Published:Updated:

கிம்மின் திக் திக்... குதிரை சவாரி! - பதற்றத்தில் வடகொரியா மக்கள்

இந்த மலைக்கு குதிரை சவாரி செய்வது, தங்களின் வலிமையைக் காண்பிப்பதற்காகவே செய்யப்படும் முயற்சி என்றும், வடகொரியத் தலைவர்கள் இந்த மலைக்கு தைரியமாக சவாரி செய்து, தங்களது வீரம் குறித்துத் தம் மக்களுக்கு பறைசாற்றுவார்கள் என்றும் கூறப்படுவ துண்டு.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதிரடி மற்றும் சர்ச்சைக்குப் பெயர் போனவர். கடந்த இரண்டு வருடங்களாக இவர் நடத்திய அணு ஆயுதச் சோதனையைக் கண்டு மொத்த உலக நாடுகளும் அதிர்ந்துபோயின. அதை நிறுத்த வேண்டும் எனப் பல வல்லரசு நாடுகள் கூறியும், அதைச் சற்றும் காதில் வாங்காமல் தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபாடுகாட்டிவருகிறார்.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

தொடர் அணு ஆயுதச் சோதனைகளால், வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, தான் சோதனையைக் கைவிட்டதாகவும் இனி அணு ஆயுதச் சோதனை நடத்த மாட்டேன் எனவும் அறிக்கை வெளியிட்டார். பின்னர்தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் சந்திக்கும் வரலாற்றுச் சம்பவம் நடைபெற்றது. இப்படி, தினம் தினம் தனது நடவடிக்கைகளில் கவனம் ஈர்த்துவரும் கிம் ஜாங் குறித்து நேற்று வெளியான புகைப்படங்கள்தாம் `ஹாட் டாப்பிக்'காக உள்ளது.

Vikatan

வடகொரியா அரசு ஊடகமான கேசிஎன்ஏ, மிக உயரமான பனி போர்த்திய `பேக்டு மலை'யில், வெள்ளைக் குதிரையில் கிம் சவாரி செய்வதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்களுக்குப் பின்னணியில் உள்ள சுவாரஸ்யத் தகவல்கள்தான், `ஹாட் டாப்பிக்'காக மாறக் காரணம். இந்த சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு முன், இந்த மலைத்தொடர் குறித்து அறிவது அவசியம்.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

`பேக்டு மலை', கொரிய தீபகற்பப் பகுதியின் புனிதமாக இடங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. கி.மு 2333ல் கொரிய ராஜ்ஜியத்தை நிறுவிய `கொரியாவின் தந்தை' டங்குனின் பிறப்பிடமே இந்த மலைத்தொடர். வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில், 2,750 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த மலை சீனாவுக்கான எல்லையாக இருக்கிறது. எரிமலையான பேக்டு மலைத் தொடருக்கும் கிம்மின் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு ஒன்று உள்ளது. கிம்மின் தந்தை இங்குதான் பிறந்தார் என்று கூறப்படுகிறது.

Vikatan

இந்த மலைக்கு குதிரை சவாரி செய்வது, தங்களின் வலிமையைக் காண்பிப்பதற்காகவே செய்யப்படும் முயற்சி என்றும், வடகொரியத் தலைவர்கள் இந்த மலைக்கு தைரியமாக சவாரி செய்து, தங்களது வீரம்குறித்து தம் மக்களுக்கு பறைசாற்றுவார்கள் என்றும் கூறப்படுவதுண்டு. இதைப் பின்பற்றியே வடகொரியாவின் முக்கியத் தலைவர்களாகக் கருதப்படும் கிம்மின் தந்தை மற்றும் தாத்தா, இந்த மலைக்குச் சென்று தங்கள் வீரத்தைப் பறைசாற்றியதுடன், இந்த மலைக்குச் சென்றுவந்த பிறகே சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்கள்.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

அதன்படியே, கிம்மும் தற்போது இந்த மலைக்குச் சென்றுவந்துள்ளார். கிம் இந்த மலைக்குச் செல்வது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பும் சென்றுள்ளார். 2013 மற்றும் 2017ல் இதே மலைக்கு குதிரை சவாரி செய்தபோது தந்தை, தாத்தா போல சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார் கிம். 2013ல் இங்கு சென்றுவந்த பிறகு, வடகொரியாவின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக இருந்த தனது உறவினர் ஜாங் சங்-தை -க்கை தூக்கிலிட உத்தரவிட்டார். 2017ல் இந்த மலைக்குச் சென்றுவந்த அடுத்த சில மாதங்களிலேயே தங்களது `பரம வைரி' என வர்ணிக்கப்பட்டுவந்த அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பை முதன் முறையாகச் சந்தித்தார், கிம்.

Vikatan

இதை மையமாக வைத்தே அரசு ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்ட அறிக்கையில், "கொரிய வரலாற்றில், இதுபோன்று பேக்டு மலையில் குதிரையில் சென்றது மிகமுக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பேக்டு மலையில், கிம் குதிரை சவாரி செய்தபோது, ஒரு சக்திவாய்ந்த நாட்டை உருவாக்கத் தான் கடந்துவந்த போராட்டங்களை உணர்ச்சிகரமாக நினைத்துப் பார்த்தார்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஒட்டுமொத்த கொரிய மக்களும், ``அடுத்து ஏதோ பெரிய அறிவிப்பை கிம் வெளியிடப்போகிறார்" என்று கூறுகிறார்கள். அந்த அறிவிப்பு என்ன என்பதுதான் மிகப்பெரிய பேச்சாக உருமாறியுள்ளது. ஐ.நா-வின் பொருளாதாரத் தடையால் வடகொரியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அணு ஆயுதங்கள் பயன்பாடு குறித்த பேச்சுவார்த்தை அமெரிக்காவுடன் நடந்துவந்தாலும், அமெரிக்கா இன்னும் தனது ஆதிக்க மனநிலையிலிருந்து வெளிவர மறுப்பதாக வடகொரியா அடிக்கடி குற்றச்சாட்டு தெரிவித்துவருகிறது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

இதனால், அணு ஆயுதங்களைச் சோதனை செய்வதில்லை என்று அமெரிக்காவுக்கு செய்துகொடுத்த சத்தியத்திலிருந்து விலகுவது குறித்து கிம் யோசித்திருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. ஒருசாரார் இப்படிக் கூறுகிறார்கள் என்றால் மற்றொரு சாராரோ, பேக்டு மலைத் தொடரில் இப்போது பனிக்காலம். இந்தக் காலகட்டத்தில் ரம்மியமாகக் காட்சியளிக்கும். இந்தப் பனிக்காலத்தை அனுபவித்து மகிழவே கிம், இப்படி குதிரை சவாரி செய்துள்ளார் எனக் கூறுகிறார்கள். அவர்கள் இப்படி கூறினாலும் முந்தையை செயல்பாடுகளால் எப்போதும் மர்மமாக இருக்கும் கிம்மின் அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதே, கொரிய மக்களின் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.

Vikatan