Published:Updated:

மர்ம தேசத்தின் அதிபர்!

மர்ம தேசத்தின் அதிபர்!
பிரீமியம் ஸ்டோரி
News
மர்ம தேசத்தின் அதிபர்!

இந்த மர்மம்தான் இப்போது கிம் ஜாங் உன் குறித்து உண்மைத் தகவல்களை அறிந்துகொள்ளவும் தடையாக இருக்கிறது.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வென்ற நேச நாடுகளான சோவியத் யூனியனும் அமெரிக்காவும், கொரியாவை ஒன்றிணைந்த தேசமாக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடியவே, தத்தமது செல்வாக்குள்ள நாடுகளாகக் கொரியாவை இரண்டாகப் பிரித்துக்கொண்டன.

அமெரிக்க ஆதரவுடன் தென்கொரியாவில் முதலாளித்துவ ஆட்சி நிறுவப்பட்டது. சோவியத் யூனியன் ஆதரவுடன் வடகொரியாவில் கம்யூனிச ஆட்சி நிறுவப்பட்டு கிம் இல் சுங் அதிபரானார். அவரது மறைவுக்குப் பிறகு அவர் மகன் கிம் ஜாங் இல் 1994-லிருந்து 2011 வரை அதிபராக இருந்தார். அந்த கிம் ஜாங் இல்-லின் மகன்தான் இப்போதைய அதிபர் கிம் ஜாங் உன்.

இவர் பிறந்ததேதியில் ஆரம்பிக்கிறது இவரது மர்மம். 8 ஜனவரி 1983 என்று வடகொரியா சொல்கிறது. அமெரிக்கா இவரைப் பற்றித் திரட்டி வைத்திருக்கும் ஆவணங்களில் 8 ஜனவரி 1984 என்று காணப்படுகிறது. வடகொரிய அதிபர்களின் வாரிசுகள் குறிப்பிட்ட காலம்வரை ரகசியமாகவே வளர்க்கப்படுவது வழக்கம். அப்படி இவரும் ‘வடகொரிய தூதரக அதிகாரி ஒருவரின் மகன்’ என்று சொல்லப்பட்டு சுவிட்சர்லாந்தில் படிக்க வைக்கப்படுகிறார்.

2010-ல்தான் கிம் ஜாங் உன் பற்றி வெளியுலகத்துக்குத் தெரியவருகிறது. தந்தை கிம் ஜாங் இல் உடல்நலக்கோளாறு காரணமாக 2011-ல் இறந்துவிட, 2011 டிசம்பர் 17-லிருந்து இவர்தான் அதிபர். கிட்டத்தட்ட மன்னராட்சிபோல கிம் இல் சுங்கின் வாரிசுகளுக்குத்தான் அங்கே அதிபராகும் வாய்ப்பு. எந்தச் செய்தியும் அரசு அனுமதியின்றி வருவதில்லை. சீனாவை இரும்பு தேசம் என்கிறோம். வடகொரியா அதற்கெல்லாம் அப்பன் ரேஞ்சில் இருக்கும். வட கொரியாவைப் பற்றி வரும் அச்சமூட்டும் செய்திகள், யூகங்கள் என்று தென்கொரிய, சீன, அமெரிக்க ஊடகங்களில் பரவ ஆரம்பித்தால் அதற்கு ‘பூசின மாதிரியும் பூசாத மாதிரியும்’ விளக்கம் கொடுத்துவிட்டு மீண்டும் திரைபோட்டுக்கொள்ளும் வடகொரிய அரசு.

மர்ம தேசத்தின் அதிபர்!
மர்ம தேசத்தின் அதிபர்!

‘பெரியண்ணன்’அமெரிக்காவுக்கு எப்போதுமே தனக்கு அடிபடியா நாடுகளின்மீது ஒரு கண் இருந்துகொண்டே இருக்கும். அந்நாட்டைக்குறித்தும், அந்நாட்டுத் தலைவர்கள் குறித்தும் பல்வேறு விதமான செய்திகளைப் பரப்புவது அமெரிக்காவின் அரசியல் தெரிந்த அனைவரும் அறிந்த செய்தி. வடகொரியாவுக்குச் சென்று வந்த சிலர் “அந்த நாட்டின் பாதுகாப்புக்காகத்தான் அந்நாட்டு அதிபர் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்தும், அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்தியும் வருகிறார். அமெரிக்கா போல பிற நாடுகளின்மீது போர் புரிய அல்ல” என்று வடகொரியாவுக்கு ஆதரவுக்குரல் கொடுத்ததுண்டு.

இந்த மர்மம்தான் இப்போது கிம் ஜாங் உன் குறித்து உண்மைத் தகவல்களை அறிந்துகொள்ளவும் தடையாக இருக்கிறது.

ஏப்ரல் 11-ம் தேதி வெளியில் காட்சியளித்த அதிபர் கிம் ஜாங் உன், அதற்குப் பிறகு எங்கும் தென்படவில்லை. ஏப்ரல் 15 அதிபரின் தாத்தாவான கிம் இல் சுங்கின் பிறந்ததினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். அதில் அதிபர் கலந்துகொள்வது மரபு. ஆனால் கிம் ஜாங் உன் அதில் கலந்துகொள்ளவில்லை. தொடர்ச்சியாக சிகரெட் பிடிப்பதன் மூலம் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு, உடல் பருமன் (எடை 140 கிலோ!) ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த அதிபருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மர்ம தேசத்தின் அதிபர்!

கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, “நானோ கிம் ஜாங் உன்னோ அதிபர்களாக இல்லாமலிருந்திருந்தால் இந்நேரம் இருநாடுகளும் போர்புரிந்திருப்போம். வடகொரியாவுடன் தற்போது இணக்கமான உறவில் இருக்கிறோம்.

கிம் ஜாங் பற்றி வெளியே கசிந்திருக்கும் தகவல்கள் பொய் என நினைக்கிறேன். ஒருவேளை அவை உண்மையெனில், அவர் நலம்பெற பிரார்த்திக்கிறேன்” என்றார்.

கிம் ஜாங் உன்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர், பதவியில் இருக்கும் ஓர் அமெரிக்க அதிபர் வட கொரிய எல்லையைத் தாண்டி கிம்மை சந்தித்தவர் என ட்ரம்ப் - கிம் கால வரலாறுகள் உண்மையில் சற்று ஆரோக்கியமானவை.

2018-ல் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-னும். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்துக் கைகுலுக்கிக்கொண்டு இவர் அந்நாட்டு எல்லைக்குள்ளும், அவர் இந்நாட்டு எல்லைக்குள்ளும் கால் பதித்தது கொரியப் போர் முடிந்து 68 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த வரலாறு.

கிம் ஜாங் இல், கிம் சுல் சாங்
கிம் ஜாங் இல், கிம் சுல் சாங்

இத்தகைய சூழலில் தென் கொரிய அதிபரின் அரசியல் ஆலோசகரான மூன் சுங் இன், “கிம் நலமுடன் இருக்கிறார். வட கொரியாவின் வொன்சன் நகரில் கிம் ஏப்ரல் 13ம் தேதியிலிருந்து வசித்துவருகிறார்’’ எனப் பேசியிருப்பது அனைத்து சர்ச்சைகளுக்கும் தற்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. கிம் ஜாங் உன்னின் வரலாற்றில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை என்பதுதான் நிதர்சனம். மீடியா வெளிச்சம் இல்லாமல், 2014-ம் ஆண்டு ஒரு மாத காலம் காணாமல் போனவர் கிம் என்பது வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி.

டகொரியாவில் இதுவரை ஒருவருக்குக்கூட கொரோனா பாசிட்டிவ் இல்லை என்பது அந்நாட்டு ஊடகம் சமீபத்தில் தெரிவித்த செய்தி. ‘740 பேருக்கு சோதனை செய்தோம், எல்லாமே நெகட்டிவ். 25,139 பேரைத் தனிமைப்படுத்தியிருந்தோம். அவர்களுக்கும் தளர்வு கொடுத்தாயிற்று’ என்பதோடு முடித்துக்கொண்டது. கொரோனா பற்றிய சர்ச்சைகளுக்கு மறுப்பு தெரிவித்த வடகொரியா அரசு ‘சீனாவில் கொரோனாத் தொற்று பற்றிய செய்தி வெளியான உடனேயே நாங்கள் எல்லைகளை மூடி, சீனாவுடனான வணிகப்போக்குவரத்துகளையும் தடுத்துவிட்டோம்’ என்றது.
மர்ம தேசத்தின் அதிபர்!

அடுத்து யார்?

கிம் ஜாங் உன்னுக்குப் பிறகு அங்கே அதிபராக அரியணை ஏறப்போவது யார் என்ற உரையாடல்கள் இப்போதே இறக்கை கட்டத் தொடங்கிவிட்டன. ஒரு அண்ணன் கிம் ஜாங் நம், கொல்லப்பட்டுவிட்டார். பாரீஸில் படித்த அக்கா கிம் சுல் சாங் வடகொரியாவில் ராணுவப்பொறுப்பில் இருக்கிறார். இன்னொரு அண்ணன் கிம் ஜாங் சுல்-லை வாரிசு இல்லை என்று அப்பாவே அறிவித்துவிட அவர் கிட்டாரை எடுத்துக்கொண்டு சிங்கப்பூர், லண்டன் என்று கான்செர்ட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அடுத்தவர்தான் இப்போதைய அதிபர் கிம் ஜாங் உன்.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

ஐந்தாமவர், கிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ ஜாங். இவரும் அண்ணனுடன் சுவிட்சர்லாந்தில் படித்தவர். தந்தை மறைவின்போது கலங்கி நின்ற அண்ணனுக்கு ஆறுதலாக இருந்தது முதல் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையின்போதும் உடனிருப்பவர். இவர் அதிபராகலாம் என்பது எல்லாரின் எதிர்பார்ப்பு.

மர்ம தேசத்தின் அதிபர்!

ஒருவேளை இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது கிம் ஜாங் உன் பற்றிய மர்மங்கள் விலகியிருக்கலாம். அவரே ஊடகங்களில் வந்து பேசி மர்ம முடிச்சை அவிழ்க்கலாம். ஆனால் அதுவன்றி வேறெதுவும் என்றால் தன்னை இரும்புத் திரையிட்டு மறைத்துக்கொண்டிருந்த வடகொரியாவில் என்னென்ன மாற்றம் நிகழும் என்பதைப் பார்க்க மொத்த உலகமுமே காத்திருக்கிறது.