Published:Updated:

கனடாவைக் கலக்கிய 1972 சென்டிமென்ட்! - தந்தை பாணியில் மீண்டும் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ

தேர்தல் பிரசாரத்தின்போது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஆண்ட்ரூ ஷீர் கடுமையான போட்டியை அளித்தார்.

Justin Trudeau
Justin Trudeau

ஜஸ்டின் ட்ரூடோ.. இந்தப் பெயர் கனடாவில் எத்தனை பிரபலமோ, அதே அளவுக்குத் தமிழகத்திலும் பிரபலம். பாரம்பர்ய தமிழக விழாக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, தமிழ் கலாசாரம் மீது கொண்ட மதிப்பு உள்ளிட்டவை ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தமிழகத்திலும் ரசிகர்களை உருவாக்கியது.

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த 2015-ம் ஆண்டு கனடா பிரதமராக பதவியேற்றார் ஜஸ்டின் ட்ரூடோ. இந்த நிலையில், அந்நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் நேற்று நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது. தேர்தல் களத்தில் லிபரல் கட்சிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. லிபரல் கட்சி சார்பில் ட்ரூடோ போட்டியிட்டார்.

தேர்தல் பிரசாரத்தின்போது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஆண்ட்ரூ ஷீர் கடுமையான போட்டியை அளித்தார். இதனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கன்சர்வேட்டிவ் கட்சிதான் வெற்றி பெறும் என்ற தகவல்கள் வெளியானது.

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

இந்தப் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சாதகமாக வர உற்சாகமானார்கள் லிபரல் கட்சியினர். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கமும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குச் சாதகமாக அமைந்தது. எனினும் பெரும்பான்மைக்குத் தேவையான இடத்தை லிபரல் கட்சி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

லிபரல் கட்சி 156 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை. அதனால் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன.

தேர்தல் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ, ``நன்றி கனடா... நாடு சரியான திசையில்தான் பயணம் செய்கிறது என எங்கள் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. நீங்கள் யாருக்கு வாக்களித்து இருந்தாலும் எங்கள் கட்சி, கனடாவின் அனைத்து மக்களுக்காகவும் உழைக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஆண்ட்ரூ ஷீர், வெளியாகும் தேர்தல் முடிவுகள் தொடர்பாக பேசுகையில், ``மிஸ்டர் ஜஸ்டின் ட்ரூடோ, உங்களது அரசாங்கம் வீழ்ச்சியை சந்திக்கும்போது கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிவாகை சூடத் தயாராக இருக்கும்” என்றார்.

உலகம் முழுவதும் இருந்து ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் ஆளாக தனது வாழ்த்துச் செய்தியைப் பதிவு செய்தார். ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ 1972-ம் ஆண்டு குறைவான வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறும் இருக்கிறது. தற்போது ஜஸ்டின் ட்ரூடோவும் மீண்டும் பிரதமராக பதவியேற்றாலும் மைனாரிட்டி அரசுக்குத்தான் அவர் தலைமை தாங்க முடியும். இந்த ஒற்றுமை தொடர்பாகவும் பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

லிபரல் கட்சி ஆதரவாளர்கள் மோன்ரியாலில் வெற்றியைக் கொண்டாட தொடங்கியுள்ளனர். அங்கு கூடிய லிபரல் கட்சியின் ஆதரவாளர்கள் ``இன்னும் நான்கு ஆண்டுகள் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி” என உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஜஸ்டின் ட்ரூடோ பின்னடைவைச் சந்தித்தது ஏன்?

கனடாவில் தமிழ் மக்களின் வாக்குகள் அதிகம் இருக்கின்றன. கடந்த தேர்தலின்போது தமிழ் மக்களிடமும் கனடா மக்களிடமும் அதிக செல்வாக்கை ட்ரூடோ பெற்றிருந்த போதும் இந்தத் தேர்தல் அவருக்கு கடினமாக மாறியதற்கும் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

தனியார் நிறுவனம் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அவர் தடை விதித்தது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இனவெறியைத் தூண்டும் வகையிலான அவரது பழைய புகைப்படங்களும் வெளியானது. இந்த இரு விவகாரங்களும் அவரின் செல்வாக்கை சரிய வழிவகை செய்தது. இந்த இரு விவகாரங்களையும் முன்னிலைப்படுத்தி கன்சர்வேட்டிவ் கட்சி தீவிர பிரசாரம் செய்ததால் ஜஸ்டின் ட்ரூடோ பின்னடைவைச் சந்தித்தாகக் கூறப்படுகிறது.