Published:Updated:

`தாலிபன், ஜெய்ஷ்-இ-முகமது சந்திப்பு'; மசூத் அஸாரின் வாழ்த்து கட்டுரை - இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?!

மசூத் அஸார் - முல்லா பராதர்
மசூத் அஸார் - முல்லா பராதர்

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவர் மசூத் அஸார், தாலிபன் தலைவர் முல்லா பராதரைச் சந்தித்திருக்கிறார். தாலிபன்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அல்-கொய்தா, `அடுத்ததாக காஷ்மீரை மீட்க வேண்டும்' என்றிருக்கிறது. தாலிபன்களால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?

ஆகஸ்ட் 31-ம் தேதியோடு, ஆப்கானிஸ்தானைவிட்டு முழுமையாக வெளியேறிவிட்டது அமெரிக்கா. இதையடுத்து `முழுச் சுதந்திரம் அடைந்துவிட்டோம்' எனச் சொல்லி, கொண்டாடிவருகிறார்கள் தாலிபன்கள். அமெரிக்காவின் வெளியேற்றத்துக்குப் பிறகு முழு நாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறார்கள் தாலிபன்கள். விரைவில் ஆப்கனில் முறையான ஆட்சியை அமைக்கவிருக்கும் தாலிபன்கள், அதற்கான பணிகளை வேகமாகச் செய்துவருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

தாலிபன்கள் கையில் ஆப்கனின் ஆட்சி அதிகாரம் சென்றதால், இந்தியாவுக்கு அச்சுறுத்தலிருப்பதாகச் செய்திகள் சொல்லப்பட்டு வருகின்றன. எந்தவகையில் இந்தியாவுக்கு தாலிபன்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை!

மசூத் அஸார்
மசூத் அஸார்

ஜெய்ஷ்-இ-முகமது, தாலிபன்கள் தொடர்பு!

மெளலானா மசூத் அஸார் என்பவரால் 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம். பாகிஸ்தானைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் இந்த இயக்கம், காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரித்து, பாகிஸ்தானோடு இணைக்க வேண்டுமென்கிற இலக்கோடு செயல்பட்டுவருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டுவரும் இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கின்றனர்.

மும்பை 26/11 தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவர் மசூத் அஸார் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது! தாலிபனும், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கமும் கிட்டத்தட்ட ஒரே கொள்கைகளைப் பின்பற்றித்தான் இயங்கிவருகின்றன. கடந்த காலங்களில் இவ்விரு அமைப்புகளும் தொடர்பிலிருந்ததாகத் தெரிகிறது. தாலிபன் நிறுவனர் முல்லா முகமது ஒமரும், மசூத் அஸாரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.

மசூத் அஸாரின் கட்டுரை!

ஆகஸ்ட் 15 அன்று, தாலிபன்கள் காபூலிலுள்ள அதிபர் மாளிகைக்குள் காலடி எடுத்துவைத்ததை அடுத்து, ``அமெரிக்க ஆதரவோடு இயங்கிவந்த ஆப்கன் அரசை வீழ்த்தி வெற்றிபெற்றுவிட்டீர்கள்'' என்று தாலிபன்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் மசூத் அஸார். தொடர்ந்து, ஆகஸ்ட் 16-ம் தேதி `Manzil Ki Taraf', அதாவது `இலக்கை நோக்கி' என்ற தலைப்பில், `இது முஜாஹிதீனின் வெற்றி' என தாலிபன்களை வாழ்த்தி கட்டுரை ஒன்றையும் எழுதியிருந்தார் மசூத். அதேநாளில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் தாலிபன்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் தாலிபன் தலைவர்கள் சிலரை ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அஸார் சந்தித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கந்தஹாரில் நடந்த இந்தச் சந்திப்பில், தாலிபன் துணைத் தலைவர் முல்லா அப்துல் கானி பராதரும் கலந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அப்துல் கானி பராதர்தான் ஆப்கனின் அடுத்த அதிபர் எனக் கடந்த சில நாள்களாகச் சொல்லப்பட்டுவருகிறது.

செய்தியாளர் சந்திப்பில் 
தாலிபன்கள்
செய்தியாளர் சந்திப்பில் தாலிபன்கள்
`முல்லா பராதர் டு சிராஜுதீன் ஹக்கானி வரை' - ஆப்கனை ஆளப்போகும் தாலிபன் தலைவர்களின் பின்னணி?!

இந்தச் சந்திப்பின்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துக்காக, தாலிபன்களின் உதவியை மசூத் அஸார் கோரியதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ``தங்களோடு ஒத்த சிந்தனைகொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துக்கு, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தாலிபன்கள் உதவி செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது'' என்ற அதிர்ச்சித் தகவலைக் கூறுகிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

அல்-கொய்தா வாழ்த்து!

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதற்காக, தாலிபன்களுக்கு அல்-கொய்தா வாழ்த்து தெரிவித்திருப்பதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும், ``ஆப்கனை அடுத்து, காஷ்மீர், பாலஸ்தீனம், சோமாலியா, ஏமன் போன்ற இஸ்லாமிய நிலங்களை இஸ்லாமிய எதிரிகளிடமிருந்து மீட்க வேண்டும்'' என்று தாலிபன் உள்ளிட்ட இயக்கங்களுக்கு அல்-கொய்தா அழைப்புவிடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாலிபன்கள் சொல்வது என்ன?

``எங்கள் மண்ணை எந்த நாட்டுக்கும் எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த விட மாட்டோம்'' என்று சில நாள்களுக்கு முன்பு தாலிபன்கள் சொல்லியிருந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர், ``இந்தியா முக்கியமான நாடு; ஆப்கனின் முந்தைய ஆட்சியாளர்களைப்போலவே நாங்களும் இந்தியாவுடன் நல்லுறவைப் பேண விரும்புகிறோம். எங்களால் இந்தியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை'' என்று தாலிபன்கள் அறிவித்திருக்கின்றனர்.

தாலிபன்
தாலிபன்
வீடு வீடாகப் பெண்களைத் தேடும் தாலிபன்கள்... ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?!

சொன்னதைச் செய்வார்களா தாலிபன்கள்?

ஆப்கனிலுள்ள முற்போக்காளர்கள் சிலர், ``தாலிபன்கள், தாங்கள் முன்புபோல இல்லை, மாறிவிட்டோம் எனக் காட்டிக்கொள்ள முயற்சி மட்டுமே செய்கிறார்கள். ஆனால், அவர்கள் மாறவில்லை. மாறப்போவதுமில்லை’’ என்று கருத்து தெரிவிக்கின்றனர். அதேவேளையில், தாலிபன்கள் ஆப்கனைக் கைப்பற்றியதும், `அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குகிறோம். நாங்கள் யாரையும் கொல்ல மாட்டோம். அமைதியான ஆட்சி தருவோம்' என்றார்கள். ஆனால், அவர்கள் சொன்னபடி செய்யவில்லை என்றே ஆப்கனிலிருந்து தகவல்கள் வெளியாகின்றன.

முந்தைய ஆப்கன் அரசின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றிய தவா கான் மேனாபால் (Dawa Khan Menapal) என்பவரைக் கடந்த வாரத்தில் சுட்டுக் கொன்றிருக்கின்றனர் தாலிபன்கள். ஆப்கனில் இசைக்குத் தடைவிதித்த தாலிபன்கள், நாட்டுப்புற இசைக்கலைஞரான ஃபவாத் அந்தராபியையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றனர். முந்தைய ஆப்கன் அரசில் பணியாற்றிய, தங்களுக்கு எதிராக இருந்த பலரையும் கொல்வதற்காக தாலிபன்கள் தேடிவருவதாக ஆப்கனிலிருந்து செய்திகள் வெளியாகின்றன.

அப்படியிருக்கையில், இந்தியா விஷயத்தில் அவர்கள் சொன்னதைச் செய்வார்களா... அல்லது தங்களோடு ஒத்த கொள்கைகளைக்கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துக்குத் துணை நிற்பார்களா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

``அனைத்து நாடுகளும் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மட்டுமே, `நாங்கள் மாறிவிட்டோம் அனைத்து நாடுகளுக்கும் துணையாய் நிற்போம்’ என்றெல்லாம் தாலிபன்கள் பேசிவருகின்றனர். ஆனால், முறையான ஆட்சி அமைந்த பின்னர், சொன்னதைப்போலவே நடந்துகொள்வார்களா என்பது சந்தேகமே'' என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.
அடுத்த கட்டுரைக்கு