Published:Updated:

`இது தொடக்கம்தான்... முடிவு அல்ல!’ - கமலா ஹாரிஸ்; விழாக்கோலம் பூண்ட மன்னார்குடி கிராமம்

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ் ( Andrew Harnik )

`நான் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர்தான். ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே. முடிவு அல்ல. ஒரு பெண்ணை நாட்டின் துணை அதிபராகத் தேர்வு செய்யும் துணிச்சல் பைடனுக்கு இருந்திருக்கிறது.’ - கமலா ஹாரிஸ்.

உலக நாடுகளின் ஒவ்வொரு நகர்விலும் ஏதாவது ஒரு வகையில் முக்கியப் பங்குவகிக்கும் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல்தான் தற்பொழுது டாக் ஆஃப் தி வேர்ல்டு!

இந்தநிலையில், உலகமே எதிர்பார்த்திருந்த `அடுத்த அமெரிக்க அதிபர் யார்?’ என்ற கேள்விக்கு நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகி விடை பகிர்ந்தன. பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் சொன்னதுபோல ஜனநாயக் கட்சி வேட்பாளர்களான ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் அமோக வெற்றி பெற்றனர்.

கமலா ஹாரிஸ், ஜோ பைடன்
கமலா ஹாரிஸ், ஜோ பைடன்
Andrew Harnik

இதன் மூலம் ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராகத் தேர்வாகியிருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், நாட்டின் முதல் பெண் துணை அதிபராக தேர்வாகியிருக்கிறார்.

அமெரிக்காவின் உள்ளூர் தலைவர்கள் தொடங்கி உலக நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் வெற்றி பெற்ற பைடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நிகழ்ந்த வெற்றி உரை நிகழ்வில் பங்கேற்று கமலா ஹாரிஸ் பேசுகையில்,

``வெற்றிக்காக உழைத்து, எங்கள் மீது நம்பிக்கைவைத்து ஜனநாயகத்தைக் காத்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர்தான். ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே. முடிவு அல்ல. ஒரு பெண்ணை நாட்டின் துணை அதிபராகத் தேர்வு செய்யும் துணிச்சல் பைடனுக்கு இருந்திருக்கிறது. ஜனநாயகம் என்பது ஒரு நிலையல்ல; செயல். அதை மக்களால் மட்டுமே செயல்படுத்த முடியும். நாட்டு மக்கள் மீது ஜோ பைடன் வைத்திருந்த அளவற்ற அன்பே இந்த வெற்றிக்கு வழிவகை செய்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடியதன் விளைவாக ஜோ பைடனுக்கு வாக்களித்ததன் மூலம் உண்மை, ஒற்றுமை, நம்பிக்கைக்கு வாக்களித்திருக்கிறீர்கள்” என்று தெரிவித்தார்.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்

தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், ``இந்த வெற்றி தருணத்தில் நான் என் தாயான ஷியாமளா கோபாலன் ஹாரிஸை நினைவுகூர விரும்புகிறேன். அவர் தனது 19-வது வயதில் அமெரிக்காவில் குடியேறியபோது இது போன்ற ஒரு வெற்றி தருணத்தை எட்டுவோம் என்று எண்ணியிருக்க மாட்டார். ஆனால், இது போன்ற நிலை அமெரிக்காவில் சாத்தியமாகும் என்று முழுவதுமாக நம்பிக்கைவைத்திருந்தார்.

அமெரிக்காவில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது. இனவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, அனைவருக்குமான சம உரிமை நிலைநாட்டப்படும். வாழ்வில் சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறையினருக்கு எனது வெற்றி உதாரணமாக இருக்கும். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவில் யாராலும், எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் பெண்களின் முன்னேற்றத்துக்கு ஏராளமான செயல்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன.

ஒவ்வொரு குடிமகனுக்குமான பிரதிநியாகச் செயல்பட்டு, ஒபாமாவின் வழியில் அமெரிக்காவை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்வேன்” என்று கமலா ஹாரிஸ் பேசினார்.

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வானதையடுத்து, அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், பதாகைகள் வைத்தும் மகிழ்ச்சியைக் கொண்டாடிவருகின்றனர்.

`கமலா ஹாரிஸ் வெற்றிபெற சம்ஹார பூஜை, அன்னதானம்!' - திருவாரூர் கிராம மக்கள் வேண்டுதல்
அடுத்த கட்டுரைக்கு