Published:Updated:

`பத்திரிகையாளர் கஷோகி கொலையில் எனது பங்கு என்ன?' - முதல்முறையாக மௌனம் கலைத்த சவுதி இளவரசர் சல்மான்

`பத்திரிகையாளர் கஷோகி கொலை, தான் பொறுப்பில் இருக்கும்போது நடந்தது; அதற்கு தாமே முழு பொறுப்பு' சவுதி இளவரசர் சல்மான் கூறியதாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.

Khashoggi - bin Salman
Khashoggi - bin Salman

சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்கு, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 2-ம் தேதி சென்றார். பிறகு, அவர் திரும்பி வரவேயில்லை. இதையடுத்து, ஜமால் கொலை செய்யப்பட்டுவிட்டதாக துருக்கி அறிவித்தது. இதை அமெரிக்காவும் உறுதிசெய்தது. அதிலிருந்து, துருக்கிக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவியது.

Khashoggi
Khashoggi

தங்கள் நாட்டில் நடைபெற்ற கொலையைக் கண்டுபிடித்து, சவுதியின் சதியை வெளியில் கொண்டுவருவோம் என துருக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜமால் கொலையில் உள்ள பல மர்மமான விஷயங்களை துருக்கி அரசும், அந்நாட்டு ஊடகங்களும் கண்டுபிடித்து, தொடர்ந்து வெளியிடத் தொடங்கினர்.

ஜமால் கொலை செய்யப்பட்டு, அவரின் விரல் சவுதி மன்னருக்குப் பரிசாக அளிக்கப்பட்டது என்றும், ஜமாலின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்டது. பின்னர், சவுதி தூதர் வீட்டுக்கு அருகில் உள்ள காட்டில் வீசப்பட்டன போன்ற பல்வேறு தகவல்களை வெளியிட்டது துருக்கி.

Khashoggi
Khashoggi

மேலும், துருக்கில் உள்ள சவுதி தூதரகத்தில்தான் கஷோகி கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டி, அவரது கொலைக்கு சவுதி இளவரசர் முகமது பின்சல்மான் தான் காரணம் என தன் தரப்பு வாதங்களை துருக்கி பதிவு செய்தது. ஆனால், துருக்கியின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் சவுதி தொடர்ந்து நிராகரித்துவந்தது.

சமீபத்தில், ஜமால் கஷோகி சவுதி தூதரகத்தில்தான் கொல்லப்பட்டார் என்பதை ஒருவழியாக சவுதி அரசு ஒப்புக்கொண்டது. இந்நிலையில், ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டு, அடுத்த மாதத்துடன் ஒரு வருடம் நிறைவடையவுள்ளது. இதையொட்டி, அமெரிக்காவின் ஃபிரன்ட்லைன் ஊடகத்தைச் சேர்ந்த மான்ட்டின் ஸ்மித் என்பவர், `The Crown Prince of Saudi Arabia' என்ற பெயரில் ஆவணப் படத்தை எடுத்துள்ளார். இதில், சவுதி இளவரசர் சல்மானின் வளர்ச்சி, கஷோகி கொலை என பல்வேறு விவகாரங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்திருக்கிறது.

Khashoggi
Khashoggi

இந்தப் படம், வரும் அக்டோபர் 1-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. தற்போது, ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. வீடியோ தொடங்கும்போதே, `சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், ஜமால் கஷோகி மரணத்தில் தன் பங்கு என்ன என்பதை முதல் முறையாகத் தெரிவித்துள்ளார்’ என எழுத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Vikatan

2018 டிசம்பர் மாதம், ரியாத்தில் நடந்த கார் ரேஸில் கலந்துகொள்ள வந்த பின், சல்மானை மார்ட்டின் சந்தித்துப் பேசினார் என அடுத்த வரிகள் நகர்கின்றன. தொடர்ந்து, கார் ரேஸ் நடக்கும் இடங்கள் காட்டப்படுகின்றன. அதற்குப் பின்னால் மார்ட்டினின் குரல் மட்டும் ஒலிக்கிறது. ``நான் இளவரசர் பின் சல்மானிடம் பேசினேன். கஷோகி மரணத்தில், தன் பங்கு பற்றி அவர் முதல்முறையாகப் பேசினார்.

bin Salman
bin Salman

அவர் என்னிடம், ``அந்தச் சம்பவங்கள் அனைத்தும் நான் பொறுப்பில் இருக்கும்போதுதான் நடந்தன. அதற்கான அனைத்து பொறுப்புகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்'' என்று கூறினார். ஆனால், கொலை தனக்குத் தெரியாமல் நடந்தது என்று சல்மான் கூறியதாக மார்டின் சொல்கிறார். உடனே, `நீங்கள் பொறுப்பில் இருக்கும்போது உங்களுக்குத் தெரியாமல் எப்படி கொலை நடந்திருக்க முடியும்?' என மார்ட்டின் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு சல்மான்,``எங்கள் நாட்டில் 20 மில்லியன் மக்கள் உள்ளனர். அவர்களில் 3 மில்லியன் பேர் அரசு ஊழியர்கள்” என்று பதிலளித்ததாக ஃப்ரண்ட்லைன் வீடியோ சொல்கிறது.

கொலையாளிகள், அரசின் தனிப்பட்ட ஜெட்டில் பயணித்துள்ளனர் என்ற தனது கேள்விக்கு, ``அந்த ஜெட்டுகளைக் கண்காணிப்பதற்காக அதிகாரிகள், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெட்டுகளுக்கு அவர்களே பொறுப்பு. அதை எடுத்துச் செல்ல அவர்களுக்கு அதிகாரம் உள்ளது” என சல்மான் முடிக்கிறார். இவ்வாறு மிகவும் அமைதியாக வீடியோவும் முடிகிறது. சவுதி இளவரசர் சல்மானின் ஆதரவாளராக இருந்த கஷோகி, பின்னர் அவரின் செயல்பாடுகளை விமர்சிப்பவராக மாறினார். அக்டோபர் ஒன்றாம் தேதி ஒளிபரப்பப்பட இருக்கும் ஆவணப் படத்தில் ப்ரண்ட்லைன் ஊடகத்துக்கு கஷோகி அளித்த வீடியோ பேட்டியும் வெளியிடப்படுகிறது.

இது, கஷோகி பற்றிய ஆவணப் படத்தின் முன்னோட்டம் என்பதால், அனைத்து கேள்வி-பதில்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது. மொத்த படமும் வெளியான பிறகுதான் கஷோகி பற்றி சல்மான் உண்மையில் என்ன பேசினார் என்பது தெரியவரும். இருந்தும் தற்போது, `எனது கண்காணிப்பின் கீழ்தான் நடந்தது’ என சல்மான் கூறியதாக வெளியிடப்பட்டுள்ள வரிகள் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.