Published:Updated:

`கிம் ஜாங் உன்’ என்னவானார்? வடகொரியாவின் அடுத்த அதிபர் ஆவாரா சகோதரி கிம் யோ?

கிம் ஜாங்குடன் சகோதரி கிம் யோ

`கிம் ஜாங் உன்’ உடல் நிலை மோசமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கிம் ஜாங்கின் சகோதரி கையில் ஆட்சி நிர்வாகம் செல்லப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

`கிம் ஜாங் உன்’ என்னவானார்? வடகொரியாவின் அடுத்த அதிபர் ஆவாரா சகோதரி கிம் யோ?

`கிம் ஜாங் உன்’ உடல் நிலை மோசமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கிம் ஜாங்கின் சகோதரி கையில் ஆட்சி நிர்வாகம் செல்லப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

Published:Updated:
கிம் ஜாங்குடன் சகோதரி கிம் யோ

வடகொரியா!

ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனைகன் நடத்தி பங்காளி தென் கொரியா முதல் வல்லரசான அமெரிக்கா வரை எரிச்சலடைய வைத்த நாடு. வடகொரிய அதிபர் கிம் ஜாங், சர்வதேச அரசியலில் விளையாட்டுப் பிள்ளையாக பார்க்கப்படுபவர். உலகின் உண்மையான இரும்புத்திரை நாடு இப்போது மட்டுமல்ல, எப்போதுமே வடகொரியாதான். சீனாவிலிருந்து, கூட ரகசியங்களை கறந்து விடலாம். ஆனால், வடகொரியாவில் காளை மாட்டிலிருந்து பால் கறந்த கதைதான்! இந்தக் குட்டி நாட்டில் என்ன நடக்கிறது என்பதை உலக மக்களால் அறிந்துகொள்ளவே முடியாது. ஏன்... கொரோனா அங்கே பரவியிருக்கிறதா... இல்லையா என்பதைக்கூட உலகத்தால் அறிந்துகொள்ள முடியவில்லையே! அப்படியிருக்கையில், அண்மையில் திடீரென்று ஒரு செய்தி பரவியது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் (கிம் ஜாங்) உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக அந்தச் செய்தி சொன்னது. அதிகப்படியான சிகரெட் குடித்தல், உடல் பருமன் மற்றும் தொடர் பணிகளால் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் கிம்ஜாங்குக்கு இதய நோய் ஏற்பட்டதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின், உயிருக்கு அவர் போராடிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன.

வடகொரியாவை  தோற்றுவித்த கிம் இல் சுங்
வடகொரியாவை தோற்றுவித்த கிம் இல் சுங்

ஆனால், இந்தச் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. வடகொரிய அதிபர்களை மன்னர்களைபோலத்தான் அந்த நாட்டு மக்கள் பார்க்கிறார்கள். மன்னர் செயலுக்கு எந்த எதிர்ப்பும் அந்த நாட்டில் இருக்காது. கடவுள் போலத்தான் வடகொரிய மக்கள் தங்கள் தலைவரை பூஜிக்கின்றனர். வடகொரிய மக்கள் வறுமையில் உழன்று கொண்டிருந்தாலும், அதிபர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த விஸ்கியை அருந்திக்கொண்டிருப்பார். வடகொரிய அதிபருக்கு உலகின் பிரசித்திபெற்ற விஸ்கிகளை இறக்குமதி செய்து தர... அவரை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள தனியாக குழுவே இயங்கிக்கொண்டிருக்கும். உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். வடகொரியாவின் அடையாளம் இதுவே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த 1972- ம் ஆண்டு வடகொரியாவை உருவாக்கியவர் கிம் இல் சுங். இவர், தற்போதைய அதிபர் கிங் ஜாங்கின் தாத்தா. ஒவ்வொரு ஏப்ரல் 15-ம் தேதியும் நடைபெறும் கிம் இல் சுங்கின் பிறந்த தின விழாவை, வடகொரிய மக்கள் உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். அன்றைய தினம் அரசு விடுமுறை. வடகொரிய அதிபர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள். முதன்முறையாக, இந்த 15- ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. இதுதான், அவரின் உடல் நிலை குறித்த சந்தேகத்தை உலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ளது. கிம் ஜாங் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக சி.என்.என் செய்தி கூறுகிறது. பொதுவாகவே, வடகொரிய அதிபர்கள் அதிகமாக மது அருந்துபவர்களாகவும் சிகரெட் பிடிப்பவர்களாகவும் இருந்துள்ளனர். கிம் ஜாங்கின் தந்தை கிம் ஜாங் இல் 2011-ம் ஆண்டு இதே காரணத்தால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். ஐரோப்பிய கண்டத்தில் படித்துக்கொண்டிருந்த `கிம் ஜாங் உன்’ வடகொரியா திரும்பி அதிபராக பொறுப்பேற்றார்.

Kim Jong-un
Kim Jong-un

பதவியேற்ற பிறகு, ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனை என்று கிம் ஜாங் பிசியாக இருந்தார். அவ்வப்போது, அமெரிக்காவையும் சீண்டுவார். இந்த விளையாட்டுப்பிள்ளையிடம் மோதிக்கொண்டிருப்பதைக் காட்டிலும், கைக்குள் போட்டுக்கொள்வதே நல்லது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைத்தார். விளைவாக... கடந்த ஆண்டு தென்கொரியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட டொனால்டு ட்ரம்ப் அப்படியே வடகொரியாவுக்கும் விசிட் அடித்தார். தென்கொரிய , வடகொரிய எல்லைப்பகுதியில் ட்ரம்ப்பை கிம் ஜாங் சந்தித்துப் பேசினார். வடகொரியாவுக்கு விசிட் அடித்த முதல் அதிபர் என்ற பெருமையும் ட்ரம்ப்புக்குக் கிடைத்தது. இந்நிலையில் தற்போது, கிம்ஜாங்குக்கு உடல்நிலைக் கோளாறு இருந்தால், அதிலிருந்து மீண்டு வர ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எப்போதுமே, வடகொரியா குறித்து தென்கொரியாவிலிருந்துதான் முதலில் செய்திகள் கசியும். கிம் ஜாங்கின் உடல் நிலை குறித்தும் தென்கொரிய இணையதளம் ஒன்றுதான் முதலில் செய்தி வெளியிட்டது. ஆனால், பல நேரங்களில், வடகொரியா குறித்து தென்கொரியா வெளியிடும் செய்திகள் தவறாகவே இருந்துள்ளன; நிரூபிக்கப்பட்டும் உள்ளன. இதற்கு சிறிய உதாரணத்தையும் சொல்ல முடியும். கடந்த 2015-ம் ஆண்டு, வடகொரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹ்யோன் மரணதண்டனை விதிக்கப்பட்டு, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தென்கொரிய மீடியாக்கள் தெரிவித்தன. வடகொரியா அதிபர் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில், ஹ்யோன் உறங்கிக்கொண்டிருந்ததால், மரண தண்டனை விதிக்கப்பட்டதாக விளையாட்டுத்தனமாக காரணத்தையும் தென்கொரிய மீடியாக்கள் கூறின. ஆனால், சில மாதங்களில் ஹ்யோன் வடகொரியாவின் தொலைக்காட்சியில் தோன்றிப் பேசினார். வடகொரியாவைப் பொறுத்தவரையில், உயர்பதவியில் இருக்கக் கூடிய ஒருவர் குற்றமிழைத்து, மரணதண்டனை வழங்கப்பட்டால் அவரைப் பற்றிய அத்தனை ஆவணங்களும் அழிக்கப்பட்டு விடும். கொல்லப்பட்ட நபர் குறித்த வீடியோக்களும் அவர் குறித்தான பாஸிடிவான செய்திகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பத் தடை விதிக்கப்படும். ஆனால், ஹ்யோன் மீண்டும் தோன்றியதும் அந்தச் செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. மேற்கத்திய தாக்கம் நிறைந்த தென்கொரியா வேண்டுமென்றே வடகொரியா குறித்து அவதூறுகளைப் பரப்புகிறது என்று சொல்பவர்களும் உண்டு.

north korea map
north korea map
www.polgeonow.com

வடகொரியா குறித்தான செய்திகளை உலகில் எந்த உளவுதுறையும் அதிகாரபூர்வமாகவும் ஆதாரத்துடனும் வெளியிடவும் முடியாது. வடகொரியா குறித்த செய்திகளை அந்நாட்டு அரசு ஊடகம் மட்டுமே வெளியிடும். ஆனாலும் வடகொரியா தொடர்பான செய்திகள் பல சமயம் உலகளவில் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. கடந்த வருடம் நிகழ்ந்த கிம் ஜாங் -ட்ரம்ப் சந்திப்பு தோல்வியில் முடிந்ததால், இந்த சந்திப்பு ஏற்பட காரணமாக இருந்த வடகொரியாவின் 5 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் கிம் ஜாங் மொழிபெயர்ப்பாளராக இருந்தவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்தன. இதுவெல்லாம் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்தான். என்றாலும் சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற்ற செய்தியானது.

வட கொரியா பற்றிய தவறான புரிதலுக்கு அந்த நாட்டின் கடந்த கால வரலாறு விசித்திரமாகவும் வித்தியாசமாகவும் இருந்துள்ளதும் காரணம் ஆகும். வடகொரியாவை உருவாக்கிய கிம் இல் சுங் சோவியத் யூனியன் ஸ்டாலினின் தீவிர விசுவாசி. ரஷ்யாவில் ஸ்டாலின் தன் ஆட்சிக்கு எதிராக யார் திரும்பினாலும், சொந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தயவு தாட்சண்யம் பார்க்காமல் மரணதண்டனை அளிப்பார். அதே மாதிரியான சிந்தனை வடகொரியாவின் கிம் இல் சுங் தொடங்கி தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன் வரையில் அனைவருக்கும் இருக்கிறது என்பதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூற்று. அதனாலயே, வடகொரியா குறித்து வெளியாகும் பல செய்திகள் உறுதியாக நம்பமுடியாத போதும், உண்மையாக இருக்குமோ என்கிற எண்ணம் உலக மக்களிடத்தில் ஏற்படுகிறது.

தற்போதைய நிலையில் கிம் ஜாங் உடல் நிலை மோசமடைந்தால், வடகொரியாவின் அடுத்து அதிபராக யார் பதவியேற்பார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. வடகொரியாவில் வசிக்கும் 2.5 கோடி மக்களுக்கு கிம் ஜாங் கடவுள் போன்றவர். அதிபர் நல்லவரா கெட்டவரா... நமக்கு நன்மை செய்கிறாரா இல்லையா என்றெல்லாம் யோசிக்கும் மக்கள் வடகொரியர்கள் அல்லர். கிம் ஜாங் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், வடகொரியாவை தோற்றுவித்த கிம் இல் சுங்கின் ரத்தவழி பந்தங்களைத் தவிர மற்றவர்களை அதிபர்களாக வடகொரிய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 70 ஆண்டுக்காலம் இந்தக் குடும்பம்தான் வடகொரியாவை ஆண்டு வந்திருக்கிறது. மக்களின் அதிகப்படியான பாசமும், நம்பிக்கையும்தான் வட கொரிய அதிபர்களை எப்போதுமே சர்வாதிரிகளாக நடமாட வைத்துள்ளது. அதனால், கிம் ஜாங்கின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் அடுத்த வடகொரிய நிர்வாகியாகப் பதவியேற்க 90 சதவிகித வாய்ப்பு இருக்கிறது. வடகொரியாவின் நம்பர்- 2 இப்போது இவர்தான். சமீப காலமாக, கிங் ஜாங் தலைமையில் நடைபெறும் அனைத்து முக்கியக் கூட்டங்களிலும் சகோதரிக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்ததையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - கிம் ஜாங்கின் சந்திப்பின்போதும், கிம் யோ உடனிருந்தார்.

தென்கொரிய பிரதமருடன் கிம் யோ
தென்கொரிய பிரதமருடன் கிம் யோ

வடகொரிய அதிபர் கிம் ஜாங்குக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உண்டு. அவர்களின் பெயர் கிம் ஜாங் நம் மற்றும் கிம் ஜாங் சோல். சீனாவுக்கு உட்பட்ட மக்காவு பிராந்தியத்தில் வசித்துவந்த கிம் ஜாங் நம் , 2017-ம் ஆண்டு கோலாலம்பூர் விமான நிலையத்தில், ரகசிய ஏஜெண்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலையின் பின்னணியில் கிம் ஜாங் இருந்ததாகச் சொல்லப்பட்டது. மற்றொருவரான கிம் ஜாங் சோல் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. கிட்டார் கலைஞரான இவர், எரிக் கிளாப்டன் இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். கிம் ஜாங்குக்கு குழந்தைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களின் புகைப்படங்கள் கூட வெளியே வந்தது கிடையாது. குழந்தைகள் சிறு வயது கொண்டவர்களாக இருந்தால், ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால், வடகொரியாவின் நிர்வாகத்தை கிம் ஜாங்கின் சகோதரரி கிம் யோ - பார்ப்பார் என்பதே ஊகமாக இருக்கிறது. ஆனால், வடகொரிய மக்கள் இதுவரை பெண் அதிபரைக் கண்டதில்லை. அதனால், கிம் யோ ஜாங்கை ஏற்றுக் கொள்வார்களா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.