Published:Updated:

US Elections:`தேர்தல் பிரசாரத்தில் நடனம்!’- கமலா ஹாரிஸின் வைரல் ரெயின் டான்ஸ்

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ், தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும்விதமாக குடைபிடித்தபடியே மழையில் நடனமாடினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. கொரோனா காலத்திலும் ட்ரம்ப், பைடன் கட்சிகள் நடத்தும் பிரசாரக் கூட்டத்தில் மக்கள் ஆர்வமாகக் கூடுகின்றனர். ஃபுளோரிடா மாகாணம், ஜாக்சன்வில்லில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், மழையில் குடைபிடித்தபடியே நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. `கமலா ஹாரிஸுடன் நடனப் போட்டிக்கு தயாரா?’ போன்ற வாசகங்களுடன் நெட்டிசன்கள் அதிபர் ட்ரம்ப்பைச் சீண்டிவருகின்றனர்.

அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல்கள் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதில், அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். இதேபோல், துணை அதிபர் பதவிக்கு ட்ரம்ப் கட்சி சார்பில் மைக் பென்ஸ், ஜோ பைடன் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் இருவரும் போட்டியிடுகின்றனர்.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்
John Raoux

இந்தத் தேர்தலில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றால், அமெரிக்க வரலாற்றில், `முதல் பெண் துணை அதிபர்' என்ற சாதனையைப் படைப்பார். மேலும், `முதல் இந்திய வம்சாவளிப் பெண் துணை அதிபர்' என்ற பெருமையையும் அவர் பெறுவார். தற்போது, இரண்டு கட்சி வேட்பாளர்களும் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தனது உதவியாளர்கள் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து, சில நாள்கள் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதை கமலா ஹாரிஸ் தவிர்த்துவந்தார். இந்தநிலையில், ஆர்லாண்டோ, ஜாக்சன்வில்லே ஆகிய நகரங்களில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கமலா ஹாரிஸ் கலந்துகொண்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஜாக்சன்வில்லே நகரில், தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் கமலா ஹாரிஸ் பிரசாரம் செய்தபோது அங்கு திடீரென மழை பெய்ததது.

`ட்ரம்ப் நிர்வாகத்தின் பெரும் தோல்வி; செயல்திட்டம் எதுவுமில்லை!'- கமலா ஹாரிஸ் கடும் விமர்சனம்

அதைப் பொருட்படுத்தாத கமலா ஹாரிஸ், குடையைப் பிடித்துக்கொண்டு தேர்தல் பிரசார உரையைத் தொடர்ந்தார். அப்போது அவர், தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும்விதமாக குடையைப் பிடித்தபடியே மழையில் நடனமாடினார்.

இதை அவரது ஆதரவாளர்கள் பலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகப் பரவி, 10 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவைப் பார்த்திருக்கிறார்கள்.

இதற்கிடையே குடையுடன், தான் நடனமாடும் புகைப்படத்தை கமலா ஹாரிஸ் ட்விட்டரில் பகிர்ந்து, `மழையோ அல்லது வெயிலோ ஜனநாயகம் யாருக்காகவும் காத்திருக்காது’ என பதிவிட்டிருக்கிறார்.

ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டுவரும் கமலா ஹாரிஸ் வீடியோவுக்கு, `ஹாரிஸின் மகிழ்ச்சியையும் நேர்மறையான சிந்தனையையும் நேசிக்கிறோம்’ என்று நெட்டிசன்கள் அவர் மீது அன்பைப் பொழிந்தனர். மேலும், வெறுப்பு விவாதங்களுக்கு மத்தியில் இது போன்ற வீடியோக்கள் தேவை என்றும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். `அதிபர் ட்ரம்ப் , கமலா ஹாரிஸூடன் நடனப் போட்டிக்கு வரத் தயாரா?’, `கமலா ஹாரிஸ் - கூல் வி.பி (துணை அதிபர்)’ போன்ற கருத்துகளையும் கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் பகிர்ந்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு