Published:Updated:

`அவரை சந்திப்பதில் எனக்கு ஆர்வமில்லை!' -ஜெய்சங்கரை கொதிக்கவைத்த பிரமிளா ஜெயபால் யார்?

``இந்தக் கூட்டத்தை ரத்துசெய்வது மிகவும் கவலையளிக்கிறது. எந்தவொரு எதிர்ப்பையும் இந்திய அரசு கேட்க விரும்பவில்லை என்ற கருத்தை இது மேலும் விரிவுபடுத்துகிறது''

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவில் சுற்றுப்பயணம்செய்துவருகிறார். ராணுவ மாநாடு, வெளியுறவு மாநாடு என பிஸியாக இருக்கும் அவர், அமெரிக்க எம்.பி-க்களைச் சந்தித்து உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் குழுவில், அமெரிக்கா வாழ் இந்தியரான பிரமிளா ஜெயபால் இடம்பெற்றிருந்தார்.

அமெரிக்க காங்கிரஸ் எம்.பி-யான பிரமிளா ஜெயபால், காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்ததற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவந்தார். விமர்சனங்களோடு நிற்காமல், காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் எனக் கூறி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை எனப்படும் கீழவையில் ஒரு தீர்மானமும் கொண்டுவந்தார்.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

பிரமிளா ஜெயபாலின் இந்த நடவடிக்கையை மேற்கோள்காட்டி தன்னை சந்திக்க வரும் எம்.பி-க்கள் குழுவிலிருந்து அவரை நீக்க வேண்டும் என அமைச்சர் ஜெய்சங்கர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு, அமெரிக்க எம்.பி-க்கள் குழு செவிமடுக்கவே, மீட்டிங்கை கேன்சல் செய்துள்ளார் ஜெய்சங்கர்.

இதுதொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெய்சங்கர், ``பிரமிளா தாக்கல் செய்த தீர்மானம் ஜம்மு-காஷ்மீரின் நிலைமை பற்றிய நியாயமான புரிதல் அல்லது இந்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதற்கான நியாயமான தன்மை என்று நினைக்க வேண்டாம். அவரை சந்திப்பதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. திறந்தநிலை விவாதம் செய்பவர்களை சந்திப்பதில் எனக்கு ஆர்வம் உள்ளது'' எனக் கூறியுள்ளார்.

Vikatan

ஆனால், ``இந்தக் கூட்டத்தை ரத்துசெய்வது மிகவும் கவலையளிக்கிறது. எந்தவொரு எதிர்ப்பையும் இந்திய அரசு கேட்க விரும்பவில்லை என்ற கருத்தை இது மேலும் விரிவுபடுத்துகிறது. இந்தத் தருணத்தின் தீவிரத்தன்மை ஒரு உரையாடலுக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும், கூட்டத்தில் யார் இருக்க வேண்டும் எனக் கட்டளையிடக்கூடாது. இது, மிகவும் அற்பமான செயலாக இருக்கிறது" என்று பிரமிளா ஜெயபால் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கர் மீட்டிங்கை கேன்சல் செய்த விவகாரம் தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. காங்கிரஸ் கட்சியும் ஜெய்சங்கர் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரமிளா ஜெயபால்
பிரமிளா ஜெயபால்

ஜெய்சங்கர் சந்திக்க மறுத்த பிரமிளா ஜெயபால், தமிழகத்தைச் சேர்ந்தவர். சென்னையில் பிறந்த இவர், பின்னர் கல்விக்காக அமெரிக்கா சென்று, அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். சமூகப் பணிகளில் நாட்டம் அதிகரித்து அதைச் சிறப்பாகச் செய்து வந்துள்ளார்.

இது, அவரைத் தீவிர அரசியலுக்குள் களமிறங்கவைத்தது. ஜனநாயகக் கட்சி சார்பில் வாஷிங்டனின் சியாட்டில் பகுதியில் போட்டியிட்டு, பெரும்பாலான அமெரிக்க - இந்தியர்களின் ஆதரவுடன் வெற்றிபெற்று பிரதிநிதிகள் சபையின் முதல் இந்தியப் பெண் எம்.பி என்ற பெருமையைப் பெற்றவர்.

Vikatan