Published:Updated:

`தொழிற்சாலை திறப்பு; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!’ - பொதுவெளியில் தோன்றினார் கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன் ( AP )

உடல்நிலை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் முதல் முறையாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கடந்த 3 வாரங்களாக கொரோனா வைரஸை விட மிகவும் வேகமாகப் பரவிய செய்தி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு உடல்நிலை சரியில்லை என்பதுதான். மதுப் பழக்கம், புகைப்பிடிப்பது, உணவுப் பழக்கம் இதனால் ஏற்பட்ட அதிக உடல் பருமனால் கிம்மின் இதயத்தில் பிரச்னை ஏற்பட்டதாகவும் அதற்காக நடந்த அறுவை சிகிச்சை பலனளிக்காததால் கிம் ஜாங் உன் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்றும் அவரின் உடல்நலக் குறைபாட்டுக்கு அழுத்தமான காரணம் கூறப்பட்டது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

இதற்கு ஏற்றாற்போல் வட கொரிய அதிபரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, அரசாங்க அறிக்கை வெளியிடுவது மற்ற வேலைகளைச் செய்வது என எதுவும் இல்லாமல் இருந்தார். குறிப்பாக ஏப்ரல் மாதம் நடந்த கிம்மின் தாத்தாவும் வட கொரியாவை உருவாக்கியவருமான கிம் இல் சங்கின் பிறந்தநாள் விழாவில் முதன் முறையாக கிம் ஜாங் உன் கலந்துகொள்ளவில்லை. இதுதான் வட கொரிய அதிபரின் உடல்நிலை பற்றிய செய்திகள் வெளிவர ஆரம்பப் புள்ளியாக இருந்தது.

இருதய நோய்... தனி வில்லாவில் ட்ரீட்மென்ட்... ஆபத்தான நிலையில் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை?!

இதற்கிடையில் கிம் ஜாங் உன்னின் தங்கை தான் அடுத்த அதிபர், கிம்மின் உடல்நிலையைச் சோதிக்க சீன மருத்துவக் குழு வட கொரியா விரைந்துள்ளது, கிம்மின் சொந்த ரயில் ரிசார்ட் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிம் இறந்தால் அவரது சித்தப்பாவுக்குத்தான் ஆட்சி செய்ய நிறைய அதிகாரம் உள்ளது போன்ற உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருந்தன. ஆனால் அமெரிக்காவும் வடகொரியாவும்தான் கிம் ஜாங் உன் உயிருடன் நலமாக இருப்பதாகக் கூறியது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

வட கொரியாவைப் பொறுத்தவரை அதிபரைப் பற்றி ஏதேனும் வதந்திகள் வந்தால் அதற்கு அந்நாட்டு அரசு ஊடகம் மறுப்போ அல்லது விளக்கமோ அளிக்கும். ஆனால் கிம் ஜாங் உன் உடல்நிலை தொடர்பாக வட கொரிய ஊடகங்கள் கடந்த 20 நாள்களாக வாய்திறக்கவில்லை. இது கிம் உடல்நிலை மீதான சந்தேகத்தை இன்னும் வலுவாக்கியது. இந்நிலையில் இந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் வட கொரிய அரசு ஊடகமே முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிட்டது.

`சந்தேகத்திற்கிடமாக எதுவும் இல்லை’ - கிம் ஜாங் உன் பற்றிய வதந்திகளுக்குத் தென்கொரியா முற்றுப்புள்ளி

ஆம், வட கொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 20 நாள்களுக்குப் பின் முதல் முறையாக அதிபர் கிம் ஜாங் உன் பொது வெளியில் தோன்றியுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. பியோங்யாங் என்ற நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உர ஆலையை கிம் நேற்று திறந்துவைத்ததாகவும் இந்த நிகழ்ச்சியில் வடகொரிய அரசின் முக்கிய அதிகாரிகள் மற்றும் கிம்மின் தங்கை கிம் யோ ஜாங் போன்ற பலரும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிம் ஜாங் உன்னை காண பல ஆயிரக்கணக்கான மக்கள் தொழிற்சாலைப் பகுதியில் திரண்டதாகவும் அவர்கள் அதிபரைப் பார்த்த பரவசத்தில் மகிழ்ச்சி கோஷம் எழுப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

தொடர்ந்து, இந்தத் தொழிற்சாலை உற்பத்தி அமைப்பில் தனக்கு முழு திருப்தி இருப்பதாகவும் வட கொரிய ரசாயன தொழிலுக்கும் உணவு உற்பத்திக்கும் முக்கியமான பங்களிப்பை இந்த நிறுவனம் தரும் என கிம் நம்பிக்கை தெரிவித்ததாகவும் கே.சி.என்.ஏ கூறியுள்ளது. இதற்கு ஆதாரமாக கிம் ரிப்பன் வெட்டி தொழிற்சாலையைத் திறந்துவைக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்ற கருத்தும் பரவலாகப் பேசப்படுகிறது. இருந்தாலும் 3 வாரங்களாக எழுந்த பல்வேறு புரளிகளுக்கு இது முடிவளிப்பதாகவும் கூறப்படுகிறது

`கிம் ஜாங் உன்’ என்னவானார்? வடகொரியாவின் அடுத்த அதிபர் ஆவாரா சகோதரி கிம் யோ?
அடுத்த கட்டுரைக்கு