Published:Updated:

காபூல் குண்டுவெடிப்பு: சிதறிய உடல்கள்; முன்னரே எச்சரித்த அமெரிக்கா! - பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ்

காபூல் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு
காபூல் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு

விமான நிலைய இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் பிற பகுதிகளிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 5 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைபற்றியதிலிருந்து அங்கு அசாதாரணமான சூழலே நிலவுகிறது. ஆப்கனைவிட்டு வெளியேற மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவருகிறார்கள். கிடைத்த விமானத்தில் கிளம்பி, ஆப்கனைவிட்டு வெளியேறினால் போதும் என மக்கள் குவிந்துவருகிறார்கள். இந்தநிலையில், நேற்று காபூல் விமான நிலையத்தில் திடீரென அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன.

காபூல்
காபூல்

அதிபயங்கர சத்ததுடன் வெடித்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தற்போது வரை 73 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்க வீரர்கள், மருத்துவர்கள் அடங்கிய குழுவைச் சேர்ந்த 13 பேரும் அடங்குவர். தாலிபன் அமைப்பைச் சேர்ந்த சிலரும் இந்த குண்டு வெடிப்பில் பலியாகியிருக்கிறார்க்ள். அப்பாவி மக்கள் சுமார் 60 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபூல் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு நடந்திருப்பதை அமெரிக்காவின் ராணுவ தளமான பென்டகன் உறுதிசெய்திருக்கிறது. எனினும், மக்களை வெளியேற்றும் தங்களது பணி தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தக் கோரச் சம்பவத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் ஆப்கன், பாகிஸ்தான் பிரிவு இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் பல்வேறு கோரத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. மசூதிகள், புனிதத் தலங்கள், பொது இடங்கள், மருத்துவமனைகளிலும்கூட தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

காபூல் குண்டு வெடிப்பு
காபூல் குண்டு வெடிப்பு

குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாகவே காபூல் விமான நிலையத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்த அச்சுறுத்தல் காரணமாக அந்தப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அமெரிக்கா எச்சரித்ததுபோலவே தற்போது தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காபூல் விமான நிலையத்திலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன. பல மனித உடல்கள் விமான நிலையத்துக்கு அருகே இருக்கும் ஓடையில் சிதறிக் கிடக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 143 பேர் வரை காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள். தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்துவருவது ஒருபுறம் கவலை அளிக்கிறது. அதேநேரம், விமான நிலைய இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் பிற பகுதிகளிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை ஐந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபூல் குண்டு வெடிப்பு
காபூல் குண்டு வெடிப்பு

இந்தக் கோர சம்பவத்துக்கு, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தியா தனது கண்டனத்தில், ``காபூலில் நடந்த குண்டு வெடிப்பை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் காயமடைந்தவர்களுடன் இருக்கும். இன்றைய தாக்குதல்கள், பயங்கரவாதத்துக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் அனைவருக்கும் எதிராகவும் உலக நாடுகள் ஒற்றுமையாக நிற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களை எதிர்த்து நிற்கும் `பஞ்ச்ஷிர்' மக்கள்; யார் இவர்கள், பின்னணி என்ன?
அடுத்த கட்டுரைக்கு