Published:Updated:

`புரட்சியாளரின் பேரன்; இந்தியாவுடன் கசப்பான அனுபவம்!'-யார் இந்த கனடாவின் `கிங்மேக்கர்' ஜக்மீத் சிங்?

ஜக்மீத் சிங்
ஜக்மீத் சிங்

பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தார், ஜக்மீத். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் ஜக்மீத்தை சீண்டிக்கொண்டே இருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் குறித்து கடும் இடையூறுகொடுத்த அந்த நபருக்கு, மிகப் பொறுமையாக பதிலளித்தார் ஜக்மீத்.

கனடா நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு 1972. ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ, மைனாரிட்டி அரசாக இரண்டாம் முறை பிரதமராகப் பதவியேற்றார். இதே வரலாறு தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. கனடா நாட்டின் ஜனநாயகத் திருவிழா, கடந்த திங்கள்கிழமை நடந்துமுடிந்தது. கனடாவில் மொத்தமுள்ள 338 எம்.பி. தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் லிபரல் கட்சி அதிகபட்சமாக 157 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

மற்ற கட்சிகளான பிளாக் கியூபெகோயிஸ் 32 இடங்களையும், கனடா வாழ் இந்தியர் ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி 24 இடங்களையும், கிரீன் கட்சி 3, சுயேச்சை ஒரு இடத்தையும் வென்றுள்ளன. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்ற நிலையில், ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 13 இடங்கள் தேவைப்படுகிறது. பிளாக் கியூபெகோயிஸ் ஃபார்ட்டியோ ட்ரூடோவைக் கைவிட, ஆபத்பாந்தவனாக அவருக்கு உதவி, கனடாவின் கிங்மேக்கர் ஆகியுள்ளார் இந்தியரான ஜக்மீத் சிங்.

`நான் செய்திருக்கக் கூடாது!' - 18 வருடங்களுக்குப் பிறகு இனவெறிக்கு மன்னிப்பு கேட்ட ட்ரூடோ

யார் இந்த ஜக்மீத் சிங்?

புலம்பெயர்ந்தவர்களின் தேசம் என்றால், கண்ணை மூடிக்கொண்டு கனடா நாட்டைச் சொல்லலாம். ஆதரவற்றவர்களுக்குத் தாராளமாக இடம் மட்டுமல்ல அரசியல் உரிமைகளையும் கொடுக்கும் கருணைமிக்க நாடான கனடாவில் இன, மொழி போன்ற பேதங்களுக்கு இடமில்லை. இப்படி பன்முகக் கலாசாரம் கொண்ட கனடாவில், சீக்கியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கிறார்கள். பிரிட்டிஷ் கொலம்பியா, ஓண்டாரியோ, ஆல்பெர்ட்டா என கனடாவின் முக்கிய நகரங்களில் அவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களின் பெரும்பாலானவர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பே அங்கு புலம்பெயர்ந்தவர்கள். இதனால், அங்கு அவர்களுக்கு வாக்குரிமை உள்ளது. இதனால் சீக்கியர்களின் ஆதரவு கனடா அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு அவசியமான ஒன்று என்பதை அங்கு நடக்கும் எல்லாத் தேர்தல்களிலும் பார்க்கலாம்.

ஜக்மீத் சிங்
ஜக்மீத் சிங்

அப்படிப்பட்ட கனடாவுக்கு, பஞ்சாப்பின் பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்தரன் சிங், ஹர்மீத் கவுர் தம்பதி 40 வருடங்களுக்கு முன்பு புலம்பெயர்ந்து. ஓண்டாரியோ மாகாணத்தில் தங்கியிருந்த இந்தத் தம்பதியின் மூத்த மகன்தான் ஜக்மீத் சிங். உயிரியல் படிப்பில் டிகிரி முடித்த ஜக்மீத்துக்கு சட்டம் பயில வேண்டும் என்பது ஆசை. அதனால் 2005-ம் ஆண்டு டொராண்டோவின் புகழ்பெற்ற யார்க் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு முடித்தவர், அங்கேயே கிரிமினல் வழக்கறிஞராகப் பணிபுரிந்துவந்தார். டொராண்டோ பகுதி மக்களுக்காக இலவச சட்ட ஆலோசனை, சட்ட உரிமை கருத்தரங்குகளை நடத்திவந்தவர், நீதிமன்றங்கள் மூலம் புலம்பெயர்ந்த மக்களுக்காக உரிமைகளைப் பெற்றுத்தருவதில் முனைப்பாகச் செயல்பட்டுவந்தார்.

‘வனத்துக்குள் ஒரு வீடு’ - சந்தன மரம் வளர்க்கும் சிங்!

இந்தப் பணியே பின்னாளில் இவரின் அரசியல் நுழைவைத் தீர்மானித்தது. 3 ஆண்டுகள் வழக்கறிஞர் பணியில் செயல்பட்டவர், 2008ல் கனடாவின் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான 'புதிய ஜனநாயகக் கட்சி'யில் தன்னை இணைத்துக்கொண்டார். அரசியலில் படிப்படியாக வளர்ச்சி கண்ட ஜக்மீத், 2011ல் தேர்தலில் களம் கண்டார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் 'பிரமேலியோ கோர் மல்டான்' தொகுதியில் ஜக்மீத் சிங் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த காலகட்டத்தில், புதிய ஜனநாயகக் கட்சியும் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருந்தது.

ஜக்மீத் சிங்
ஜக்மீத் சிங்

ஒருபுறம் வழக்கறிஞர் பணியிலும், மறுபுறம் அரசியல்வாதி பணியிலும் சிறப்பாகச் செயல்பட்டார். புலம்பெயர்ந்தவர்கள் உரிமை... கனேடிய மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் உதவி செய்துவந்தார். அதேநேரம், ஆளும் அரசின் குறைகளையும் வலுவாக முன்வைக்கத் தவறவில்லை. இதனால் கட்சியில் அடுத்தடுத்து முன்னேற்றங்களைக் கண்டார். 2017ல் நடைபெற்ற புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் அமோக ஆதரவு பெற்று தலைவரானார். இவர், தேர்தலில் ஜெயிப்பதற்கு முக்கியக் காரணம் ஒரு கூட்டம்தான்.

`இனவெறியை அனுபவித்திருந்தால் வலி தெரியும்'- இங்கிலாந்து பிரதமரை தெறிக்கவிட்ட இந்திய வம்சாவளி எம்.பி

மக்களின் வாக்கெடுப்பு மூலம் நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தார் ஜக்மீத். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஜக்மீத்தை சீண்டிக்கொண்டே இருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் குறித்து கடும் இடையூறுகொடுத்த அந்த நபருக்கு, மிகப்பொறுமையாகப் பதிலளித்தார் ஜக்மீத். இந்த வீடியோ கனடாவின் பட்டிதொட்டியெங்கும் வைரலாக, போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களுக்கு மத்தியில் 53.6 சதவிகித வாக்குகளைப் பெற்று கனடாவின் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவராக, வெள்ளையர் அல்லாத தலைவராக உருமாறினார். ஆம். ஜக்மீத்தின் குணம் இதுதான்.

ஜக்மீத் சிங்
ஜக்மீத் சிங்

மக்களிடம் கனிவாக பழக்கூடிய தன்மைகொண்டவர்தான். இதுவே, அவரின் அரசியல் ஏணியாகப் பயன்பட்டது. இந்த குணநலன்களை இந்தத் தேர்தலிலும் அவருக்கு கைகொடுத்தது. மற்ற கட்சிகளைவிட வித்தியாசமான யுக்திகளைத் தேர்தலுக்காகக் கையாண்டார் ஜக்மீத். மற்ற கட்சித் தலைவர்கள் சோஷியல் மீடியாவை சம்பிரதாயமாக தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்த ஜக்மீத்தோ இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சோஷியல் மீடியாக்களே கதி எனக் கிடந்தார்.

`முதல் வெற்றியைப் பெற்றதும் அழுதுவிட்டேன்!' - லாரி ஓட்டுநர் மகன் ரிங்கு சிங் WWE -ல் கால்பதித்த கதை

தேர்தலின்போது யாரும் கண்டுகொள்ளாமல் விட்ட இளைஞர்களை டார்கெட்டாகக்கொண்டு சுழன்றவர், அவர்களுக்குத் தேவையான முக்கிய கருத்துகளை ராப் இசையுடன் 15 விநாடி காணொளி ஒன்றை டிக்டாக்கில் வெளியிட, அது வைரலாகி, மூன்று லட்சம் முறைக்கும் மேலாக அந்நாட்டு மக்களால் பார்க்கப்பட்டு பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து இன்ஸ்டாகிராம், டிக்டாக் மூலமே தேர்தல் களத்தை எதிர்கொண்டவர்தான் தலைமையேற்ற புதிய ஜனநாயகக் கட்சியை 24 இடங்கள் ஜெயிக்கவைத்தார். கடந்த தேர்தலில் 44 இடங்களை வென்ற இந்தக் கட்சி, நடந்து முடிந்த தேர்தலில் 20 இடங்களை இழந்து 24 இடங்களை மட்டுமே கைப்பற்றினாலும் இப்போது கிங்மேக்கராக மாறி கனடாவின் அரசியலைத் தீர்மானித்துள்ளார்.

ஜக்மீத் சிங்
ஜக்மீத் சிங்

இந்தியாவுக்கும் அவருக்குமான தொடர்பு இப்போது வரை கசப்பான ஒன்றாகவே இருந்துள்ளது. இவரின் பிறப்பு வளர்ப்பு அனைத்தும் கனடாவிலேயே கழிந்தது என்றாலும் தனது குழந்தைப் பருவத்தின் ஒருவருடத்தை மட்டும் பஞ்சாப்பில் உள்ள தனது தாத்தா பாட்டியுடன் கழித்தார். இதுவே, இவருக்கும் இந்தியாவுக்குமான உச்சகட்டத் தொடர்பு எனலாம். பஞ்சாப் மக்களின் மனத்தில் என்றும் நீங்காத சம்பவமாக 1984-ம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர் படுகொலையை அடுத்து, இந்திய அரசுக்கும் ஜக்மீத்துக்கும் முட்டல்மோதல் தொடங்கியது. சீக்கியர் படுகொலையின்போது, சீக்கிய குருத்வாரா ஒன்றில் கலவரத்தை முன்னின்று நடத்தியவர் எனக் கருதப்படுவர், தற்போதையை மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்.

`தூண்கள் இல்லா மண்டபம்; `ரிக் வேத’ சிம்மாசனம்!’ - கல்கி `ஒன்னெஸ் டெம்பிள்' பின்னணி

அவர் ஒருமுறை கனடா சென்றபோது, அவரின் வருகையை வெளிப்படையாக எதிர்த்தவர் என்று இன்றளவும் இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் அறியப்படுபவர் ஜக்மீத். ஒருகட்டத்தில் 2016ல் ஓண்டாரியோ பேரவையில் சீக்கிய கலவரத்தை இனப்படுகொலையாக அறிவிக்க வலியுறுத்தித் தீர்மானம் கொண்டுவந்தார். இதன்பின் இந்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்துவந்தவர், காலிஸ்தான் ஆதரவு கூட்டங்களில் சிலவற்றிலும் பங்கேற்றுள்ளார். இதன் காரணமாகக் கடந்த 2013-ம் ஆண்டு, இந்தியா அவருக்கு விசா வழங்க மறுத்தது. அதன்பின்னும் இந்திய எதிர்ப்பை விடவில்லை.

ஜக்மீத் சிங்
ஜக்மீத் சிங்

2017ல் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியின்போது, தனக்கு எதிராக இந்திய உளவு அமைப்புகள் செயல்படுவதாகப் பகிரங்கமாகப் பேசினார். இப்படி இந்தியாவுடன் தொடர்ந்து கசப்பான அனுபவத்தைப் பெற்றுவரும் ஜக்மீத்தின் தாத்தா, பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய புகழ்பெற்ற பஞ்சாப் புரட்சியாளர் சேவா சிங் திக்ரிவாலா என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு