் உயிரிழந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.”

கொரோன வைரஸ் பாதிப்பால் உலகமே திணறி வருகிறது. ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட பல நாடுகளும் வைரஸ் பாதிப்பில் இருந்து தற்போது மீண்டு வருகின்றன. ஆனால், அலட்சியமாக இருந்த பல நாடுகளிலும் கொரோனா கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பரவலை கட்டுப்படுத்த முடியாமல் இந்த நாடுகள் திணறி வருகின்றன. இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களின் தரவுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சராசரியாக ஒவ்வொரு நாளும் அதாவது, ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் சுமார் 5,900 பேர் உயிரிழந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணக்கின்படி, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 247 பேர் அதாவது 15 விநாடிக்கு ஒரு நபர் உயிரிழப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

கொரோனா வைரஸ் - அமெரிக்கா
கொரோனா வைரஸ் - அமெரிக்கா

அமெரிக்கா குறிப்பாக கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. மிகவும் மோசமான நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்காவில் 1,55,000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். இதனால், எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்யவில்லை என்று அர்த்தமாகாது. எவ்வளவு இதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமோ அவ்வளவு கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். இது ஒரு பயங்கரமான தொற்று நோய்” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இதுவரை 47 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா: `இந்தியாவில் வைரஸ் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது!' - அதிபர் ட்ரம்ப்

பிரேசில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் மிக அதிக பாதிப்பு அடைந்துள்ளது. அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவும் வைரஸ் பரவலைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தனது கருத்துகளைத் தெரிவித்து வந்தார். அவரும் அவரது அமைச்சரவையில் உள்ளவர்களும் வைரஸால் பாதிப்படைந்தபோதும்கூட பொருளாதார நடவடிக்கைகள் குறித்தே தனது கருத்தை வெளிப்படுத்தி வந்தார். லத்தின் அமெரிக்க பகுதிகள் இந்த வைரஸ் மிகவும் மெதுவாகவே பரவத் தொடங்கியது. பின்னர், மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. வறுமையான சூழ்நிலை மற்றும் அடர்த்தியான மக்கள் தொகை ஆகியவற்றின் காரணமாக பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் மிகவும் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

கொரோனா
கொரோனா
Unsplash

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் 100 மில்லியனுக்கு அதிகமாக குடிசைப் பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் தொற்றுநோய் நெருக்கடியிலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், இவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் குறைவான அளவிலேயே இருந்து வருகின்றன. இதற்கு அடுத்தடியாக இந்தியா கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. ஆஸ்திரேலியா, ஜப்பான், ஹாங்காங், பொலிவியா, சூடான், பல்கேரியா, பெல்ஜியம், இஸ்ரேல் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. உலகளவில் பாதிப்பு எண்ணிக்கையானது 1.85 கோடியைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.

அதிபர் ட்ரம்ப்: `தேர்தலைத் தள்ளி வைக்கும் ஆலோசனை!’ - வலுக்கும் எதிர்ப்புகள்
அடுத்த கட்டுரைக்கு