Published:Updated:

ஹிட்லர் ஆதரவு... தொடரும் சர்ச்சை பேச்சு - இந்திய குடியரசு தின விருந்தினராக வரும் போல்சொனாரோ யார்?

பிரதமர் மோடியுடன் போல்சொனாரோ
பிரதமர் மோடியுடன் போல்சொனாரோ

71-வது குடியரசு தினக் கொண்டாட்டத்திற்குத் தயாராகிவருகிறது இந்தியா. 2020-ம் ஆண்டின் இந்தியக் குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறார், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த ஜெயிர் போல்சொனாரோ?

ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழாவுக்கு வெளிநாட்டுத் தலைவர்களை அரசு விருந்தினராக அழைப்பதை வழக்கமாகப் பின்பற்றிவருகிறது இந்திய அரசு. வெளியுறவுத்துறை, பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகள் இந்தப் பணியை மேற்கொள்ளும். கடந்த ஆண்டு, தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். வரும் 2020-ம் ஆண்டிற்காக, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. மோடியின் தற்போதைய பிரேசில் சுற்றுப்பயணத்தில், போல்சொனாரோ குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதற்கான அழைப்பை ஏற்று, தன் வருகையை உறுதிசெய்துள்ளார்.

பிரேசில் அதிபர் போல்சொனாரோ மீது வலதுசாரி பிம்பம் விமர்சனங்களால் கட்டமைக்கப்படுகிறது. அவரும் அதிதீவிர வலதுசாரி என்பதை சமீப காலங்களில் பலமுறை உணர்த்தியிருக்கிறார்.

போல்சொனாரோ
போல்சொனாரோ
``பணம் மீது அதிக ஆசையுள்ளவர். லாஜிக், பகுத்து ஆராய்வது, நிதானம் முதலிய குணம் இல்லாதவர்."
போல்சொனாரோவின் தலைமை அதிகாரி

இந்தியப் பிரதமர் மோடியைப் போலவே, சாமான்ய குடும்பத்தில் பிறந்தவர் போல்சொனாரோ. அவரது பால்யம், பிரேசிலின் கடுமையான சூழலுக்கு நடுவே கழிந்தது. எந்நேரமும் வெடிக்கும் துப்பாக்கிச் சண்டைகளால் வன்முறைச் சம்பவங்களைப் பார்த்து வளர்ந்தவர். ராணுவத்தில் இணைந்து, படிப்படியாக மேல் பொறுப்புகளுக்கு வந்தார். போல்சொனாரோவைப் பற்றி அவரது தலைமை அதிகாரி, ``பணம் மீது அதிக ஆசையுள்ளவர்... லாஜிக், பகுத்து ஆராய்வது, நிதானம் முதலிய குணம் இல்லாதவர்" என்று குறிப்பு எழுதினார். 1986-ம் ஆண்டு, ராணுவத்தில் இருந்தபடியே, இதழ் ஒன்றில் ராணுவத்தினருக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுவதாக எழுதினார் போல்சொனாரோ. அதற்காக அவருக்கு 15 நாள்கள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

ராணுவத்தில் அரசு அதிகாரத்தை எதிர்க்கும் தலைவனாகத் தன்னை முன்னிறுத்தி, பிரேசிலின் தலைநகர் ரியோவின் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு, உறுப்பினர் ஆனார். அங்கிருந்து தொடங்கியதுதான் போல்சொனாரோவின் அரசியல் வாழ்க்கை. 1991-ம் ஆண்டு, பிரேசில் நாடாளுமன்றத்தின் உறுப்பினரானதோடு, அந்நாட்டின் `சர்ச்சைக்குரிய' தலைவராகவும் மாறினார்.

``நான் உன்னை வன்கொடுமை செய்யப்போவதில்லை. ஏனென்றால், நீ அதற்குத் தகுதியானவள் அல்ல."
போல்சொனாரோ, பிரேசில் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் ஒருவரை நோக்கி சொன்ன வார்த்தைகள் இவை.
போல்சொனாரோ
போல்சொனாரோ

போல்சொனாரோவின் அரசியல், பிரேசில் மக்களை வெறுப்பின் அடிப்படையில் பல துருவங்களாக்கியது. தன் அரசியல் வாழ்க்கை முழுவதும் பெண்கள், தன்பால் ஈர்ப்பாளர்கள், சிறுபான்மையினர், எதிர்க்கட்சிகள் முதலானோர் மீதான வெறுப்புப் பிரசாரங்களின் வழியாக வெற்றியைக் கட்டமைத்துக் கொண்டார் போல்சொனாரோ.

சர்வாதிகாரத்தைக் கொண்டாடும் போல்சொனாரோ, 1999-ம் ஆண்டு ``நாடாளுமன்றம் மூடப்பட்டு, ஊழல் செய்த 30,000 பேரைக் கொல்லவேண்டும். அதை முதலில் அதிபர் பெர்னான்டோ கார்டொசோவிடம் இருந்து தொடங்கவேண்டும்" என்றார். 2003-ம் ஆண்டு, பிரேசில் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் ஒருவரை நோக்கி, ``நான் உன்னை வன்கொடுமை செய்யப்போவதில்லை. ஏனென்றால், நீ அதற்குத் தகுதியானவள் அல்ல" என்று தொலைக்காட்சி கேமராக்கள் முன்னிலையில் பேசினார். போல்சொனாரொவுக்கு 4 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

``எனக்கு 4 மகன்கள் இருந்தனர்; நான் கொஞ்சம் பலவீனமாக இருந்துவிட்டதால், ஐந்தாவதாக எனக்கு மகள் பிறந்தாள்" எனத் தனது மகளின் பிறப்பைப் பற்றி சர்ச்சைக்குரிய முறையில் பேசியிருக்கிறார்
``என் மகன் ஹோமோசெக்ஸுவல் என்று தெரிந்தால், அவன்மீது எனக்கு பாசம் இருக்காது. அப்படியொரு மகன் வாழ்வதற்கு, ஏதேனும் விபத்தில் சாகலாம்."
போல்சொனாரோ
போல்சொனாரோ
போல்சொனாரோ

21-ம் நூற்றாண்டு, சர்வதேச அளவில் தன்பால் ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்குக் களம் அமைத்துக்கொடுத்துள்ளது. ``என் மகன் ஹோமோசெக்ஸுவல் என்று தெரிந்தால், அவன் மீது எனக்கு பாசம் இருக்காது. அப்படியொரு மகன் வாழ்வதற்கு, ஏதேனும் விபத்தில் சாகலாம்" என்று கூறி, தன்பால் ஈர்ப்பாளர்களின், தன்பால் ஈர்ப்புப் போராளிகளின் கண்டனங்களுக்கு உள்ளானார் போல்சொனாரோ.

இப்படிப்பட்டவரை பிரேசில் நாடு எப்படி அதிபராகத் தேர்ந்தெடுத்தது?

வலதுசாரிகள் வெற்றியடைய, நடுநிலை வகிப்பதாகக் கூறும் மையவாதிகளின் தோற்றுப்போகும் திட்டங்களே பாதை அமைக்கின்றன. வலதுசாரிகள் வெற்றியடைந்த பெரும்பாலான நாடுகள் ஊழல்மயமானவை. அதிதீவிர தேசிய உணர்வு, `நாம்' - `அவர்கள்' எனப் பிரித்து மோதவிடப்படும் சாமான்ய மக்கள், ஜனநாயக மறுப்பு, ஆணாதிக்கம், பழைமைவாதம் முதலானவற்றை `ஊழல் எதிர்ப்பு' என்ற பெயரின் கீழ் மக்களை ஒருங்கிணைப்பது, மக்கள் ஆதரவும், பெரும்பான்மையும் பெற்று நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவது, இவைதான் வலதுசாரிகளின் ஃபார்முலா. இதையே செய்தார் ஜெயிர் போல்சொனாரோ.

போல்சொனாரோ
போல்சொனாரோ

2008-ம் ஆண்டு, உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்கத்தில் பிரேசிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரம், அடுத்து வந்த ஆண்டுகளிலும் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டவில்லை. 2014-ம் ஆண்டு, பிரேசில் நாட்டு ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் பெரும்பாலானோர், `பெட்ரோனாஸ்' என்ற பெட்ரோல் நிறுவனத்துடன் இணைந்து ஊழல் செய்தது வெளியே தெரிந்தது. பிரேசில் நாட்டின் மிகப்பெரிய ஊழலாக பெட்ரோனாஸ் விவகாரம் கருதப்படுகிறது.

பிரேசில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்தது. வேலைவாய்ப்புகளும் மிகச் சொற்பம்; உலகில் அதிக கிரிமினல் குற்றங்கள் நிகழும் டாப் 50 மோசமான நகரங்கள் பட்டியலில், பிரேசில் நாட்டின் 19 நகரங்கள் இடம்பிடித்தன. தற்போதும் இது தொடர்கிறது. ஆள்பவர்கள்மீது மொத்த நம்பிக்கையையும் இழந்த பிரேசில் மக்களின் நிலையைப் பயன்படுத்திக் கொண்டார், போல்சொனாரோ.

``ஹிட்லர், முசோலினி... இவர்கள் எதுவாகினும் ஊழல் செய்தவர்கள் மட்டும் அல்லர்!"
போல்சொனாரோவின் தேர்தல் பிரசார விளம்பரம்.
போல்சொனாரோ
போல்சொனாரோ

தேர்தல் பிரசாரங்களில், தன் பாணியில் அனல்பறக்கப் பேசினார். ``ஹிட்லர், முசோலினி... இவர்கள் எதுவாகினும் ஊழல் செய்தவர்கள் மட்டும் அல்லர்!" என்று தன் வலதுசாரி இமேஜ் மீதான விமர்சனங்களை நியாயப்படுத்தினார். பிரேசில் மக்களின் பெரும்பான்மை ஆதரவோடு, கடந்த ஜனவர் 1 -ம் தேதி, அதிபராகப் பதிவியேற்றார்.

பதவியேற்ற பிறகும் அவர் தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. பிரேசில் நாட்டிலுள்ள அமேசான் காடுகள் பற்றி எரிந்தபோது, சர்வதேசத் தலைவர்கள் அதைக் கண்டித்தனர். அமேசான் அழிவது சர்வதேசச் சூழலியல் பிரச்னை என வாதங்கள் எழுந்தன. எதையுமே போல்சொனாரோ கண்டுகொள்ளவில்லை. பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் தனது நாடு நிதியுதவி செய்து, அமேசான் காடுகளைக் காப்பாற்ற முன்வருவதாக அறிவித்தார். பிரான்ஸ் நாடு பிரேசிலைத் தனது காலனியாகக் கருதுவதாகப் பதிலளித்தார் போல்சொனாரோ. இந்த விவாதம் தொடர்ந்து, போல்சொனாரோ இம்மானுவல் மேக்ரானின் மனைவியைத் தனிப்பட்ட முறையில் கிண்டலடிக்க, கசப்பாக முடிந்தது.

`இது பிரேசிலுக்கான பிரச்னை மட்டும் கிடையாது!' - அமேசான் தீயால் ஏற்படப் போகும் அழிவுகள்
போல்சொனாரோவுக்கு எதிராக பிரேசில் மக்கள் போராட்டம்
போல்சொனாரோவுக்கு எதிராக பிரேசில் மக்கள் போராட்டம்

உலகின் நுரையீரல் எனக் கருதப்படும் அமேசான் காடுகளின் நிலங்கள், பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப் போவதாகக் கூறப்படுகிறது. அமேசான் காடுகளின் பழங்குடிகளும் தொடர்ந்து கொல்லப்பட்டுவருகின்றனர்.

தற்போது, பிரேசில் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் விற்பனை செய்வது, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவது, மானியங்கள் வெட்டு முதலான `சீர்திருத்த' நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது போல்சொனாரோ அரசு. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், போல்சொனாரோவுடன் நெருங்கிய நட்பு பாராட்டுபவர். `பிரேசிலின் ட்ரம்ப்' என்று அமெரிக்க ஊடகங்களால் அழைக்கப்படுகிறார் போல்சொனாரோ. இப்படியான சூழலில், இந்தியாவின் குடியரசு தின சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.

ப்ரிக்ஸ் நாடுகள் அமைப்பில் இரு நாடுகளும் உறுப்பினராக இருப்பதால், இந்தியா - பிரேசில் நாட்டு உறவுகள் குறித்தும், வர்த்தக ஒப்பந்தங்கள், அறிவியல், தொழில்நுட்பம் முதலானவை குறித்து பிரதமர் மோடியும், பிரேசில் அதிபர் போல்சொனாரோவும் குடியரசு தினப் பயணத்தின்போது பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடியுடன் போல்சொனாரோ
பிரதமர் மோடியுடன் போல்சொனாரோ

அதீத தேசிய வாதம், ராணுவத்தின்மீது அதிக கவனம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் விற்பனை செய்வது, மானியங்கள் வெட்டு, சிறுபான்மையினர் மீதான வெறுப்புப் பிரசாரம் முதலான பல்வேறு விமர்சனங்கள் போல்சொனாரோ மீது முன்வைக்கப்படுவதால், பிரதமர் மோடி அவரை குடியரசு தின சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. எனினும், இந்தியாவிலும் மத்திய அரசு அதே பாணியிலான விமர்சனங்களை எதிர்கொள்வதால், அவற்றை எளிதாகப் புறந்தள்ளிவிடக்கூடும்.

அடுத்த கட்டுரைக்கு