Published:Updated:

ஜெசிந்தா... நியூசிலாந்தின் புதிய அலை!

கௌரவ் ஷர்மா - ஜெசிந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
கௌரவ் ஷர்மா - ஜெசிந்தா

நியூசிலாந்தில், கடந்த பல ஆண்டுகளாகக் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது.

புன்னகை பூத்துக் குலுங்கும் முகம், தெளிந்த சிந்தனை, கனிந்த பார்வை, அனைவரையும் அரவணைக்கும் அணுகுமுறை... இவைதான் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் அடையாளம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தொழிலாளர் கட்சியின் தலைவரான, 40 வயதேயான ஜெசிந்தா தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்தலில் வென்று, அந்நாட்டின் பிரதமராகி, நியூசிலாந்து நாடாளுமன்ற வரலாற்றில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிவாகை சூடியிருக்கிறார். நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 120. இந்தத் தேர்தலில் 64 தொகுதிகளைக் கைப்பற்றி, 49.1 சதவிகித வாக்குகளைப் பெற்று, புதிய சாதனையுடன் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறார். இந்த வாக்கு சதவிகிதமும், வென்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் 1942-ம் ஆண்டுக்குப் பிறகு வேறெந்தக் கட்சியும் எட்டாத சாதனை.

படிப்படியான முன்னேற்றம்

நியூசிலாந்தில், கடந்த பல ஆண்டுகளாகக் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது. 2017-ம் ஆண்டு தேர்தலில் ‘தொழிலாளர் கட்சி’க்கு 46 இடங்கள் மட்டுமே கிடைத்தன, ‘நியூசிலாந்து ஃபர்ஸ்ட் பார்ட்டி’ மற்றும் ‘கிரீன் பார்ட்டி’ ஆதரவுடன் கூட்டணி ஆட்சியைத் திறம்பட நடத்திய ஜெசிந்தாவுக்கு, தற்போதைய தனித்துவமான வெற்றியைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள் அந்நாட்டு மக்கள். “நியூசிலாந்து மக்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குத் தலை வணங்குகிறேன்” என்று நெகிழ்ந்து கூறியிருக்கும் ஜெசிந்தா, நியூசிலாந்து நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர்!

ஹாமில்டன் என்ற ஊரில் பிறந்த ஜெசிந்தாவின் அப்பா ஒரு காவல்துறை அதிகாரி. அம்மா ஒரு பள்ளிக்கூட உணவு விடுதியின் உதவியாளர். பள்ளியில் படித்துவந்த ஜெசிந்தா, தன் 14 வயதிலேயே வகுப்பு நேரத்துக்குப் பிறகு, மீன் மற்றும் சிப்ஸ் விற்கும் கடை ஒன்றில் வேலை செய்துவந்தார். தொழிலாளர் கட்சியின் உறுப்பினரும், இடதுசாரி சிந்தனை கொண்டவருமான அவருடைய அத்தை மேரிதான் ஜெசிந்தாவை அரசியலுக்கு அழைத்து வந்தார். அரசியலில் ஜெசிந்தாவின் வளர்ச்சி படிப்படியாக நிகழ்ந்தது.

2001-ம் ஆண்டு, அரசியல் மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் பட்டம் பெற்ற ஜெசிந்தா, நியூசிலாந்து நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராக இருந்த ஹெலன் கிளார்க்கின் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சர் பில் கோப்பிடம் பணியாற்றினார். பிறகு, லண்டனில் சிறிது காலம் பணியாற்றிய அவர், நியூசிலாந்து நாட்டில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ம் ஆண்டு, தனது 37-வது வயதில் ‘தொழிலாளர் கட்சி’யின் தலைவரான ஜெசிந்தா, அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரானார்.

ஜெசிந்தா
ஜெசிந்தா

நம்பிக்கை நாயகி

2019-ம் ஆண்டு, மார்ச் மாதம் கிறிஸ்ட்சர்ச் நகரில் ஒரு பள்ளிவாசலில் தொழுகை நடத்திக்கொண்டிருந்தவர்கள்மீது தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் 49 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‘நாட்டில் இனி துப்பாக்கிக் கலாசாரத்துக்கு முடிவுகட்டப்போகிறேன்’ என்று அதிரடியாகக் கூறியவர், பல தடைகளையும் கட்டுப்பாடு களையும் கொண்டுவந்து மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு பம்பரம்போலச் சுழன்று வேலைகளைச் செய்தார். 50 லட்சம் மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்தில், சில நூறு பேருக்கு மட்டுமே நோய்த்தொற்று ஏற்பட்டது. உலக நாடுகளே வியக்கும்விதத்தில் நடவடிக்கைகளைத் தெறிக்கவிட்டார் ஜெசிந்தா. மக்களோடு நெருக்கம், நடவடிக்கைகளில் துரிதம், தெளிவான திட்டம் என்று சுழன்றடித்த ஜெசிந்தாவின் அரசியல் அணுகுமுறை கண்டு எதிர்க்கட்சிகள் வாயடைத்துப் போயின.

உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கைக் கடுமையாக்கிய நேரத்தில், மே 11-ம் தேதி ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்து பொருளாதாரத்தை ஓரளவுக்குப் பாதுகாத்துக் கொண்டார். அப்போது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 59.5% பேர் அவருடைய செயல்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போதே மக்களின் மனம் கவர்ந்த பிரதமராக அவர் மாறியிருந்தார்.

வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடனை வாரி வழங்கினார். இதனால், பொருளாதாரம் சரிவடையாமலிருந்தது. வேலைவாய்ப்பு, அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்குச் சலுகைகள் எனத் தேர்தல் அறிவிப்புகள் வாக்காளர்களை அவரது பக்கம் திருப்பின. பொருளாதாரத்தை உயர்த்தும்விதத்தில் ‘1,80,000 டாலருக்கு அதிகமாக வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி கட்ட வேண்டும்’ என்ற அறிவிப்பு நடுத்தர மக்களைக் கவர்ந்தது. தனது தேர்தல் வெற்றிக்குப் பிறகு உரையாற்றிய ஜெசிந்தா, “இந்த அரசு நியூசிலாந்து மக்கள் அனைவருக்கு மானது” என்று அறிவித்து உற்சாகப்படுத்தினார்.

`சற்றே மீண்டு மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும் பொருளாதாரத்தை எழுப்பி முடுக்க வேண்டும்’, `மக்களின் அளவுகடந்த எதிர்பார்ப்புகள் பலவற்றை நிறைவேற்ற வேண்டும்’ எனப் பல சவால்கள் ஜெசிந்தாவின் முன் இருக்கின்றன. `முன்பைப்போலவே தெளிவான திட்டங்களால் அவற்றைச் சமாளித்து முன்செல்வார்’ என்கின்றனர் நியூசிலாந்தின் அரசியல் நோக்கர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜெசிந்தாவின் அமைச்சரவையில் இந்தியர்!

ஜெசிந்தா... நியூசிலாந்தின் புதிய அலை!

இமாச்சலப்பிரதேசத்திலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு ஹாமில்டனில் குடியேறிய மருத்துவர் கௌரவ் ஷர்மா, ஹாமில்டன் மேற்குத் தொகுதியிலிருந்து ‘தொழிலாளர் கட்சி’ சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அந்தப் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் குணப்படுத்தி, தீவிரத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மக்களின் மனதை வென்ற ஷர்மாவை அந்தத் தொகுதி மக்கள் வெற்றிபெறச் செய்துள்ளனர். ஜெசிந்தா அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் இவருக்கு ஓர் இடம் இருக்கும் என்று கூறப்படுகிறது.