Published:Updated:

அமெரிக்கா: `வெள்ளை மாளிகையில் பணிபுரிந்தாலும் பேராசிரியையாக தொடர்வேன்!' - ஜில் பைடன்

ஜில் பைடன்
ஜில் பைடன் ( Chris O'Meara )

ஜில் பைடன் இளநிலை, முதுநிலை உட்பட நான்கு பட்டங்களும் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ள பல்கலைக்கழக பேராசிரியை ஆவார்.

உலகமே எதிர்பாா்த்துக் காத்திருந்த 46-வது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வாகியுள்ளதாக கடந்த சனிக்கிழமை (07.11.2020) அன்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இதனை தொடர்ந்து உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான பின்னர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்பாா்.

அமெரிக்காவின் அதிபர் பதவியை பொறுத்தவரையில் சில நெறிமுறைகள் பின்பற்றப்படும். அவற்றில் அதிபர் பதவியில் அமர்வோாின் மனைவி 'FLOTUS' - (அமெரிக்க நாட்டின் முதல் சீமாட்டி) என்று அழைக்கப்படுவர். மேலும் அவர் அதிபரின் அலுவல் பணிகளிலும், வெளியூர்ப் பயணங்களிலும் உடன் செல்லலாம் என்பது வெள்ளை மாளிகையின் விதிமுறைகளுள் ஒன்றாகும்.

ஜில் பைடன்
ஜில் பைடன்
Elise Amendola

அதன்படி தற்போது அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் இரண்டாவது மனைவியான (முதல் மனைவியான நீலியா ஹண்டர் 1972-ல் நிகழ்ந்த காா் விபத்தொன்றில் இறந்துவிட்டாா்). பேராசிரியை ஜில் ஜாக்கப்ஸ் (எ) ஜில் பைடன் (69) இனி வரும் காலங்களில் ஜோ பைடனுடன் இணைந்து வெள்ளை மாளிகையின் அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் தனது ஆசிரியர் பணியைவிட்டு விலக விரும்பாத ஜில் பைடன் தொடர்ந்து அப்பணியையும் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளாா். நாட்டின் முதல் பெண்மணி அலுவல் பணிகளைத் தாண்டி தனது சொந்த பணிகளை தொடர்வது இதுவே முதல் முறையாகும்.

ஜில் பைடன் இளநிலை, முதுநிலை உட்பட நான்கு பட்டங்களும் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ள பல்கலைக்கழக பேராசிரியை ஆவார். தற்போது வடக்கு வெர்ஜினியாவிலுள்ள கம்யூனிட்டி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மேலும், அக்கல்லூரியின் நிரந்தர உறுப்பினராகவும் உள்ளார்.

அமெரிக்கா: `வெள்ளை மாளிகையில் பணிபுரிந்தாலும் பேராசிரியையாக தொடர்வேன்!' - ஜில் பைடன்

ஜில் பைடன் கடந்த 1977-ம் ஆண்டு ஜோ பைடனை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். அதன் பின்னர் ஜோ பைடனுடன் இணைந்து அரசியல் களத்திலும் செயலாற்றத் துவங்கினாா்.

ஜோ பைடன் அமெரிக்காவில் ஓபாமாவின் ஆட்சிக்காலத்தில் துணை அதிபராக பணியாற்றியபொழுது ஜில் பைடன் SSOTUS - (அமெரிக்க நாட்டின் இரண்டாம் சீமாட்டி)யாக இருந்தார். அப்போதும் ஜில் பைடன் அலுவல் பணிகளைத் தாண்டி இதே பேராசிரியை பணியை மேற்கொண்டு வந்தார்.

இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி டெலாவேர் மாகாணத்தில் தான் ஆசிரியராகப் பணியாற்றிய உயர்நிலைப்பள்ளியின் வகுப்பறையிலேயே (தற்பொழுது செயல்பாட்டில் இல்லை) ஜனநாயகக் கட்சி சார்பாக உரையாற்ற நிகழ்ந்தபொழுது அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், "ஆசிரியர் என்பது நான் என்ன பணி செய்கிறேன் என்பதில்லை. அது நான் யாராக இருக்கிறதேன் என்பதை உணர்த்தும்" என்று குறிப்பிட்டிருந்தாா்.

இது அவர் தன் பணியின் மீது கொண்டிருந்த நேசத்தினை உணர்த்துவதாக, அந்தப் பதிவினை இணையத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தலின் பிரசாரத்தின்போது தனது பணியிலிருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட ஜில் பைடன் தனது கணவரான ஜோ பைடனுக்கு ஆதரவாக பல இடங்களில் பிரசாரத்தினை மேற்கொள்வது, கட்சிக்கு தேவையான நிதி திரட்டுவது போன்ற பணிகளில் உறுதுணையாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றது, நாட்டின் முதல் சீமாட்டியாக பேராசிரியை அமர்த்தப்படுவது, ஜோ பைடன் மேற்கொண்டு வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பணிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செலின் ராஜ் என்ற பெண்மணி இடம்பெற்றிருப்பது என பெண்களைச் சாா்ந்து பல சிறப்பம்சங்கள் அமெரிக்காவின் இந்த புதிய ஆட்சிமாற்றத்தில் நிகழ்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு