`தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசாங்கம் ஏலத்தில்விட்டிருக்கிறது. இந்த ஆண்டும் கச்சத்தீவு அந்தோணியர் திருவிழாவில் கலந்துகொள்ள தமிழக மீனவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களை, நம் மீனவர்களே தாக்கலாம் என்றிருக்கிறார் இலங்கை கடற்தொழில் அமைச்சர். தற்போது 11 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இதுவரையில் தமிழக மீனவர்கள் Vs இலங்கை கடற்படையினர் என்றிருந்த மோதல் இப்போது, தமிழக Vs ஈழத்தமிழ் மீனவர்கள் என திசைதிரும்பியிருக்கிறது அல்லது திருப்பிவிடப்பட்டிருக்கிறது!'

இலங்கை மீனவர்கள் மர்ம மரணம்:
கடந்த மாதம் 27-ம் தேதி கடலுக்குச் சென்ற இலங்கை யாழ்ப்பாண மீனவர்கள் தணிகைமாறன், பிரேம்குமார் ஆகியோர் கரைக்குத் திரும்பவில்லை. மூன்று நாள்கள் கழித்து வடமராட்சிப் பகுதியில் கரை ஒதுங்கிய அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இரு மீனவர்களின் மர்ம மரணத்துக்கு இந்திய மீனவர்கள்தான் காரணம் என்று கூறி யாழ்பாணத்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டன. சாலைகள் வழிமறிக்கப்பட்டன. சமாதானம் பேசவந்த இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரட்டியடிக்கப்பட்டார். பிப்ரவரி 4, இலங்கை சுதந்திரதினத்தைப் புறக்கணித்து தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினார்கள் இலங்கை தமிழ் மீனவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகப் படகுகள் ஏலம்:
இந்த நிலையில், எல்லை தாண்டியதாகக் கூறி, கடந்த 2014-ம் ஆண்டு முதல் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகளை பிப்ரவரி 7-ம் தேதி ஏலம்விடுவதாக அறிவித்தது இலங்கை அரசாங்கம். இதைக் கண்டித்தும், அவற்றைத் தடுக்கக் கோரியும் தமிழக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், இலங்கையின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால், மத்திய அரசுத் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்காத நிலையில், கடந்த பிப்ரவரி 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஏலத்தைத் தொடங்கியது இலங்கை அரசாங்கம். பலகோடி மதிப்பிலான நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களின் படகுகளை, வெறும் சொற்ப லட்சங்களில் ஏலம்விட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இலங்கைக்கு சுமார் ரூ.3,750 கோடிக்கு கடனுதவி வழங்கியிருக்கிறது இந்திய அரசு. இதனால் தமிழக மீனவர்கள் மேலும் கொதிப்படைந்திருக்கின்றனர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை அரசிடம் படகை இழந்து பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.5 லட்சமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இருப்பினும் `25 லட்சம் முதல் 50 லட்சங்கள் வரை மதிப்புடைய தங்களின் படகுகளுக்குக் குறைந்தபட்ச நிவராணம் ஈடாகாது, படகு வாங்குவதற்காக நாங்கள் வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டிகூட இந்தத் தொகையால் கட்ட முடியாது’ என்று விரக்தியில் கண்ணீர் வடிக்கிறார்கள் தமிழக மீனவர்கள்.

மேலும், ``ஒரு விசைப்படகில் 10 மீனவர்கள் வரை கடலுக்குச் சென்று மீன்பிடிப்பார்கள். ஒரு படகு பறிக்கப்பட்டு ஏலத்தில்விடப்பட்டால் 10 மீனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 50-60 பேர் வரை வாழ்வாதாரம் இழப்பார்கள். தற்போது 105 படகுகள் ஏலத்தில்விடப்பட்டிருப்பதால் சுமார் 7,500 பேர் வரை தங்களின் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்திருக்கிறார்கள். இந்திய கடல் எல்லையைச், சம்பளம் வாங்காத ராணுவ வீரர்களைப்போல மீனவர்கள் நாங்கள் காத்து நிற்கின்றோம். ஆனால், எங்களை இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டது! நாங்கள் இந்தியப் பிரஜை இல்லையா?" எனக் கேள்வி எழுப்புகிறார்கள் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்.

தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்கும் இந்தச் சம்பவங்கள் தமிழக மற்றும் ஈழத்து மீனவர்களை ஒருவருக்கொருவர் பகைவர்களாக எதிரணியில் நிறுத்தியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஈழத்தமிழ் மீனவர்களின் குற்றச்சாட்டுகள் என்னென்ன?
இத்தகைய அசாதாரணமான சூழ்நிலையில், ஈழத்தமிழ் மீனவர்களைத் தொடர்புகொண்டோம். ``கடந்த மாதம் 23-ம் தேதிதான் இலங்கை அரசாங்கம் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில்விடப்போகிறது என்ற தகவல் வெளியானது. அறிவிப்பு வெளியான சில தினங்களில் கடலுக்குச் சென்ற எங்களின் இரு மீனவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதால், இதற்குக் காரணம் தமிழக மீனவர்களாகத்தான் இருப்பார்கள் என இங்குள்ள சில மீனவர் அமைப்பினர் கருதுகிறார்கள். எங்களுக்கும் உண்மை என்னவென்று தெரியவில்லை; ஒரு யூகத்தின் அடிப்படையில்தான் இங்கு போராட்டம் நடக்கிறது" என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மேலும், ``தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிப்புதான், எங்கள் மீனவர்களின் ஆத்திரத்துக்கு மூல காரணம்" எனத் தொடர்ந்தவர், ``ஒருகாலத்தில் நாங்கள் இரு நாட்டு மீனவர்களுமே பரஸ்பரம் எல்லை தாண்டி, ஒற்றுமையுடன்தான் மீன் பிடித்துக்கொண்டிருந்தோம். என்றைக்கு தமிழக மீனவர்கள் பாரம்பர்ய முறையைக் கைவிட்டு, இழுவை வலை மீன்பிடி முறைக்கு மாறினார்களோ அன்றைக்குத்தான் எங்களுக்குள்ளான பிளவும் ஏற்படத் தொடங்கியது" எனக் கூறினார்.

இலங்கை மாதகல் பகுதியைச் சேர்ந்த மீனவர்களிடம் பேசியபோது, ``இழுவை வலை மீன்பிடியால், மீன்கள் குஞ்சுபொரிக்கும் பவளப்பாறைகள், புற்கள், செடி கொடிகள் என அனைத்தும் வேரோடு சாய்க்கப்படுகின்றன. இதனால் இந்தியப் பகுதி மட்டுமல்லாமல் எல்லை தாண்டிய மீன்பிடியால் எங்கள் பகுதி கடல்வளமும், மீன்வளமும் சேர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றன. இதை எல்லா தமிழக மீனவர்களும் செய்வதில்லை, மீன்பிடித்தொழிலுக்கே சமபந்தமில்லாத சில முதலாளிகள்தான் லாபநோக்கில், மீனவத் தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கொண்டு இப்படி அழிவுதரும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்" எனக் குற்றம்சாட்டினர்.
மேலும், ``இந்தப் போக்கு நீடித்தால் கடலையே நம்பியிருக்கும் எங்களின் 50,000 வடமாகாணக் குடும்பங்களும், அவர்களின் எதிர்காலச் சந்ததிகளின் நிலையும் என்னவாகும்?" என்றும் கேள்வி எழுப்பினர்.

அதேபோல, இலங்கை தொண்டைமானாறு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்க செயலாளர் சசிகுமார், ``அதி தொழில்நுட்பங்களைக்கொண்ட தமிழக விசைப்படகுகளின் இழுவை மீன்பிடி முறைக்கு, எங்களின் பாரம்பர்ய மீன்பிடிப்பு முறையால் ஈடுகொடுக்க முடியவில்லை; எங்கள் மீனவர்கள் சிறிய படகுகளில், சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலைத்தான் செய்துவருகிறோம்! ஏற்கெனவே தென்னிலங்காவிலிருந்து மீன்பிடிக்க வரும் சிங்கள மீனவர்களாலும் நாங்கள் பாதிக்கப்பட்டுவருகிறோம். இதைப் புரிந்துகொண்டு, தமிழக மீனவர்கள் எங்கள் கடல் எல்லைக்குள் வராமல் இருக்க வேண்டும்!" எனக் கேட்டுக்கொண்டார்.

தமிழக மீனவர்களின் பதில் என்ன?
`வீண்பழி சுமத்துகிறார்கள்!'
``ஈழத் தமிழர்கள் எங்களின் தொப்புள்கொடி உறவுகள்! அவர்கள் வேறு நாங்கள் வேறு அல்ல; போர்க்காலத்தில் அகதிகளாகத் தமிழகம் நோக்கி வந்தவர்களை எங்களின் உயிரையும் பணயம்வைத்து நடுக்கடலில் மீட்டுகொண்டு வந்திருக்கிறோம். எங்கள் படகுகளை ஏலம்விடுவது இலங்கை அரசாங்கம்; சம்பந்தமே இல்லாத ஈழத்தமிழ் மீனவர்கள்மீது நாங்கள் ஏன் கோபப்படப்போகிறோம்... எங்கள் மீனவர்களால்தான், இலங்கையைச் சேர்ந்த அந்த இரண்டு மீனவர்களும் உயிரிழந்தார்கள் எனக் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நிச்சயமாக வாய்ப்பில்லை;
இவர்கள் சொல்லக்கூடிய அதே நாள்களுக்கு முன்தினம் ஜனவரி 24-ம் தேதி, இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள், நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்களைத் தாக்கி, கடலில் தூக்கிப்போட்டுவிட்டு, படகில் இருந்த இரண்டரை லட்சம் மதிப்பிலான பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். ஒருவேளை இவர்கள் செய்திருக்கலாம். நிச்சயமாக இதன் பின்னணியில் ஒரு சதி இருக்கிறது. வேண்டுமென்றே எங்கள்மீது பழி சுமத்தி, இரு நாட்டு தமிழ் மீனவர்களையும் மோதவிட்டிருக்கிறார்கள்! இதை அரசாங்கம் தீர விசாரித்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்" எனச் சந்தேகம் எழுப்புகிறார் ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா.

`சர்வதேச சதி இருக்கிறது!'
அதேபோல, ``தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரு நாட்டு தமிழ் மீனவர்கள் பிரச்னைக்குப் பின்னால் சர்வதேச கார்ப்பரேட்களின் சதி அரசியல் இருக்கிறது" என பகீர் கிளப்புகிறார் பாம்பன் பாரம்பர்ய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி. ``இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே இருக்கும் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் மிக அதிக அளவில் எண்ணெய் எரிவாயு உள்ளிட்ட கனிம வளங்கள் இருக்கின்றன. இவற்றை எடுப்பதற்காக இந்தியா-இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகளை, கார்ப்பரேட்கள் தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு காய்நகர்த்திவருகிறார்கள்.

அவர்களின் முதல் திட்டமே, கடலிலில் இருக்கும் கனிம வளங்களை எடுப்பதற்குத் தடையாக இருக்கும் மீனவர்களை கடலிலிலிருந்து, கடல் தொழிலிலிருந்து முற்றாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதே! அதனால்தான் இன்றுவரையிலும் இந்த அரசாங்கங்கள் மீனவர் பிரச்னையைத் தீர்த்துவைக்காமல் மெத்தனப் போக்குடன் இருந்துவருகின்றனர். மீனவர்களுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டுவருவது, பொருளாதார இழப்பை ஏற்படுத்துவது, கடற்படையால் உயிர் பயத்தை ஏற்படுத்தி அச்சுறுத்துவது என எல்லாவற்றுக்கும் இதுதான் காரணம்" என்றார்.

மேலும், ``தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம்விடுவதற்கும், இலங்கை மீனவர்கள் இருவர் உயிரிழப்புக்கு இந்திய மீனவர்கள்தான் காரணம் என்று கூறி அங்குள்ள அரசைச் சார்ந்து இயங்கும் சில மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள் போராடுவதற்குப் பின்னணியிலும், இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருக்கிறார். இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டுவரும் இவர் பின்னணியில் சீனா இருக்கிறது!" எனப் போட்டுடைத்தார்.
`அவர்களும் இழுவை வலை வைத்திருக்கிறார்கள்!'
இழுவை வலை சர்ச்சை தொடர்பாக நம்மிடையே பேசிய ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எமிரேட், ``நாங்களும் ஆரம்பத்தில் பாரம்பர்ய முறையில்தான் மீன்பிடித்துக்கொண்டிருந்தோம். கால ஓட்டத்தில் இந்திய அரசாங்கம்தான் விசைப்படகுகளையும், இழுவை வலையைக்கொண்டு மீன்பிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த மீன்பிடி முறையால் மீன்முட்டையிடும் பவளப்பாறைகள், மீன்வளங்கள் அழிவதாகக் கூறி இலங்கை உள்ளிட்ட நாடுகள் தடை விதித்திருக்கின்றனதான். ஆனால், நாங்கள் மீன்பிடிக்கும் பெரும்பாலான பகுதிகள் சேறும் களியுமாகத்தான் இருக்கின்றன. அதேசமயம் நாங்கள் மொத்தமாகவே ஓர் ஆண்டுக்கு 70-80 நாள்கள்தான் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறோம். மேலும், மீன்கள் இனப்பெருக்கத்துக்காக இந்திய அரசு விதிக்கும் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலத்தில் நாங்கள் கடலுக்குச் செல்வதில்லை; ஆனால் இலங்கையில் இந்தத் தடைக்காலம் இல்லை! அதேபோல, இழுவை வலைக்கு அங்கு தடை இருந்தாலும் யாழ்ப்பாணம், குருநகர், மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இழுவை வலைகொண்டு மீன்பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றார்.

`எங்களிடம் இழுவை வலை மட்டும்தான் இருக்கிறது!'
அதேபோல தமிழக கடடலோர விசைப்படகு மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ், ``இந்தியாவில் இரட்டைமடி, சுருக்குமடி வலைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதால் அவற்றை எங்களால் பயன்படுத்த முடியாது. ஆக எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இழுவை வலை மீன்பிடி மட்டுமே. எங்களுக்குக் கடல் வளத்தை அழிக்கும் நோக்கம் கிடையாது. மாற்றுவழியாக மத்திய அரசு கொண்டுவந்த ஆழ்கடல் மீன்பிடித் திட்டமும் தோல்வியில் முடிவடைந்தது. அரசிடமிருந்து மானிய விலையில் படகுகளைப் பெற்ற மீனவர்கள், தற்போது தங்கள் படகுகளை எடுத்துக்கொண்டு அதற்கான நஷ்டஈடு கொடுங்கள், மாற்றுத்தொழிலுக்கு ஏற்பாடு செய்யுங்கள், நாங்கள் இந்த தொழிலையே விட்டுவிடுகிறோம் என அரசுக்குக் கோரிக்கைவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். எங்களுக்கு மீன்பிடித் தொழிலைத் தவிர வேறு எதுவும் தெரியாது! இதைவிட்டால் எங்களுக்கு வேறு நாதி கிடையாது!" எனக் களச் சூழ்நிலையை விளக்கினார்.
கச்சத்தீவை தாரைவார்த்ததுதான் காரணமா?
`சாவோம் எனத் தெரிந்துமே கடலுக்குச் செல்கிறோம்!'
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வது குறித்து சேசுராஜாவிடம் கேட்டபோது, ``சர்வதேச கடல் சட்டத்தின்படி, ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்குமான கடல் எல்லைப்பகுதி 200 நாட்டிகல் மைல் தொலைவுக்கு இருக்க வேண்டும். ஆனால் இங்கோ 12 நாட்டிக்கல் மைல்தான் எங்களுக்கு இருக்கிறது. 1974-ம் ஆண்டு இந்தியா கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததால், எங்களின் பாரம்பர்ய எல்லைப்பகுதி பறிபோய்விட்டது. இந்தக் குறுகிய எல்லைப்பகுதியில் எங்களால் எப்படி மீன்பிடிக்க முடியும்? மீனவர்கள் யாரும் இங்கு முதலாளிகள் இல்லை; அன்றாடங்காய்ச்சிகள்தான்; ஒரு படகை நம்பி 50 குடும்பங்கள் இருக்கின்றன. பணத்துக்காக யாராவது உயிரைவிடுவார்களா? எல்லை தாண்டினால் சிங்களக் கடற்படை சுடுவான் என்பது எங்களுக்குத் தெரியும், சாவோம் எனத் தெரிந்தும் மீன்பிடிக்கச் செல்கிறோம் என்றால் அது எங்கள் குழந்தைகள், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான்! நாங்கள் பாரம்பர்யமாக மீன்பிடித்துவந்த பகுதி கச்சத்தீவு! அங்குதான் எங்களுக்கான மீன்வளம் இருக்கிறது. நாங்கள் எல்லை தாண்டக் கூடாது என்றால் முதலில் கச்சத்தீவை மீட்டுக்கொடுங்கள்!" என ஆவேசமாக பதிலளித்தார்.

`தமிழர்களுக்கு இடையில் சிங்களவன்'
இலங்கை மீனவர் சங்கத் தலைவரான என்.வி.சுப்பிரமணியம், ``கச்சத்தீவை இலங்கையிடம் கொடுத்தது மிகப்பெரிய தவறு. இந்திய தமிழ் மீனவனும், இலங்கை தமிழ் மீனவனும் எக்காரணத்தைக் கொண்டும் உறவாக ஒன்றுசேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, இரு நாட்டு அரசுகளும் சேர்ந்து இடையே கச்சத்தீவில் சிங்களவனை நிறுத்தியிருக்கிறது! அதன் விளைவாக, இப்போது இரு நாட்டு தமிழ் மீனவர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்! " என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

`கச்சத்தீவைக் குறிவைக்கும் சீனா'
இலங்கை முன்னாள் எம்.பி-யும் தமிழ்த்தேசியக் கட்சி பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம், ``கச்சத்தீவில் இரு நாட்டு மீனவர்களும் ஓய்வெடுக்கலாம், வலை உலர்த்தலாம் என ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், தீவின் அருகில் வந்தாலே இலங்கை கடற்படை சுட்டுக்கொல்கிறது. இதுவரை 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருக்கிறார்கள். முக்கியமாக, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க எண்ணி, சீனாவும் தமிழர் பகுதியில் சதிவலை பின்னுகிறது. கச்சத்தீவு வரை சீன தூதர் வந்துபோகிறார். இந்தியா தனது பாதுகாப்பையும், மீனவர்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டுமென்றால் கச்சத்தீவை உடனடியாக மீளப்பெற வேண்டும்!" என அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கம் கேட்டு தமிழக மீனவர்நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்டோம். பலமுறை அழைத்தும் அழைப்பை ஏற்கவில்லை.

இதுதான் இருநாட்டு மீனவர்களின் கோரிக்கை; இனியாவது அரசாங்கங்கள் செய்யுமா?
``இலங்கைக்குக் கொடுத்த கச்சத்தீவை இந்தியா உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! இரு நாட்டு அரசாங்கங்களும் தங்கள் மீனவர்களை அழைத்துப் பேச முன்வர வேண்டும். இழுவை வலை பயன்பாட்டினால் ஏற்படும் பிரச்னைகளை ஆராய்ந்து, அதற்கான உரிய மாற்றை அறிவிக்க வேண்டும். முந்தைய ஆண்டுகளில் நடத்திய கண்துடைப்பு பேச்சுவார்த்தைபோல் அல்லாமல், இரு நாட்டு மீனவர்களும் சேர்ந்து வெளிப்படையாகப் பிரச்னைகளைப் பேசி, ஓர் இறுதி முடிவுக்கு வரும் வகையில் ஓர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக் கூட்டத்தை நடத்த வேண்டும்!" போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் இரு நாட்டு தமிழ் மீனவர்களும் ஒரே குரலாக!