உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர்ப் பதற்றம் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், தங்கள் படைகளில் ஒரு பகுதியைத் தாங்கள் திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும், போர் செய்வதற்கு விரும்பவில்லை என்றும் ரஷ்யா தரப்பிலிருந்து தகவல் வெளியானது.
ஆனால், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் புதன்கிழமை பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``ரஷ்யா தனது ஒரு பகுதி வீரர்கள் பின்வாங்குவதுபோலக் காண்பித்துக்கொண்டு, முக்கியமான படைப்பிரிவுகளை எல்லையை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் ஊடக பேட்டி ஒன்றில் ரஷ்யாவை மிகக் கடுமையாகச் சாடியிருக்கிறார். ``உக்ரைன் எல்லை அருகே ரஷ்யா போர் விமானங்களை நிலை நிறுத்தி தனது படைகளை பலப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் உக்ரைன் எரிவாயு ஆலை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா உக்ரைனை நோக்கி முன்னேறினால், இதுவரை இல்லாத வகையில் கடுமையான பொருளாதார தடை விதிக்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளார்.
