Published:Updated:

`நண்பரைப் பற்றி இப்படித்தான் பேசுவீர்களா ட்ரம்ப்?!’- இந்தியா குறித்த கருத்துக்கு ஜோ பைடன் பதிலடி

ஜோ பைடன்
ஜோ பைடன் ( Carolyn Kaster )

`நானும், துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸும் இந்தியாவின் மீது கொண்டிருக்கும் உறவைப் பெரிதாக எண்ணுகிறோம்!'

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் களம் பரபரப்பாக இருக்கிறது. நவம்பர் மாதம் 3-ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாகவே பலர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துவருகின்றனர்.

அதிபர் வேட்பாளர்களான ட்ரம்ப் - ஜோ பைடனுக்கு இடையேயான இறுதி விவாதம், கடந்த வெள்ளிக்கிழமையன்று பல்வேறு காரசாரமான வாதங்களுடன் நடந்து முடிந்தது. அதில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்துக் கேள்வி எழுப்பியபோது இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலை குறித்து விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார் அதிபர் ட்ரம்ப்.

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன், இன்று இந்திய-வெஸ்ட் என்னும் வார இதழில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையை ரீ-ட்வீட் செய்து ``நண்பர்களைப் பற்றி இப்படித்தான் பேசுவீர்களா ட்ரம்ப்?!- இதுதான் நீங்கள் காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களைத் தீர்க்கும் முறையா?!” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

மேலும் பைடன் அந்தக் கட்டுரையில், ``நானும், துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸும் இந்தியாவின் மீது கொண்டிருக்கும் உறவைப் பெரிதாக எண்ணுகிறோம். முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு எப்படிச் சிறப்பாக இருந்ததோ, அதேபோல், ஜோ பைடன் – கமாலா ஹாரிஸ் ஆட்சிக்காலத்திலும் தொடரும்.

நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதோடு, இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு தீவிரவாதத்தையும், சீனா போன்ற எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களையும் முறியடிப்போம். இரு நாடுகளுக்கான பல வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.

தீபாவளி கொண்டாடிய ஜோ பைடன்!

ஜோ பைடன் சமீபத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமாவுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்
Andrew Harnik

``சமீபத்தில், நிகழ்ந்த விவாதத்தில், டொனால்ட் ட்ரம்ப் உலக அரங்கில் இந்தியாவை மிகவும் இழிவாக விமர்சனம் செய்துவிட்டார். மேலும், ட்ரம்ப் கொண்டுவந்த H1B விசா போன்ற செயல்களால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியின் மீது கொண்டிருந்த நல்லுறவானது வெறும் கேமராவின் கண்களுக்காக மட்டும்தானே அன்றி, அது உண்மையான நட்பல்ல” என்று அஜய் ஜெயின் என்னும் சிலிக்கான் வேலியைச் சேர்ந்த அமெரிக்கவாழ் இந்தியரின் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI) ஊடகத்திடம் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு