Published:Updated:

ஜோ பைடனின் `Peloton’ சைக்கிளைக் குறிவைக்கும் அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ்... என்ன காரணம்?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

`அதிபர் ஜோ பைடன், தனது பெலோடான் பைக்கைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், அதிலுள்ள சில அம்சங்களை நீக்கிவிட்டு, அதிபரின் பாதுகாப்புக்குத் தகுந்தவகையில் அதை மறுசீரமைத்தால் போதுமானது’ என்கிறார்கள் வல்லுநர்கள்.

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். அதைத் தொடர்ந்து அவர் குடும்பத்தோடு வெள்ளை மாளிகையில் குடியேறினர். ஜோ பைடனின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான ஜில் பைடன், அவருடைய குழந்தைகள், செல்லப்பிராணிகள் என அனைவரும் ஜோ பைடனின் பதவியேற்பு விழா முடிந்ததும் வெள்ளை மாளிகைக்கு வந்து சேர்ந்தனர்.

ஜோ பைடனின் உடற்பயிற்சி இயந்திரத்துக்கு அனுமதி மறுப்பு!

அடுத்த நான்காண்டுகள் அதிபரும், அவரது குடும்பத்தினரும் வெள்ளை மாளிகையில் குடியிருப்பார்கள் என்பதால், அவர்களது பொருள்கள் அனைத்தும் உயர் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. ஆனால், ஜோ பைடன் பயன்படுத்திவந்த உடற்பயிற்சி இயந்திரமான பெலோடான் பைக்கை (Peloton) வெள்ளை மாளிகைக்குக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
Evan Vucci

``பெலோடான் பைக்கில் இருக்கக்கூடிய பெரியஅளவிலான திரை, மைக்ரோபோன், கேமரா உள்ளிட்டவை இணையத்துடன் இணைக்கும் வசதி இருக்கிறது. அதில், ஹேக்கர்கள் எளிதில் ஊடுருவக்கூடிய அபாயம் இருக்கிறது. அதனால், பைடன் அதைத் தொடர்ந்து பயன்படுத்த வெள்ளை மாளிகையின் பாதுகாப்புக்குழு அனுமதி மறுத்திருக்கிறது” என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

`பெலோடான்’ நிறுவனம் தரப்பிலும் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தரப்பில், `எந்த அளவிலான பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், அதைத் தகர்க்கும் வகையில் ஏதாவது ஒரு சின்ன வழி இருக்கவே செய்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

LiveUpdates: வரலாறு படைத்த கமலா ஹாரிஸ்... `அமெரிக்காவை பாதுகாப்பேன்’ - ஜோ பைடன்! #Inauguration2021

அதனால், அதிபர் தனது பெலோடான் பைக்கைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் அதிலுள்ள சிறப்பம்சங்களை நீக்கிவிட்டு, அதிபரின் பாதுகாப்புக்குத் தகுந்தவகையில் அதை மறுசீரமைத்தால் போதுமானது என்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

இதேபோல், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதன்முறையாக பதவியேற்றபோது, அவருக்கு மிகவும் பிடித்த `பிளாக் பெர்ரி’ போனை அதிபருக்குப் பாதுகாப்பு அளிக்கும் சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்ட்டுகள் வாங்கினர். பின்னர், அதை ஹேக் செய்ய முடியாதபடி சில மாற்றங்களைச் செய்து அவரிடமே திரும்பக் கொடுத்தனர். ஒபாமா எழுதி சமீபத்தில் வெளியான புத்தகத்தில்கூட இதை அவர் குறிப்பிட்டிருப்பார். `அதிபர் பதவியேற்றபோது எனது பிளாக்பெர்ரி போனை வாங்கி, சில பல மாற்றங்களைச் செய்தார்கள். அதன் பிறகு அதிலிருந்து யாருக்கும் போன் செய்ய முடியாதபடி லாக் செய்த பின்னரே என்னிடம் கொடுத்தார். அதன் பிறகு, இ-மெயில் அனுப்பும் வசதி மட்டுமே அந்த பிளாக்பெர்ரி போனில் இருந்தது’ என நினைவுகூர்ந்திருந்தார்.

இதேபோல், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பயன்படுத்தும் செல்போன் குறித்தும் பாதுகாப்புக்குழு எச்சரித்தது. ஆனால், அதைக் கண்டுகொள்ளாத ட்ரம்ப், தொடர்ந்து தனது செல்போனை எந்தவொரு பாதுகாப்புமின்றி பயன்படுத்தி பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடன் - ஜில் பைடன்
ஜோ பைடன் - ஜில் பைடன்
Evan Vucci

பெலடான் பைக்

பெலோடான் பைக் (Peloton Bike) என்பது ஓர் உடற்பயிற்சி இயந்திரம். அதில் கேமரா, மைக்குடன்கூடிய பெரிய அளவிலான திரையும், அதை இணையத்துடன் இணைத்துக்கொள்ளக்கூடிய வகையில் வைஃபை வதியும்கொண்டது. இந்த வசதியைக் கொண்டு இதைப் பயன்படுத்துவோர் உடற்பயிற்சி செய்துகொண்டே அலுவலகங்களில் நடக்கும் ஆன்லைன் மீட்டிங்குகளில் கலந்துகொள்ள முடியும். லாக்டௌன் நாள்களில் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்ல முடியாததால், உலக அளவில் பெலடான் பைக்கின் விற்பனையும் பலமடங்கு எகிறியது.

அதன் சிறப்பம்சங்கள்:

• 150 செ. மீ ஓடுதளம்

• 20 கி. மீ வேகம் வரை செல்லக்கூடியது.

• 23.8 இன்ச் HD தொடுதிரை

• 132 கிலோ எடை

• 4 GB RAM/16 GB ROM வசதி கொண்டது.

இத்தனை சிறப்பம்சங்களைக்கொண்ட இதன் விலையும் ஒன்றும் குறைவில்லை, ஆரம்ப விலையே 2,000 அமெரிக்க டாலர்கள் என்கிறார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 1.5 லட்சம் ரூபாய்!

அடுத்த கட்டுரைக்கு