Published:Updated:

விவசாயிகள் போராட்டம்; `உரிமைகளைப் பாதுகாக்க கனடா துணையிருக்கும்!’ - ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு

கனடா பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ( Sean Kilpatrick )

விவசாயிகள் போராட்டம் நடத்த ஜந்தர் மந்தர் மற்றும் ராம்லீலா மைதானங்களை ஒதுக்குமாறு விடுத்த கோரிக்கையை, மத்திய அரசு ஏற்காததால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

டெல்லியில் வலுப்பெற்றுவரும் இந்திய விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உலகத் தலைவர்களின் வரிசையில் விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு முதல் ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார்.

`கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் மசோதாக்களும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் `குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடைமுறையை நிர்மூலமாக்கிவிடும்’ என்று நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

விவசாயிகளின் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் போராட்டம் நடத்த தொடங்கியிருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், கடந்த 27-ம் தேதி போலீஸாரின் தடியடி, கண்ணீர்ப் புகைக்குண்டுகளை மீறியும் தலைநகர் டெல்லிக்குள் நுழைய முற்பட்டனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள், போராட்டம் நடத்த ஜந்தர் மந்தர் மற்றும் ராம்லீலா மைதானங்களை ஒதுக்குமாறு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்போது டெல்லியின் புறநகர் பகுதிகளிலுள்ள நெடுஞ்சாலைகளில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

டெல்லி போராட்டம்;  பேச்சுவார்த்தையைப் புறக்கணித்த விவசாயிகள் - என்ன செய்யப்போகிறார் மோடி?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அதை நிராகரித்த விவசாயிகள் 6-வது நாளாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்திருந்தார். இதையும், அனைத்துத் தலைவர்களையும் அழைக்காமல் 32 குழுத் தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருப்ப்பதால் அந்த அழைப்பை விவசாயிகள் நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்தநிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கும் இந்திய விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது குறித்துக் கருத்து தெரிவித்திருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ, ``விவசாயிகளின் அமைதியான போராட்டத்தின் உரிமைகளைப் பாதுகாக்க கனடா எப்போதும் துணையிருக்கும்" என்று பேசியிருக்கிறார்.

நேற்று, குரு நானக்கின் 551-வது பிறந்தநாளை ஒட்டி நடந்த ஆன்லைன் நிகழ்வு ஒன்றில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ``இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த செய்திகளை என்னால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை. இந்த இக்கட்டான சூழலில் நமது குடும்பம் மற்றும் நண்பர்கள் குறித்து நாங்கள் கவலைக்கொண்டிருக்கிறோம். அமைதியான வழியில் உரிமைக்காகப் போராடுபவர்களுக்கு கனடா என்றும் துணை நிற்கும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். எங்களது இந்தக் கவலை குறித்து இந்திய அதிகாரிகளின் பார்வைக்கும் கொண்டு சென்றிருக்கிறோம். நாம் இணைந்து செயலாற்ற வேண்டிய தருணம் இது” என்று கூறியிருக்கிறார்.

கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்கள் அதிகம் வாழ்ந்துவருகின்றனர். கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சிங், டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ஏற்கெனவே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு