Published:Updated:

`ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமல்ல, ஜெசிந்தாவும் வைரல்தான்!' இணையத்தைக் கலக்கும் நியூசிலாந்து பிரதமர்!

ஜெசிந்தா ஆர்டர்ன்
ஜெசிந்தா ஆர்டர்ன்

சமீபத்தில் தனது இரண்டு ஆண்டுக்கால ஆட்சியில் செய்த சாதனைகளைப் பற்றி ஜாலியான 2 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஜெசிந்தா. இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் செம வைரல்.

திரை பிரபலங்கள் என்றில்லை சில நேரங்களில் அரசியல்வாதிகளுக்குக்கூட உலகமெங்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அதற்குச் சான்றுதான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கனடாவில் ஏதேனும் பேசினால் தமிழகத்தில் வைரலாகும் ஆள் அவர். இவருக்கு டஃப் கொடுக்க இன்னொரு பிரதமர் வந்திருக்கிறார். அவர்தான் நியூசிலாந்தின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டர்ன்.

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

சமீபத்தில் தனது இரண்டு ஆண்டுக்கால ஆட்சியில் செய்த சாதனைகளைப் பற்றி ஜாலியான 2 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஜெசிந்தா. இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் செம வைரல். இந்த ஒரு வீடியோ மட்டுமல்ல; சமீபகாலத்தில் ஜஸ்டின் ட்ரூடோவின் வீடியோக்களைப்போல ஜெசிந்தாவின் வீடியோக்களும் இணையத்தில் மிகுந்த வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளன.

மேலே குறிப்பிட்ட 2 நிமிட வீடியோவில் சிவப்பு நிற ஆடையில் கறுப்பு கோட் அணிந்து சிரித்த முகத்துடன் தன்னம்பிக்கையோடு தோற்றமளிக்கும் ஜெசிந்தா, ``எனக்கு ஒரு சவால் கொடுக்கப்பட்டிருக்கிறது. என் இரண்டு ஆண்டுக்கால சாதனையை 2 நிமிடங்களில் நான் கூறப்போகிறேன்" என்றதும் ஓரத்தில் ஸ்டாப் வாட்ச் ஓட ஆரம்பிக்கிறது.

அடுத்த 2 நிமிடங்கள் மூச்சுவிடாமல் வி.ஐ.பி படத்தில் வசனம் பேசும் தனுஷைவிட வேகமாகப் பேசத்தொடங்குகிறார் ஜெசிந்தா. ``அனைத்துச் சாதனைகளையும் இங்கு என்னால் கூற முடியாது, மிக முக்கியமானவற்றை மட்டும் இங்கு கூறுகிறேன்" என்று ஆரம்பித்த அவர் 92,000 பேருக்கு வேலை, மாநில உதவித்தொகையில் 2,200 வீடுகள், சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக்குக்குத் தடை, 140 மில்லியன் புதிய மரக்கன்றுகள், உயர்ந்த மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாட்டில் கார்பன் வெளியேற்றத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, முன்னேறிய புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள், மனநலத்துக்கு முக்கியத்துவம், பள்ளிகளுக்கு அதிக நிதி, பள்ளிகளில் இலவச மதிய உணவு , சுத்தமாக்கப்பட்ட நீர்நிலைகள், சம்பளத்துடன் பெற்றோர்களுக்குப் பேறு கால விடுப்பு என்று நீண்ட பட்டியலை 2 நிமிடங்களில் கடகடவென கூறி முடிக்கிறார்.

கடந்த மார்ச் மாதம், நியூசிலாந்தில் உள்ள கிரைஸ்ட் சர்ச் மசூதியில் 51 பேர் கொல்லப்பட்டனர். அமைதிக்காகப் பெயர்பெற்ற நியூசிலாந்தில் இப்படி ஒரு தீவிரவாத தாக்குதல் நடந்தது உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தினால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

``நம் முஸ்லீம் தோழர்கள் இறப்புக்கு யார் காரணம் என்பது நமக்குத் தெரியும். அவன் ஒரு தீவிரவாதி, பெரும் குற்றம் இழைத்த குற்றவாளி. உயிரை எடுத்தவன் பெயரைச் சொல்வதைவிட உயிரை இழந்தவர்களின் பெயர்களை இங்கே உச்சரிப்போம், அவர்களுக்கு மரியாதை செய்வோம். அவன் பெயரைச் சொல்லக்கூட எனக்கு விருப்பமில்லை" என்ற அவரது ஆக்ரோஷ உரை உலகமெங்கும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்தது.

இதற்குப் பின் இந்தத் தீவிரவாத சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் நிகழ்ச்சி ஒன்று நினைவிடத்தில் நடந்தது. அதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அதில் தன் அனுதாபத்தைத் தெரிவிக்கும் விதமாகக் கறுப்பு நிற ஆடையை அணிந்து வந்திருந்தார் ஜெசிந்தா. அவர் அங்கு நிகழ்த்திய உரையில் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் பொருள் பொதிந்தாகவும் மனதை உருக்குவதாகவும் அமைந்தது. அவர் உரையைக் கேட்ட மக்கள் பலரும் கண்ணீர் சிந்தினர்.

Vikatan

இப்படித் தனது அனைத்துச் செயல்களிலும் நெட்டிசன்களின் அபிமானத்தைப் பெற்றுவருகிறார் ஜெசிந்தா. இதற்குப் பின் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட பதிவும் உலகப் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகமெங்கும் வெறுப்பரசியல் தலைதூக்கும் இன்றைய நாளில் ஜெசிந்தா போன்ற பாசிட்டிவ் தலைவர்களுக்குத்தான் பஞ்சம் நிலவுகிறது. இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் உங்கள் சிறந்த பணியை இதே உத்வேகத்துடன் தொடர்ந்து சிறப்பாகச் செய்து, கலக்குங்க ஜெசிந்தா!

அடுத்த கட்டுரைக்கு