Published:Updated:

மிகப்பெரிய தோல்வி - கமலா ஹாரிஸ்; வேகமான வளர்ச்சி - மைக் பென்ஸ்

அதிபர் ட்ரம்ப் சீனாவைக் கையாண்ட விதத்தால் அமெரிக்கர்கள் வேலைகளையும் உயிர்களையும் இழந்திருக்கிறார்கள்.

பிரீமியம் ஸ்டோரி
நவம்பர் 3-ம் தேதி அன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அமெரிக்கத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த மாத இறுதியில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான டொனால்டு ட்ரம்ப்பும் ஜோ-பைடனும் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த அக்டோபர் 7-ம் தேதி அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர்களான மைக் பென்ஸும் கமலா ஹாரிஸும் நேரடி விவாதத்தில் பங்கேற்றனர். சால்ட்லேக் சிட்டியிலுள்ள, உடா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நேரடி விவாதத்தை, பிரபல அமெரிக்கப் பத்திரிகையாளர் சூசன் பேஜ் நெறிப்படுத்தினார்.

அந்த காரசாரமான விவாதத்தின் ஹைலைட்ஸ்:

* பைடன் - கமலா ஹாரிஸ் அணி வென்றால், அமெரிக்கர்கள் அதிக வரி செலுத்த வேண்டிய நிலை கண்டிப்பாக வரும். பைடன் அமெரிக்காவை சீனாவிடம் சரணடையச் செய்வார்.’ - மைக் பென்ஸ்

நம்முடைய நட்பு நாடுகளெல்லாம் ட்ரம்பைவிடச் சீன அதிபர்மீது கூடுதல் மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருக்கின்றன. அதிபர் ட்ரம்ப் சீனாவைக் கையாண்ட விதத்தால் அமெரிக்கர்கள் வேலைகளையும் உயிர்களையும் இழந்திருக்கிறார்கள். - கமலா ஹாரிஸ்

* 2,10,000 அமெரிக்கர்கள் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். ட்ரம்ப் நிர்வாகத்தின் திறமையின்மை மற்றும் இயலாமைதான் இதற்குக் காரணம். நம் நாட்டு வரலாற்றில் எந்தவோர் அதிபர் நிர்வாகத்தின்போதும் இல்லாத மிகப்பெரிய தோல்வி இது என்பதை அமெரிக்க மக்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். - கமலா ஹாரிஸ்

தடுப்பூசியில் அமெரிக்கா வேகமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது வைக்கும் விமர்சனங்கள், அமெரிக்காவின் சுகாதாரத்துறை பணியாளர்கள்மீது வைக்கும் விமர்சனங்கள். - மைக் பென்ஸ்

* உலகம் சந்திக்கும் மிகப்பெரிய ஆபத்து, பருவநிலை மாற்றம். கார்பன் வெளியீட்டைக் குறைப்பதற்கான திட்டங்களைக் கொண்டிருக்கும் `கிரீன் நியூ டீல் கிளைமேட் ஒப்பந்தம்’ மிக முக்கியமானது. - கமலா ஹாரிஸ்

புதைபடிவ எரிபொருள்களுக்கு ஜோ பைடன் தடை விதிக்க விரும்புகிறார். இந்த `கிரீன் நியூ டீல் கிளைமேட் ஒப்பந்தம்’ அமெரிக்க எரிபொருள் சக்தியைச் சிதைத்துவிடும். - மைக் பென்ஸ்

* கொரோனா தொற்று குறித்த தகவல், ஜனவரி 28-ம் தேதியே அதிபர் மற்றும் துணை அதிபருக்குச் சொல்லப்பட்ட நிலையில், அவர்கள் அதை முறையாகக் கையாளவில்லை. `கொரோனா பரவல் என்பது ஒரு வதந்தி’ என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். காரணம், ட்ரம்ப்பிடம் கொரோனாவை எதிர்கொள்ளச் சரியான செயல்திட்டம் இல்லை. - கமலா ஹாரிஸ்

அதிபர் ட்ரம்ப், முதல் நாளிலிருந்தே மக்களின் ஆரோக்கியத்துக்கு முதலிடம் கொடுத்தார். நோய்ப் பரவலுக்குக் காரணமான சீனாவுடனான போக்குவரத்துகள் அனைத்தையும் ரத்து செய்து பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றினார். இந்த வருட இறுதிக்குள் கொரோனா நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படும். - மைக் பென்ஸ்

கமலா ஹாரிஸ் - மைக் பென்ஸ்
கமலா ஹாரிஸ் - மைக் பென்ஸ்

* சீனாவுடனான சமீபத்திய வர்த்தகப்போர் ட்ரம்ப் நிர்வாகத்தின் சாதனைகளில் ஒன்று.’’ - மைக் பென்ஸ்

சீனாவுடனான வர்த்தகப் போர், அமெரிக்காவின் உற்பத்திப் பணிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி, இந் நாட்டின் விவசாயிகளுக்குத் தீங்கு விளைவித்துள்ளது. - கமலா ஹாரிஸ்

* தேர்தலுக்கு முன்பே கொரோனா தடுப்பூசிகளை ட்ரம்ப் அரசு அறிமுகப்படுத்தினாலும், அவற்றை மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்துவேன். ஆனால், ட்ரம்ப் பயன்படுத்தலாம் என்று சொன்னால் நான் பயன்படுத்த மாட்டேன். - கமலா ஹாரிஸ்

நீங்கள் தொடர்ந்து தடுப்பூசியைக் குறைத்து மதிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மை என்னவென்றால், இந்த ஆண்டு இறுதிக்குள் நம் நாட்டில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும். அது எண்ணற்ற அமெரிக்க உயிர்களைக் காப்பாற்றும். எனவே, இதில் அரசியல் செய்து மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். - மைக் பென்ஸ்

* நீதியின்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த நாடு அமைப்புரீதியாக இனவெறியைக் கொண்டிருப்பதாகக் கூறுவது சட்ட அமலாக்கத்துறையில் இருப்பவர்களை அவமானப் படுத்துவதுபோல் இருக்கிறது. - மைக் பென்ஸ்

சான் பிரான்சிஸ்கோவின் முன்னாள் அரசு வழக்கறிஞராகவும், கலிஃபோர்னியாவின் முன்னாள் அட்டார்னி ஜெனரலாகவும் இருந்த எனக்குச் சட்ட அமலாக்கம் குறித்து துணை அதிபர் பாடம் எடுப்பதை, நான் கேட்டுக்கொண்டிருக்க முடியாது. - கமலா ஹாரிஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு