Published:Updated:

அமெரிக்கா: `நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனா தடுப்பூசி இலவசம்!’ - ஜோ பைடன்

ஜோ பைடன்
ஜோ பைடன் ( Carolyn Kaster )

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்களுடன் கலந்தாலோசித்து, வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து அம்சங்களும் அடங்கிய உடனடி மசோதாவை அமல்படுத்துவதற்கான முயற்சிகளையும் எடுப்பதாக உறுதியளித்தார் ஜோ பைடன்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான நாளை நோக்கி உலகமே காத்துக்கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் களத்தில் ஆட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையேயான இறுதி விவாதம், நேற்று பல்வேறு காரசாரமான வாதங்களுடன் நடந்து முடிந்தது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் பல்வேறு விவாதங்களில் ட்ரம்ப் மேற்கொண்ட கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கோள்காட்டி, விமர்சித்துப் பேசிவந்தார். இதற்கு ட்ரம்ப்பும் பல்வேறுவிதங்களில் எதிர்வாதம் செய்தார்.

இந்தநிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த பிரசாரத்தில் ஜோ பைடன், ``நான் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் விரைவாக கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி உறுதிசெய்யப்பட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்
Carolyn Kaster

``குடியரசுக் கட்சி வேட்பாளரான ட்ரம்ப்பும் இதே வாக்குறுதியை அளித்திருந்தாலும், அவர் கொரோனாவின் தீவிரத்தை அறிந்திருந்தும், தடுப்புப் பணிகளில் மெத்தனமாக இருந்ததால், அமெரிக்கா தற்போது 2,23,000 குடிமக்களை இழந்திருக்கிறது.

சமீபகாலத்தில், நாம் கண்ட கொள்ளை நோய்களில் கொரோனா மிகவும் அபாயகரமானது. மேலும், ட்ரம்ப் கூறுவதுபோல இதன் தொற்று எண்ணிக்கை அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் குறைந்த மாதிரி தெரியவில்லை. நாளுக்கு நாள் அதன் வீரியம் உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது” என்று குற்றம்சாட்டினார் பைடன்.

``கொரோனா தொற்று அமெரிக்காவில் கண்டறியப்பட்டு எட்டு மாதங்களாகியும், தற்போதைய அதிபர் ட்ரம்ப் அதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான எவ்வித முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லை’’ என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 77 வயதுடைய முன்னாள் துணை அதிபர் குற்றம்சாட்டினார்.

ட்ரம்ப் நாட்டையும், நாட்டு மக்களையும் கைவிட்டுவிட்டார்.
ஜோ பைடன்

தொடர்ந்து பேசிய ஜோ பைடன், `நான் அதிபராகப் பதவியேற்றால், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியை அவசரகாலச் சட்டமாக அமல்படுத்தி, மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவாகத் திரும்புவதற்கு வழிவகை செய்வேன்’ என்றார்.

விவாதம்
விவாதம்
OLIVIER DOULIERY

மேலும், அமெரிக்காவின் ஆளுநர்களுடன் கலந்தாலோசித்து, வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து அம்சங்களும் அடங்கிய உடனடி மசோதாவை அமல்படுத்துவதற்கான முயற்சிகளையும் எடுப்பதாக உறுதியளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு