Published:Updated:

`ட்ரம்ப்புக்கு கவுன்டர் கொடுத்த போலீஸ்; குறிவைக்கப்படும் பத்திரிகையாளர்கள்!’ - திணறும் அமெரிக்கா

காவலர்கள்
காவலர்கள்

`` காவலர்களுடன் இணைந்து செயல்படுங்கள். அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துங்கள். வெறுப்புணர்வை அடக்குவதற்கான ஒரே வழி அன்பு மட்டும்தான்.”

அமெரிக்காவில் தற்போது நிலவும் சூழ்நிலை மிகவும் மோசமானது எனலாம். ஒருபுறம் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது. மறுபுறம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான போராட்டங்கள் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன் உள்ளிட்ட பல நகரங்களில் தீவிரமடைந்து வருகிறது. இரண்டையும் கையாள முடியாமல் அந்நாட்டின் ஆட்சியாளர்கள் திணறி வருகின்றனர். எனினும், காவலர்களுக்கும் மக்களுக்கும் இடையே நடந்துவரும் மோதல்கள் தொடர்பான புகைப்படங்கள் மிகவும் அதிர்ச்சியைத் தருகின்றன. இந்த நிலையில், களத்தில் உள்ள நிலவரங்களைப் பதிவு செய்யும் பத்திரிகையாளர்களையும் காவலர்கள் குறி வைத்து தாக்குவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

போராட்டம்
போராட்டம்

பத்திரிகை துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான புலிட்சர் வென்ற புகைப்பட நிருபரான பார்பரா டேவிட்சன் என்பவர் கடந்த சனிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வந்த போராட்டத்தைப் பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது, காவல்துறைகள் அதிகாரிகள் அவரை அங்கிருந்து வெளியேறும்படி கூறியுள்ளனர். பார்பரா, தன்னுடைய அடையாள அட்டையை அவர்களிடம் காண்பித்துள்ளார். ஆனால், அதைக் காவலர்கள் கண்டுகொள்ளாமல் மீண்டும் அவரிடம் இந்தப் பகுதியைவிட்டு வெளியேறும்படி கூறியுள்ளனர். ``சார், நான் ஒரு பத்திரிகையாளர். இந்தப் போராட்டத்தைப் பதிவு செய்கிறேன்” என்று பார்பரா காவலர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர், அவர் தலையில் தாக்கப்பட்டதாகவும் பார்பரா தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் காயத்திலிருந்து தப்பித்ததாகவும் கூறியுள்ளார்.

`கொரோனா பரவல்... தீவிரமடையும் போராட்டம்... கவலையில் ஆட்சியாளர்கள்!’ - சிக்கித் தவிக்கும் அமெரிக்கா

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த மே மாதம் 25-ம் தேதி கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் நடந்துவரும் இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் பல பத்திரிகையாளர்களும் புகைப்பட கலைஞர்களும் பாதிப்படைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஊடகங்கள் ட்ரம்பின் நிர்வாகத்தைப் போலியான செய்திகள் மூலம் விமர்சிப்பதாக ட்ரம்ப் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தார். சில ஊடகங்களையும் பத்திரிகையாளர்களையும் `மக்களின் எதிரிகள்’ என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். கொரோனா தொடர்பாக நடந்த சந்திப்புகளிலும் ட்ரம்ப் பத்திரிகையாளர்களிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, சில நாள்களுக்கு முன்பு ட்ரம்ப் ஊடகங்களை `லேம்ஸ்ட்ரீம் மீடியா’ என்று குற்றம் சாட்டினார். மேலும், கடந்த பல நாள்களாகவே காவலர்கள், பத்திரிகையாளர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாகப் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, தற்போது நடந்து வரும் போராட்டத்தில் பத்திரிகையாளர்களைக் காவலர்கள் குறி வைத்து தாக்குவதாகத் தெரிகிறது என்கிறார் பார்பரா. மேலும், ``இந்த மாதிரியான அனுபவங்களை இதற்கு முன்பு நான் ஒருபோதும் பெற்றது இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போராட்டங்கள் மற்றும் வன்முறைகளின்போது ஊடகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவது சர்வாதிகார நாடுகளில் பொதுவானது. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் சாதாரண விஷயம் அல்ல என்றும் அங்கு பத்திரிகை சுதந்திரம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர். மின்னெசொட்டா மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை சிஎன்என் ஊடகத்தைச் சேர்ந்த ஒரு குழுவைக் கைது செய்ததாகவும் அதேநாளில் போராட்டத்தை நேரடியாக லைவ் செய்துகொண்டிருந்த லூயிஸ்வில்லே என்ற நிருபர் மீது அதிகாரிகள் பெப்பெர் ஸ்பிரே தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டம்
போராட்டம்

இதேபோல பிளிண்ட் வெல்ஷ் என்ற பத்திரிகையாளர், கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் நடந்த போராட்டத்தைப் பதிவு செய்துகொண்டிருக்கும்போது காவல்துறை அதிகாரிகளால் பலமுறை தாக்கப்பட்டதாக அவர் கூறினார். அவர் அணிந்திருந்த பத்திரிகையாளருக்கான அடையாள அட்டையை அவர்கள் பார்த்த பின்னரும் தொடர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. மூத்த பத்திரிகையாளரான மேகி கோர்த் என்பவர் மின்னெபொலிஸ் பகுதியில் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது அதிகாரிகள் அவர்கள் முன்பு ஆயுதங்களுடன் நின்றுள்ளனர். உடனே அவர்கள், ``ப்ரஸ், ப்ரஸ், வி ஆர் ப்ரஸ்” என்று சொல்லி அடையாள அட்டைகளைக் காட்டியுள்ளனர். இதற்கு காவலர்கள் `வாயை மூடு’ என்று சொல்லியபடி தொடர்ந்து ஆயுதங்களால் குறிபார்த்து நின்றதாகத் தெரிவித்துள்ளனர்.

`அதிகப்படியான அழுத்தம்; தடைப்பட்ட ஆக்ஸிஜன்..’ - அதிர்ச்சி கொடுத்த ஜார்ஜின் பிரேதப் பரிசோதனை அறிக்கை

ஹ்யூங் சாங் என்ற புகைப்பட நிருபர் கடந்த வியாழக்கிழமை கொலராடோ பகுதியில் போராட்டக்காரர்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது காவல் அதிகாரிகள் அவரை சுட்டிக்காட்டி பெப்பர் ஸ்பிரே தாக்கல் நடத்த ஆரம்பித்ததாக அவர் கூறியுள்ளார். தனது கழுத்தில் அடையாள அட்டையை அவர் அணிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மின்னெபொலிஸ் பகுதியில் நடந்த வன்முறைகளைப் பதிவு செய்துகொண்டிருந்த நிருபர் அலி வெல்ஷி என்பவரும் ரப்பல் புல்லட்டுகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். போராட்டங்கள் மற்றும் வன்முறைகளின்போது களத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் காயங்களுக்கு உள்ளாவது இயல்பான ஒன்றுதான். ஆனால், தற்போது நடைபெறும் போராட்டத்தில் அவர்கள் தெரிந்தே தாக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகளை எழுப்புவதுதான் இங்கு கவனத்துக்கு உரியது.

போராட்டங்களைப் பதிவு செய்யச் சென்ற ஐந்து பத்திரிகையாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இயக்குநர் புரூஸ் ஷாபிரோ பேசும்போது, ``பத்திரிகைகள் மீதான தாக்குதல்கள் தற்போது தண்டனையற்ற கலாசாரமாக உருவாகியுள்ளது. அமெரிக்காவில் பத்திரிகை சுதந்திரத்தைக் கைவிடுவதன் அடிப்படை இது” என்று கூறியுள்ளார்.

காவல்துறை அதிகாரி
காவல்துறை அதிகாரி

இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாகப் பேசிய ட்ரம்ப், நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு தான்தான் தலைவர் என்று அறிவித்தார். மேலும், ``மக்கள் நலனுக்காகத் தேசிய பாதுகாப்புப் படையைக் கொண்டு ஆளுநர்கள் போராட்டங்களைத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், ஆயிரம் ஆயிரம் ராணுவ வீரர்கள் நகரில் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவார்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

ட்ரம்பின் கடுமையான நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஹூஸ்டன் பகுதியின் காவல் உயர் அதிகாரிகளில் ஒருவர் `மக்களின் மனதையும் இதயத்தையும் வெல்ல வேண்டிய நேரம் இது. ஆதிக்கம் செலுத்த வேண்டிய நேரம் அல்ல” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அதிகாரி அசிவெடோ, ``கருணையையும் பலவீனத்தையும் நாங்கள் குழப்பிக்கொள்ளவில்லை. தெளிவாக இருக்கிறோம். கடந்த காலங்களைவிட தற்போது எங்களுக்கு தலைமை தேவையாக இருக்கிறது. மேலும், நாட்டின் அதிபராக செயல்பட வேண்டிய நேரம் இது. அப்ரண்டிஸ் போல இருக்க முயற்சி செய்ய வேண்டாம். இது ஹாலிவுட் திரைப்படம் அல்ல. உண்மையான வாழ்க்கை. உண்மையான வாழ்க்கை தற்போது ஆபத்தில் உள்ளது. இந்த நாட்டின் காவல்துறை அதிகாரிகள் சார்பாக நான் அமெரிக்க அதிபரிடம் ஒன்று கூற விரும்புகிறேன். உங்களிடம் சொல்வதற்கு ஆக்கபூர்வமான விஷயங்கள் எதுவும் இல்லையென்றால், தயவுசெய்து வாயை மூடிக்கொண்டு இருங்கள். பொதுமக்களிடம் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன். காவலர்களுடன் இணைந்து செயல்படுங்கள். அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துங்கள். வெறுப்புணர்வை அடக்குவதற்கான ஒரே வழி அன்பு மட்டும்தான்” என்று கூறியுள்ளார்.

Credits :NYT, CNN

`நோ ஜஸ்டிஸ்.. நோ பீஸ்..’ - காவலரால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்; பற்றியெரியும் அமெரிக்கா
அடுத்த கட்டுரைக்கு