Published:Updated:

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து சென்னை பூர்வீக கமலா விலகல்... என்ன காரணம்?

கமலா ஹாரீஸ்
News
கமலா ஹாரீஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து கமலா ஹாரீஸ் விலகியுள்ளார். பெரும் பணக்காரர்களுக்கு மத்தியில் தன்னிடத்தில் பிரசாரத்தில் ஈடுபட போதிய பணம் இல்லை என்று கமலா குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளராகத் தற்போதையை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் களமிறங்குகிறார். இவரை, எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் உட்பட 17 பேர் களத்தில் இருந்தனர். இதற்கிடையே, பெரும் கோடீஸ்வரரும் நியூயார்க் நகர முன்னாள் மேயருமான மைக்கேல் ப்ளூம்பெர்க்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

ஒபாமாவுடன் கமலா
ஒபாமாவுடன் கமலா

அமெரிக்காவின் மற்றொரு பெரும் பணக்காரரான டாம் ஸ்டேயரும் அதிபர் தேர்தலில் குதித்துள்ளார். இதனால், அமெரிக்க அதிபர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ், அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 'நான் பில்லியனர் இல்லை என்பதால் போட்டியிலிருந்து விலகுகிறேன்' என்று கமலா ஹாரீஸ் கூறியுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வேட்பாளராக வேண்டுமென்றால், முதலில் கட்சிக்குள் ஆதரவு கிடைக்க வேண்டும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். இதற்காக, பிரசாரம் செய்யவும் பெரும் தொகை வேண்டும். அமெரிக்க அதிபர் தேர்தலில் டி.வி விவாதங்கள், விளம்பரங்கள் அதிக முக்கியத்துவம் வகிக்கும். விளம்பரங்களுக்குச் செலவழிக்கவும் அதிக பணம் தேவை. தங்கள் பிரசாரத்துக்காக மக்களிடமிருந்து வேட்பாளர்கள் நன்கொடை பெறலாம்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆனால், கமலா ஹாரீஸுக்கு போதிய நிதி கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து ,அதிபர் பதவிக்கான போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இது குறித்து கமலா ஹாரீஸ் கூறுகையில், ''பெரும் பணக்காரர்கள் தங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். என்னிடம் போதிய பணம் இல்லை. நான் பில்லியனரும் அல்ல. என் வாழ்க்கையில் எடுத்த மிகக் கடினமான முடிவு இது. என் ஆதரவாளர்களுக்கு நன்றி'' எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில மாதங்களுக்கு முன் ஜனநாயகக் கட்சியின் முதல் ஐந்து வேட்பாளர்களில் ஒருவராக கமலா ஹாரீஸ் கருதப்பட்டார். சொந்த ஊரான ஓக்லேண்ட் நகரில் கடந்த ஜனவரியில் கமலா ஹாரீஸ் பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது 20,000 ஆதரவாளர்கள் திரண்டனர். இதனால், கமலா ஹாரீஸ் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவானது. வரும் டிசம்பர் 19-ம் தேதி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கான விவாதம் நடைபெற உள்ளது. அதில், பங்கேற்று விவாதிக்கவும் கமலா தகுதி பெற்றிருந்தார். கடந்த ஜூலை மாதத்தில் 15 சதவிகித ஆதரவு கமலாவுக்குக் கிடைத்திருந்தது.

உங்களை நான் மிஸ் செய்கிறேன் கமலா.
டொனால்ட் ட்ரம்ப்

ஆனால், சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில் கமலாவுக்கு 3.4 சதவிகித வாக்குகளே கிடைத்தன. கடைசியாக அதிபர் தேர்தல் வேட்பாளராகக் களத்தில் குதித்த மைக் ப்ளூம்பெர்க், கமலாவை பின்னுக்குத் தள்ளிவிட்டார். இவர், அதிபர் தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்து இரு வாரங்களே ஆகின்றன. இந்த இரு வாரத்தில் மட்டும் விளம்பரங்களுக்காக 33 மில்லியன் அமெரிக்க டாலர்களை ப்ளூம்பெர்க் செலவழித்துள்ளார். இது, கமலா திரட்டிய மொத்த தொகையைவிட இரு மடங்கு அதிகம். கமலா போட்டியிலிருந்து விலகியதற்கு, அதிபர் ட்ரம்ப் வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், 'நான் உங்களை மிஸ் செய்கிறேன் கமலா!' என்று கூறியுள்ளார்.

கமலா ஹாரீஸ் கலிஃபோர்னியாவிலிருந்து செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். மிகச்சிறந்த வக்கீலும் கூட. சென்னையைச் சேர்ந்த ஷியாமலா கோபாலன் என்பவர் இவரின் தாய். ஷியாமலா அமெரிக்காவில் புற்று நோய் மருத்துவராகப் பணியாற்றினார். தந்தை பெயர் டொனால்ட் ஹாரீஸ். இவர் ஜமைக்காவைச் சேர்ந்தவர். கமலா சென்னை மீது அதிக பற்றுக்கொண்டவர். அடிக்கடி சென்னைக்கு விசிட் அடிப்பவர்.

பிரசாரத்தில் கமலா ஹாரீஸ்
பிரசாரத்தில் கமலா ஹாரீஸ்

1964-ம் ஆண்டு பிறந்த கமலா, கலிஃபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக இருந்தார். கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லேண்டில் பிறந்த கமலா, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர். கலிபோர்னியாவில் இருந்து செனட்டராகத் தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது பெண். அதோடு, முதல் இந்திய மற்றும் ஜமைக்கா வம்சாவளியைச் சேர்ந்த செனட்டர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முயன்ற முதல் இந்திய வம்சாவளியும் இவர் மட்டுமே!