`அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலிலும் கமலா ஹாரிஸ்தான் என்னுடன் களம்காணுவார்' என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் துணை அதிபராக இருப்பவர் கமலா ஹாரிஸ். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஓராண்டு ஆட்சியில், பல்வேறு முக்கிய ஆலோசனைகளில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடம்பெறவில்லை. இதனால் இவர்களுக்கிடையே ஏதோ கருத்து வேறுபாடு இருப்பதாகவும், ஜோ பைடன் இவரை ஓரங்கட்டுவதாகவும் செய்திகள் பரவிவந்தன.

இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அதிபர் ஜோ பைடன், ``2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் இருப்பார் என்று நினைக்கிறேன். கமலா ஹாரிஸ் மிகச் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார்" எனக் கூறினார். இதன் மூலம், அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் நிலவிவந்த சலசலப்பு முடிவுக்கு வந்திருக்கிறது.
