Published:Updated:

ஜோர் பைடன்!

ஜோ  பைடன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோ பைடன்

`அமெரிக்கா இஸ் பேக்!’ - வெற்றிக்குப் பின்னர் ஜோ பைடன் தனது முதல் உரையை இப்படித்தான் தொடங்கினார்.

உலகின் ஒற்றை வல்லரசான அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனவரி 20-ம் தேதி அரியணையில் அமர்கிறார் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன். 77 வயதில் இந்தப் பதவியை அடையும் இவர்தான், அமெரிக்காவின் மிகவும் வயதான அதிபர்!

அமெரிக்காவின் எந்த அதிபரும் பதவியேற்பதற்கு முன்னதாக இவர் அளவுக்குச் சவால்களைச் சந்தித்ததில்லை. தேர்தல் பிரசாரத்தின்போதே, ``நான் ஜெயிப்பதாக முடிவுகள் வந்தால் மட்டுமே தேர்தல் முடிவுகளை ஏற்பேன்’’ என்று எச்சரித்திருந்தார் ட்ரம்ப். தேர்தலில் ஜோ பைடன் ஜெயித்துவிட, அந்தத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறிய ட்ரம்ப், தன் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஜனவரி 7-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பைடனை அதிபராக அங்கீகரித்து, சான்று அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதைத் தடுக்கும் வகையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பெரும் கலவரம் ஏற்பட்டது. உலகமே கொந்தளித்த பிறகுதான் ட்ரம்ப் அடங்கினார். இதைத் தொடர்ந்தே அதிபராகியிருக்கிறார் ஜோ பைடன்.

எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள்!

`அமெரிக்கா இஸ் பேக்!’ - வெற்றிக்குப் பின்னர் ஜோ பைடன் தனது முதல் உரையை இப்படித்தான் தொடங்கினார். ‘ட்ரம்ப்போல நான் இருக்க மாட்டேன்’ என்ற நம்பிக்கையை இதன் மூலம் அவர் கொடுத்திருக்கிறார். ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், ஜோ பைடன் துணை அதிபராக இருந்தார். ஒபாமா ஆட்சி அதிகார அணியில் இடம்பெற்ற சிலர், பைடன் அணியிலும் இடம்பெற்றிருப்பதால் `ஒபாமா 3.0’ என்று சிலர் பைடனின் நிர்வாகத்தைக் குறிப்பிட்டனர். அவர்களுக்கு, ``ஒபாமா நிர்வாகத்தின் மூன்றாவது பதவிக்காலமாக எனது நிர்வாகம் இருக்காது’’ என்று பதிலளித்திருக்கிறார் பைடன்.

பைடனுக்கு இருக்கும் முதல் சவால், கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதுதான். இரண்டாவது, ஊரடங்கால் சரிந்துகிடக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது. மூன்றாவது, `ட்ரம்ப்பிசம்.’ ட்ரம்ப் தோல்வி அடைந்திருந்தாலும், அவரது ஆதரவாளர்களைச் சமாளிப்பது பைடனுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். இனவெறியும் வெறுப்பு பிரசாரமும் கலந்த ஒரு முரட்டுக் கூட்டமாக அவர்கள் வளர்ந்து நிற்கிறார்கள். நான்காவது சவால், சீனாவுடனான உறவு. பைடனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கவே நீண்ட நாள்கள் யோசித்தது சீனா. `பைடன் சீனாவுக்கு முன்னால் பலவீனமாக இருப்பார்’ என்று ட்ரம்ப் முன்னரே குறிப்பிட்டிருந்தார். ட்ரம்ப்பின் கருத்தைப் பொய்யாக்குவதற்காக, சீனாவுக்கு எதிராக ஜோ பைடனும் கடுமையாகவே நடந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. செனட் சபையில் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் சம பலத்தில் உள்ளன. செனட்டின் ஒப்புதல் தேவைப்படும் விஷயங்களில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி, பைடனுக்கு முக்கியச் சவாலாக இருக்கக்கூடும்.

`கொரோனா நோய்த் தொற்றைச் சரி செய்தால் மட்டுமே பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள முடியும்’ என்பதில் பைடன் அணி தெளிவாகவே இருக்கிறது. முதற்கட்டமாக கோவிட் பரிசோதனைகளை அதிகரிப்பது, `100 நாள் மாஸ்க் சேலஞ்ச்’ உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துகிறார் பைடன்.

பருவநிலை மாற்றத்துக்கான பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்ததைக் கடுமையாகச் சாடிய பைடன், மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பருவநிலைப் பிரச்னையைச் சரிசெய்வதற்கான முதல் அடியை எடுத்துவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘இனவெறிப் பிரச்னைகளைத் தீர்த்தால் மட்டுமே, மனதளவில் பிளவுபட்டிருக்கும் அமெரிக்காவை மீண்டும் ஒன்றிணைக்க முடியும்’ என்பதிலும் பைடன் அணி தீர்மானமாக இருக்கிறது.

ஜோர்  பைடன்!

இந்தியா - அமெரிக்கா உறவு!

``2020-ல் உலகில் நெருக்கமான நாடுகளாக இந்தியாவும் அமெரிக்காவும் விளங்கும் என்ற கனவை நான் கொண்டிருக்கிறேன்” என்று 2006-ம் ஆண்டே கூறியிருக்கிறார் பைடன். அதுமட்டுமல்லாமல், இந்திய - அமெரிக்க அணுசக்தி உடன்பாடு விஷயத்தில் ஒபாமா தயங்கிய நிலையில், பைடன் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்தார். H1B விசா நடைமுறையில், ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த சில அதிரடி முடிவுகள் இந்தியர்களைக் கவலையில் ஆழ்த்தின. ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் தாராளமயமான குடியேற்றத்தை மதிப்பதால், நம்மவர்கள் அமெரிக்கா சென்று படிப்பதற்கும், வேலை செய்வதற்கும், அங்கு வாழ்வதற்கும் பைடன் ஆதரவாக இருப்பார் என்றே தெரிகிறது. “பிரசாரத்தின்போது உறுதியளித்ததைப்போல H1B விசா விவகாரத்தில் பைடன் நடந்துகொள்வார்’’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அமெரிக்கவாழ் இந்தியர்கள்.

வெல்கம் பைடன்!