Published:Updated:

அமெரிக்கா : ஜனவரி 20-ல் அதிபராகப் பதவியேற்கும் பைடன்! - வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( Alex Brandon )

46-வது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவிருக்கும் நிலையில், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்கவிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தலில் அதிபர் பதவிக்கு, குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில், ஜோ பைடன் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருந்த நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்ப், தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து, அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டிவந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் பதற்றமான அரசியல் சூழலை உருவாக்க, ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, தொடர் கலவரங்களை நடத்திவந்தனர்.

அமெரிக்கா
அமெரிக்கா

ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், பாதுகாப்பை மீறி அமெரிக்க கேபிடல் (US Capitol) கட்டடத்துக்குள் நுழைந்து, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்குகளை எண்ணிச் சான்றளிக்கும் பணியை மேற்கொண்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தினர். அதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்ததையடுத்து, வரும், ஜனவரி 20-ம் தேதி ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்கவிருக்கிறார்.

46-வது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவிருக்கும் நிலையில், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்கவிருக்கிறார். பதவியேற்பு விழாவில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் பங்கேற்கவிருக்கிறார். ஆனால், ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கப்போவதில்லை என தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
AP | Evan Vucci

இந்தநிலையில், ஜோ பைடன் பதவியேற்பதற்குச் சில மணி நேரத்துக்கு முன்னதாகவே டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையை காலி செய்துவிட்டு வாஷிங்டனிலிருந்து விமானம் மூலம் ஃபுளோரிடா செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஃபுளோரிடாவிலுள்ள மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) என்ற தனது பிரமாண்டமான பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் ட்ரம்ப் குடியேறவிருக்கிறார். ஃபுளோரிடா கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த பிரமாண்டமான பண்ணை வீட்டில் தங்கவிருக்கும் டொனால்டு ட்ரம்ப், தன்னுடன் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த சிலரையும் பண்ணை வீட்டில் பணிக்கு அழைத்துச் செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு